Published:Updated:

நல்லவரா... வல்லவரா... நம்மவரா?

ப.திருமாவேலன்படம் : என்.விவேக்

பிரீமியம் ஸ்டோரி
##~##

தேர்தலே தேவை இல்லை. பிரணாப் முகர்ஜிதான் குடியரசுத் தலைவராக வெல்லப்போகிறார். இதில் வேதனையான விநோதம், பிரணாப் முகர்ஜியே திறமைசாலி, அவரைவிட்டால் வேறு யாருமே இல்லை என்ற தோற்றத்தை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கி இருப்பதுதான். இதில் இன்னொரு கொடுமை பிரணாபின் இடது கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலது கையை பால் தாக்கரேவின் சிவசேனாவும் தூக்கிக்கொண்டு நிற்பது. பால் தாக்கரேவுக்கு கலாமைப் பிடிக்கவில்லை. பிரகாஷ் காரத் துக்கு மம்தா ஆகவில்லை. எனவே, எல்லா ருக்கும் பிடித்த பிள்ளையாக பிரணாப் முகர்ஜி ஆகிவிட்டார்.

பிரணாப் நல்லவரா?

இந்தியாவில் இதுவரை அமைந்த எந்த ஆட்சியின் மீதும் இவ்வளவு ஊழல் புகார்கள் படர்ந்ததே இல்லை. 'தூய்மையானவர்’ என்று பெயர் எடுத்த மன்மோகன் சிங்கின் ஆட்சி அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றது. பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீது அண்ணா ஹஜாரே குழு ஊழல் பட்டியலைப் பகிரங்கமாகத் தாக்கல் செய்தது. இவை அனைத்துமே புகார்கள்தான். விசாரணையின் மூலம் உண்மை என்று ஊர்ஜிதமாகவில்லை. ஆனால், இந்தப் புகார்களை சம்பந்தப்பட்ட மனிதர்கள் எதிர்கொண்ட விதம்தான், 'இவர்கள் மீது ஏதோ தவறு இருக்கிறது’ என்பதை உலகுக்குச் சொன்னது.

நல்லவரா... வல்லவரா... நம்மவரா?

பத்திரிகையாளர்கள் முன்னால் மக்கள் மன்றத்தில் இந்தப் புகார்கள் பரிமாறப்பட்டன. 'இது எதுவும் எங்களுக்கு வரவில்லை’ என்றது காங்கிரஸ். சோனியாவின் வீட்டுக்கும் அலுவலகத்துக்குமே நேரடியாக ஆட்கள் மூலம் கொண்டுபோய்க் கொடுத்தது அண்ணா ஹஜாரே குழு. அப்போதும் எந்த எதிர்வினையும் இல்லை. மந்திரிகளுக்கும் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். அப்படி பிரணாப் அலுவலகத்துக்கும் போனது. பெற்றுக்கொண்டதாகக் கையெழுத்து போட்டுள்ளார் அலுவலர். அதற்குப் பிறகும், 'புகார்களுக்கான ஆதாரங்கள் வரவே இல்லை’ என்று சாதித்துவரும் நல்லவர்தான் பிரணாப்.

ஹஜாரேவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் வைத்தது இரண்டு குற்றச்சாட்டுகள். பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரணாப் இருந்தபோது, நீர்முழ்கிக் கப்பல் கட்டுவதற்காக இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. 18,760 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் 4 சதவிகித கமிஷனை பிரணாப் பெற்றார் என்பது முதல் குற்றச்சாட்டு. வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக கஷ்டத்தில் இருந்த கானா நாட்டுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி ஏற்றுமதி ஆனது. இதில் முறைகேடு நடந்ததாக மத்திய அமைச்சர் கமல்நாத்துடன் சேர்த்து பிராணப் முகர்ஜி யையும் குற்றம்சாட்டியது கானா நாடு. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை பிரணாப் பிடிவாத மாகப் பதிலே சொல்ல மறுக்கிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் அம்பானி காலம் முதல் முகேஷ் அம்பானி காலம் வரை அவர் களின் அறிவிக்கப்படாத 'போர்டு ஆஃப் டைரக்டர்’ களில் ஒருவராக பிரணாப் செயல்பட்ட கதை, ஆங்கில ஏடுகளில் அங்குலம் அங்குலமாக அலசப்பட்டவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் நம்பிக்கை ஏற்படுத்திய செயல் பாடுகளில் ஒன்றாக இருக்கும் லோக்பால் ஆதரவுப் போராட்டங்களை நசுக்குவதற்கும் லோக்பால் வரப்போகிறது... வரப்போகிறது என்று பாவ்லா காட்டியே அதைப் பெட்டிக்குள் அடைத்துவைக்கவும் அரசுக்கு பிரணாபின் புத்திக்கூர்மைதான் பெரிதும் பயன்பட்டது. கொண்டுவரக் கூடிய லோக்பாலை மொத்தமாகத் தண்ணீர் ஊற்றி நீர்த்துப் போகச்செய்ய இவரது எழுத்துத் திறமையே கை கொடுத்தது. 'நாடாளுமன்றத்தின் உணர்வு’ என்ற தலைப்பிட்டு அவர் வெளியிட்ட அறிக்கை எந்த உணர்வும் அற்ற பிண்டமாகத்தான் இருந்தது.

'என்னதான் வலுவானதாக, திறமையானதாக இருந்தாலும், சுயேச்சையானதாகவும் சக்தி மிக்கதாகவும் இருந்தாலும், ஒரு சட்டம் போட்டால் ஊழல் முற்றிலும் ஒழிந்துபோய்விடும் என்று நம்புகிறவர்கள் இங்கே யாராவது இருக்கிறீர்களா?’ என்று 543 எம்.பி-க்கள் உள்ள அவையைப் பார்த்துக் கேட்டவர் பிரணாப். என்ன சொல்ல வருகிறார்? எந்தச் சட்டத்தின் மூலமாகவும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதால், சட்டமே போடாமல் இருந்துவிடுவேன் என்கிறாரா? இந்தியாவில் இனி நிறைவேற்றப்படப்போகும் எல்லா சட்டங்களையும் சரிபார்த்துக் கையெழுத்துப் போட கோப்புகள் இவர் முன்னால்தான் காத்திருக் கப்போகிறது. கஷ்ட காலம்.

கறுப்புப் பண விவகாரத்திலும் இவரது கறுப்பு முகம் வெளிச்சமானது. 'இந்தியா வின் தேசியப் பணம் திருடப்பட்டுவிட்டது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன ரெட்டியும் எஸ்.எஸ்.நிஜாரும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு சுமார் 22.5 லட்சம் கோடி ரூபாய் பணம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும் அவை சட்டவிரோதமாக மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு நுழைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விக்கிலீக்ஸ் இதில் சிறு பகுதியை மட்டும் வெளியிட்டு உள்ளது. இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கைகளையும் பிரணாப் எடுக்கவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ள தொகை மற்றும் நபர்களை அடையாளம் காட்டவும் முயற்சிக்கவில்லை. இது சம்பந்தமாகக் கேள்விகள் வந்தால், நாடாளுமன்றத்தில் முதல் ஆளாக எழுந்து நின்று சப்பைக்கட்டு கட்டுவார் பிரணாப்.

நல்லவரா... வல்லவரா... நம்மவரா?

1969-ம் ஆண்டு தேசிய அரசியலுக்கு வந்தவரின் தகுதியும் திறமையும் கெட்டவர் களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு மட்டுமே பயன்பட்டுள்ளது.

வல்லவரா பிரணாப்?

இந்தியப் பொருளாதாரத்துக்குக் கடந்த 10 ஆண்டுகளில் 2012-தான் மிக மோசமான ஆண்டு. அமைதியானவர், ஆர்ப்பாட்டம் செய்யாதவர், அதிக நிதானமானவர், துணிச்சல் முடிவுகளை எடுக்காதவர் என்றெல்லாம் பெயர் எடுத்த வாஜ்பாய்கூட பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் வளர்ச்சி சதவிகிதத்தை ஏறுமுகத்தில் வைத்திருந்தார். மெத்தப் படித்த பொருளாதார மேதையான மன்மோகன் பிரதமராகவும் அவரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்த பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராகவும் இருக்கும் காலத்தில்தான் பொருளாதாரம் அல்லாடுகிறது. எதைக் கேட்டாலும் ஐரோப்பியப் பொருளாதாரம், அமெரிக்க நெருக்கடி என்று பல்லாயிரம் மைல் கடந்து காரணம் தேடுவது இவர்களின் வாடிக்கை. சரிந்துபோன தொழிலும் உயர்ந்துபோன செலவும் எதனால் என்பதை இவர்கள் பார்க்க மறந்தார்கள். காரணம், நாட்டைவிட இவர்கள் இருவரும் தங்களது நாற்காலிகளைக் காக்கும் போராட்டத்தில்தான் மும்முரமாக இருந்தார்கள்.

பிரணாபின் நீதித் துறை அமைச்சகச் செயல்பாடுகளைவிட பிரணாப் - பிரதமர் மோதல், பிரணாப் - சோனியா முரண்பாடு, பிரணாப் - ப.சிதம்பரம் லடாய் காட்சிகள்தான் அதிகம் அரங்கேறின. இந்த மூவரைப் பற்றியே கவலைப்பட நேரம் போதாததால், வளர்ச்சி விகிதம், தொழில் மேம்பாடு, விலைவாசி உயர்வுபற்றிக் கவலைப்பட பிரணாபுக்கு நேரம் இல்லை.

அரசியலுக்கு வந்த காலம் முதல் பதவியில் இருந்த பாக்கியம் பிரணாப் போன்ற சிலருக்குத்தான் வாய்க்கும். நிதி அமைச்சர், திட்டக் குழுத் துணைத் தலைவர், வெளி விவகாரத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், மீண்டும் வெளி விவகாரத் துறை அமைச்சர், கடைசியில் நிதி அமைச்சர். எதில் இருந்தாலும் பிரதமர் நாற்காலியிலேயே குறியாக இருந்தார். இந்திரா வைத்திருந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அந்தக் காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும். அதில் நரசிம்ம ராவுக்கு அடுத்த இடத்தில் பிரணாப் இருந்தார். எனவே, இந்திரா இறந்தபோது தனக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்கும் என்று நினைத்தார். ராஜீவ் அதற்கு கத்திரி போட்டது மட்டும் அல்ல, பிரணாபுக்கு மந்திரி நாற்காலிகூடக் கிடைக்கவிடாமல் செய்தார்.

ராஜீவ் - சோனியாவுக்கு ஆகாதவர் என்பதாலேயே நரசிம்ம ராவ் தனக்குப் பக்கத்தில் திட்டக் குழுத் துணைத் தலைவராக வைத்துக்கொண்டார். 2004-ல் 'அரசியல் அறியாத’ மன்மோகனுக்குத் துணையாக இருக்கட்டுமே என்று பிரணாப் வந்தார். தன்னால் ஆசீர்வதிக் கப்பட்ட மன்மோகனுக்குக் கீழ் மந்திரி யாக இருந்தாக வேண்டிய அளவுக்கு இறங்கிப்போனார் பிரணாப். 'சமாளிக்க முடியாமல் தன்னிடம் தந்துவிடுவார் மன்மோகன்’ என்று நினைத்து ஏமாந் தார்.

2004-ல் இருந்தே காங்கிரஸ் சமரசங்கள் தன்னால்தான் முடியும், இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதே நான்தான் என்ற தோற்றத்தை பிரணாப் உருவாக்கிக்கொண்டே வந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த நல்ல பெயரையும் இவரது வல்லமை வாங்கித் தரவே இல்லை.

பிரணாப் நம்மவரா?

உலகத் தமிழ்ச் சமூகத்தில் துக்கமும் துயரமும் இன்னமும் துடைத்தெறியப்படாத காலகட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பதால் இந்தக் கேள்வி தவிர்க்க முடியாதது.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. ஈழப் பரப்பில் தமிழன் படு கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்த ஐ.நா. விசாரணையோ, சர்வதேச நீதிமன்ற விசாரணையோ தேவை இல்லை. உலகமே சேர்ந்து 'ஒன்றுமே நடக்கவில்லை’ என்று சொன்னாலும் தமிழன் மனசாட்சி எதிராகத் துடிக்கும். துயரம் சூழ்ந்த 2006-2009 காலகட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்த நான்கு ஆண்டுகளில் 25 தடவைகளுக்கு மேல் இலங்கைக்குப் போனார். ஒரு தடவை, ஒரே ஒரு தடவைகூட இலங்கையில் நடப்பதைக் கொடூரம் என்றோ, இதை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றோ சொல்லவே இல்லை. 'போரை நிறுத்தச் சொல்வது என்னுடைய வேலை அல்ல’ என்று சொன்னார். 'வன்னிப் பரப்புக்குள் 4 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தபோது '70 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள்’ என்று மகிந்த ராஜபக்ஷே சொன்ன பொய்க் கணக்கை இந்திய நாடாளுமன்றத்தில் சொன்னவர் பிரணாப். ஆட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் கொன்றவர் கணக்கை குறைத்துக் காட்டும் தந்திரத்துக்கு பிரணாப் உடந்தையாக நின்றவர்.

நல்லவரா... வல்லவரா... நம்மவரா?

2008-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் நாள் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், இந்திய அரசுக்கு ஒரு வாரக் கெடு விதித்தது. இலங்கையின் போரைத் தடுத்து நிறுத்தாவிட்டால் 40 எம்.பி-க்களும் ராஜினாமா செய்வார்கள் என்ற அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தை மட்டுமல்ல; இந்தியாவையே ஆட்டுவித்தது. அன்று அந்த 40 பேர் ராஜினாமா செய்திருந்தால், ஆட்டம் கண்டிருக்கும் மத்திய அரசு. இலங்கையின் 4 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

ஆனால், ஒரு வாரம் கழித்து சென்னை வந்த பிரணாப், கருணாநிதியைத் தனிமை யில் சந்தித்தார். அரசியல்ரீதியான அச்சுறுத்தல் அஸ்திரம் பாய்ச்சுவதில் பிரணாப் சமர்த்தர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  தீர்மானத்தைத் தனிப்பட்ட கூட்ட முடிவின்படி வாபஸ் வாங்கினார் கருணாநிதி. அன்று காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற பிரணாப் முகர்ஜிக்காகக் காவுகொடுக்கப்பட்டான் கடல் கடந்த தமிழன்.

இந்த உபகாரத்துக்கான பரிகாரம்தான் பிரணாபுக்குத் தரப்பட்டு இருக்கும் பதவி. செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வேண்டிய கட்டாயம் சோனியாவுக்கு உண்டு. தமிழனுக்கு உண்டா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு