Published:Updated:

''காமராஜர் வீட்டுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினர் வரவில்லை!''

பெருந்தலைவர் பிறந்த நாள் வருத்தம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில், இந்த ஆண்டு நாடார் அமைப்புகளுக்கு சில வருத்தங்கள்.காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ம் தேதியை காங்கிரஸ் கட்சியும், நாடார் சமுதாய அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் விருதுநகரில் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் நாடார் சங்கப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டு, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் சொல்லிவைத்ததுபோல், காமராஜரைக் கண்டு கொள்ளாமல் போகவே, கொந்தளிப்பு நிலவுகிறது. 

மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் வின்சென்ட் எச்.பல்லாவை அழைத்துவந்து விழா நடத்தினார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கதாகூர். இன்னொரு பக்கம், நாடார் மகாஜன சங்கம், நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் ஆகியவை இணைந்து  கல்வித் திருவிழாவாகக் கொண்டாடி, ப்ளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி அசத்தினர். முன்பு எப்போதும் இல்லாதபடி, இந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

''காமராஜர் வீட்டுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினர் வரவில்லை!''

முக்கியக் கட்சிகள் கண்டுகொள்ளாதது குறித்து நாடார் மகாஜன சங்கப் பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜிடம் கேட்டோம். ''காமராஜர் தமிழகத்தை ஆண்ட ஒன்பது ஆண்டுகளில் 6,000 பள்ளிகளைத் தொடங்கி ஏழைகளுக்குக் கல்வி கிடைக்கச் செய்தார். வைகை அணை, ஆழியாறு அணை உள்ளிட்ட ஏராளமான அணைகள் கட்டினார். காங்கிரஸ் கட்சிக்கு என்று நிரந்தர வாக்கு வங்கியும் ஏற்படுத்தி இருந்தார். 1967-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காமராஜர் தோல்வி அடைந்தார். ஆனால் அப்போதும் காங்கிரஸ் கட்சி 30 சதவிகிதம் ஓட்டுகள் வாங்கியது. ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே ஐந்து சதவிகிதம் ஓட்டுக்கள்தான் கிடைத்து உள்ளது. காமராஜரை காங்கிரஸ் கட்சி மறந்து விட்டது. அதனால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளையே நம்பி இருக்கிறது.

''காமராஜர் வீட்டுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினர் வரவில்லை!''

கடந்த தி.மு.க. ஆட்சியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்துக் கொண்டாடியது. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு கடந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட ஆர்வம் காட்டவில்லை. அதனால்தான் நாடார் சமுதாய அமைப்பு கள் எல்லோரும் சேர்ந்து பிறந்தநாள் விழாவை கல்வித் திருவிழாவாக ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்துள்ளோம். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இப்போதுகூட, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் விருதுநகரில் காமராஜர் வீட்டில் உள்ள சிலைக்கு யாரும் மாலை அணி விக்கவில்லை. காமராஜரைப் பற்றி வாய்கிழியப் பேசும் அவர்களின் லட்சணம் இதுதான்.

''காமராஜர் வீட்டுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினர் வரவில்லை!''

அதனால்தான் எங்கள் பலத்தைக் காட்ட காமராஜர் பிறந்த நாள் விழாவை நாடார் சமுதாய அமைப்புகள் எடுத்து நடத்துகிறோம். இந்த ஆண்டு மட்டும் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். காமராஜர் பிறந்த நாள் விழாவில் எங்கள் பலத்தைக் காட்டி அனைத்து அரசியல் கட்சிகளையும் எங்களைத் தேடி வரச்செய்வோம்'' என்றார்.

ஊர் முழுவதும் கொண்டாட்டமும் குதூகலமாக இருந்தபோதும், தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் இரண்டும் காம ராஜரைப் புறக்கணித்து இருப்பது, அந்தப்பகுதி மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு