நவம்பர் 20: லியோ டால்ஸ்டாய் நினைவு தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு..
டால்ஸ்டாய் மாமனிதர்,தலை சிறந்த படைப்பாளி. வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் போக்கிரியாக,சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு போனார். கரடி ஒன்றினை வேட்டையாட துரத்தி அதன் ரத்தம் சிந்திய ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள் கருணை சுரந்தது பைபிள் அவரை செம்மைப்படுத்தியது. சக மனிதர்களின் மீதான அன்பு அவரின்
எழுத்தில் கசிந்து கொண்டே இருந்தது. என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்

பார்த்தில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை அரசும்,ஓயாமல் பொருள் தேடி அலையும் பேராசை எண்ணங்களும் எப்படி சிக்கலாக்கி விடுகின்றன என்று வெகு இயல்பாக சொல்லும் அவரின் எழுத்து உங்களை அப்படியே சொக்க வைக்கும்.
கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு போனார். அவற்றின் ஊழல்,போலியான பண்புகள் அவரை புரட்டின. இயேசுவை நான் நேரடியாக உணர்ந்து கொள்கிறேன் என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அனா கரீனினா நாவலை எழுதி பெரும்புகழ் பெற்றார் அவர் ; அதன் மூலம் நல்ல வருமானம். கூடவே ஏற்கனவே இருந்த சொத்துகள் வேறு எக்கச்சக்கம். நல்ல கிறிஸ்துவன் நிறைய சொத்துகள்
வைத்துக்கொள்ள கூடாது என்று உணர்ந்தார் அவர். ஏழை மக்களை,பிச்சைக்காரர்களை அழைத்தார். அள்ளி அள்ளி எல்லாருக்கும் கொடுத்தார். மனைவி சோபியா பல்லைக்கடித்து கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார். வன்முறையை விட்டுவிடுங்கள் என்று அழுத்தி எழுதிய அவரின்
தாக்கத்தில் காந்தி தன்னுடைய தென் ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.
டால்ஸ்டாய் ஒருமுறை ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரின் மூட்டையை தூக்க யாரோ எளியவர் என்று எண்ணி இவரை அழைக்க இவரும் அப்பணியை செவ்வனே செய்தார். அதற்கு பின் விஷயம் தெரிந்து அப்பெண்மணி பதறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ,”நான் உழைத்த உழைப்புக்கான பணம் அதை. அதை ஏன் நான் திருப்பி தரவேண்டும் ?” என்று கேட்டார்.
எழுத்தில் எது நல்ல எழுத்து என்பதில் இங்கே பலரின் வாதங்கள் பல்வேறு வகையில் அமையலாம் . ஆனால் சில எழுத்துக்கள் வாசிப்பதற்கு சுகம் தராவிட்டாலும் அதன் நோக்கத்தால் காலங்களை கடந்து நிற்கிறது டால்ஸ்டாய் கிட்டத்தட்ட தீவிர எழுத்து வாழ்க்கையை விட்டு விலகி இருபது
வருடங்களுக்கு பிறகு புத்துயிர்ப்பு எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார் . அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் . பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன் நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 மக்கள்.
டுகொபார்ஸ் இன மக்கள் அன்றைய மத வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தார்கள். முழுக்க சைவமாக இருந்த அவர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் ; அடித்தாலும் திருப்பி தாக்க

மாட்டார்கள். கூட்டுறவு வாழ்க்கை வாழ்ந்தார்கள் ; ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தபடியால் அர அடிபணிய சொன்னது. மாட்டேன் என்று
மவுனமாக சொன்னார்கள் இவர்கள். நாட்டை விட்டு கிளம்புங்கள் என்று அமைதியாக, ஆனால், அழுத்தமாக சொல்லிவிட்டது அரசு.
அவர்களை கனடா அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது .அதற்கான பயணச்செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடியதால் அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த நாவல் பலமுறை திருத்தப்பட்டு ,பல்வேறு குளறுபடிகளோடு பல்வேறு இடங்களில் வெளிவந்தது ,டால்ஸ்டாய் அவர்களின் டச் இதில் இல்லை என்று வேறு எல்லாரும் புலம்பினார்கள். எழுபத்தி எட்டு வயதில் விழித்துக்கொண்டு இருந்த நேரமெல்லாம் இந்த நாவலையே எழுதி தள்ளினார் டால்ஸ்டாய். ஒருவருட காலத்தில் கிடைத்த ராயல்டி தொகை அம்மக்களை காப்பாற்றியது. டால்ஸ்டாய் அவர்களின் நோக்கம் ஆனால் நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக அங்கே குடியேறினார்கள். அவர்கள் இப்பொழுது தங்களை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்து கொள்கிறார்கள். அவருக்கு எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிலை எழுப்பி அஞ்சலி செலுத்துகிறார்கள்
டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் ஆனா கரீனினா இறப்பதாக எழுதப்பட்ட அதே அச்டபோவ் ரயில்வே நிலையத்தில் நிமோனியா தாக்கி இறந்தார்.
டால்ஸ்டாயின் எழுத்தும்,டுகொபார்ஸ் மக்களும் அவரை என்றும் ஞாபகப்படுத்தி
கொண்டே இருப்பார்கள்.
பூ.கொ. சரவணன்