Published:Updated:

கறுப்பு பண விவகாரம்: உயர்மட்ட ஆய்வுக்குழு அமைப்பு

புதுடெல்லி, மே 28,2011

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு, உயர் மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ##~~##

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, கறுப்புப் பணத்தின் சட்டவிரோத பரிமாற்றத்தை தடுப்பது மற்றும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது குறித்த சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவது பற்றி ஆராயும்.

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது, அதை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சட்டங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளையும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது.

சட்ட விரோதமான வழிகளில் கறுப்பு பணம் உருவாவதை கட்டுப்படுத்த, தற்போதைய சட்டரீதியான வழிமுறைகளையும், நிர்வாக வழிமுறைகளையும் ஆய்வு செய்யும் இந்தக் குழு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, 6 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அழுத்தம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.