Published:Updated:

டெசோவைக் குலைக்க சதியா?

பொங்கும் தி.மு.க.!

##~##

திடீரென, தமிழ் ஈழ முழக்கம் கொடுத்த கருணாநிதிக்கு ஏகப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்கள். ஆனால், அவற்றைப் புறந்தள்ளி விட்டு டெசோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் மாநாடு என்று நாள் குறித்தார் கருணாநிதி. அதன் பிறகு, தலைவர்களின் வருகை சிரமங் களைக் காரணம் காட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது. 

ஆகஸ்ட் 12 அன்று நடைபெற இருக் கும் டெசோ மாநாட்டை பிசுபிசுக்கச் செய்யும் வேலையில் சிலர் தீவிரமாக களம் இறங்கி உள்ளதாக தி.மு.க. வட்டாரம் வருத்தப்படுகிறது. ''80-களின் தொடக்கத்தில் ஈழம் குறித்த வலுவான தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது தி.மு.க-தான். இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்தபோது, கொத்துக்கொத்தாக ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதும், அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவதும் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக 1985-ல் மே 13 அன்று ஈழத் தமிழர் நலனுக்காக தலைவர் கலைஞரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதே,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டெசோவைக் குலைக்க சதியா?

தமிழீழ ஆதரவாளர் அமைப்பு என்ற டெசோ. அந்த சமயத்தில் சென்னையில் தங்கியிருந்த போராளித் தலைவர்களான ஆன்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டது ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு.

அந்த உத்தரவுக்கு எதிராகப் போராட் டத்தில் இறங்கிய டெசோ, 1985 ஆகஸ்ட் 25-ல் தமிழகத்தில் மிகப்பிரமாண்டமான கண்டனப் பேரணி நடத்தியது. லட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட அந்தப் பேரணியைத் தொடர்ந்து, ரயில் நிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தது. 'எந்த ஊரிலாவது ரயில் ஓடினால், அங்கே தமிழனே இல்லை என்று அர்த்தம்’ என்று கொந்தளித்தார் தலைவர். இந்த மாபெரும் எழுச்சிக்குப் பயந்து, நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இதுதான் டெசோவின் முதல் சாதனை. அதன்பிறகு, இலங்கைப் பிரச்னை அகில இந்தியக் கவனத்தைப் பெற்றதற்குக் காரணமும் டெசோதான்.

26 ஆண்டுகளுக்குப் பின்  டெசோவுக்கு மீண்டும் உயிர் ஊட்டி இருக்கிறார் கலைஞர். ஆனால், தமிழகத்தில் உள்ள சில ஈழ ஆதரவு தலைவர்கள், 'நாங்கள்தான் ஆரம்ப காலம் தொட்டு உங்களோடு இருக்கிறோம். கருணாநிதியை  நம்பாதீர்கள். மாநாட்டுக்கு வரவேண்டாம்’ என்று ஈழத் தலைவர்கள் மத்தியில் குட்டையைக் குழப்புகிறார்கள். தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்தால்தான், இவை அகில இந்திய கவனத்தைப் பெறும். ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் சொன்னதால்தான், மத்திய அரசு இறங்கி வந்தது. இந்த சாதகமான அம்சங்களை தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் நம்ப மறுப்பது தமிழர்களுக்குச் செய்யும் நல்ல காரியமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்'' என்கிறது தி.மு.க. வட்டாரம்!

இரா.சம்பந்தம் தலைமையிலான தமிழ் எம்.பி.கள் கூட்டமைப்பு, கஜேந்திரன் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வரவேற்புக் குழுவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கவனித்து வருகிறார். இந்த மாநாட்டை வெற்றிகரமாக எப்படியாவது நடத்தி முடிக்கத் துடிக்கிறார் கருணாநிதி.

- தி.கோபிவிஜய்