பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

எஸ்.தஜ்மீல் அஹமது, அதிராம்பட்டினம்.

கழுகார் பதில்கள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி விடுவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

கழுகார் பதில்கள்!
##~##

சி.பி.ஐ. இன்னமும் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கு மாயாவதி வழக்கு ஒரு சாட்சி. 2003-ம் ஆண்டு, வரு மானத்துக்கு அதிகமாக ஒரு கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் மாயாவதி என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில், இதுவரை ஒரே ஒரு குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேற்கொண்டு விசாரணையும் இல்லை, ஆதாரமும் திரட்டப்படவில்லை. இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு, அவர் தாக்கல் செய்யும் கணக்குப்படியே, 111 கோடி ரூபாய்.

ஆதாரம் எதுவுமே காட்டாத சி.பி.ஐ-யின் அலட்சியத்தை மாயாவதி சிக்கெனப் பிடித்துக் கொண்டார். உச்ச நீதிமன்றம் அவர் மீதான வழக்கையே ரத்து செய்துள்ளது. மாயாவதியின் தயவு இன்றைய மத்திய அரசுக்குத் தேவை. அந்த உள்நோக்கம்தான், சி.பி.ஐ-யின் சுணக்கத்துக்குக் காரணம் என்றால், அப்படி ஒரு விசாரணை அமைப்பு இருப்பதே வேஸ்ட்!

 முரு.சொ.தியாகராஜன், சின்ன சொக்கிக்குளம்.

கழுகார் பதில்கள்!

மனிதனை, மனிதனே கொல்வதற்கு ஆறாவது அறிவுதான் காரணமோ?

இதற்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை. ஐந்தறிவு படைத்த உயிரினங்கள்கூட சக உயிரி​னத்​தைக் கொல்லத்தான் செய்​கின்றன. ஆனால், மனிதன் செய்யும் கொலைக்குக் காரணம் போட்டியும் பொறாமையும்தான். 'பொறாமை என்பது கண்ணில் விழுந்த மணல் போல’ என்பார்கள். உறுத்திக்கொண்டே இருக்கும். போட்டுத் தள்ளிய பிறகுதான் அடங்கும். அறிவின் குணாம்சம் இதற்கு நேர் எதிரானது. 'மனிதனிடம் அறிவு தூங்கினால் மிருகவெறி விழித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்யும்’ என்கிறார் பிளேட்டோ!

 பி.எஸ்.பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருப்பது சரியா?

தார்மீக அடிப்படையில் தவறுதான். 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உதவினாரா என்பதில் குழப்பமற்ற முடிவு இதுவரை எட்டப்படவில்லை. அப்படி இருக்க, புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிவு செய்யும் குழுவுக்கு ப.சிதம்பரத்தை நியமிப்பது இப்போதைய வழக்கின் விசாரணையைப் பாதிக்கவே செய்யும். அவருக்கு இத்தகைய பொறுப்​​பைக் கொடுத்​தது மன்​மோகனின் தவறு. அதை ஏற்றது இவரின் பெருந்​தவறு!

 காந்தி லெனின், திருச்சி-26.

கழுகார் பதில்கள்!

'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை. நான் நிரபராதி’ - என்று திரும்பத் திரும்ப ஆ.ராசா கூறுகிறாரே?

குற்றம் சாட்டப்பட்டவர் அப்படித்தான் சொல்வார். குற்றம் நடந்துள்ளதா என்பதை விசாரிக்கும் நீதிபதி ஷைனி என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம்!

 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்!

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் மத்திய அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளை தி.மு.க. மீண்டும் பெறுமா?

டி.ஆர்.பாலு மற்றும் டி.எம்.செல்வகணபதி ஆகிய இருவரையும் அமைச்சர்​களாக்க நினைக்​கிறார் ஸ்டாலின். கே.பி.ராமலிங்​கத்துக்கு அழகிரியும், ஹெலன் டேவிட்சனுக்கு ராஜாத்தி அம்மாளும் ஆதரவு தருகிறார்கள். ஏற்கெனவே தயாநிதி, ஆ.ராசா வகித்த கேபினெட் அமைச்சர் பொறுப்புகளுக்கு இன்று இணை அமைச்சர்களாக இருக்கும் ஜெகத்ரட்சகன், நெப்போலியன் ஆகியோரைக் கொண்டுவரவும் திட்டம் இருக்கிறது. இவை அனைத்துமே அறிவாலயத்தில் நடப்பவை. டெல்லி ஏற்குமா என்பதுதான் தெரியவில்லை!

 புயல்.சிவக்குமார், பவித்திரமாணிக்கம்.

கழுகார் பதில்கள்!

'பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால், ராஜபக்ஷே சந்தோஷப்படுவார்’ என்கிறாரே பழ.நெடுமாறன்?

ராஜபக்ஷேவை எதிர்த்து சரத்ஃபொன்சேகா முதல் பேட்டி கொடுத்தார். அன்று மாலையே டெல்லியில் இருந்து பறந்துபோய் சமாதானப் படுத்தியவர் பிரணாப் முகர்ஜி. அப்போது அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் கூட அல்ல (எஸ்.எம்.கிருஷ்ணா வந்து விட்டார்!). இலங்கை ஜனாதிபதிக்கு ஒன்று என்றால் துடிக்கக்கூடிய ஒருவர் இந்திய ஜனாதிபதியானால், நல்லது என்றுதானே கொழும்பு குதூகலிக்கும்!

 போடி.எஸ்.சையதுமுகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்!

'இலங்கை ராணுவத்துக்கு, சென்னையில் பயிற்சி அளிப்பதை தமிழக காங்கிரஸும் எதிர்க்கிறது’ என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறி இருக்கிறாரே?

இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி தருவதை அனுமதித்தது காங்கிரஸ் அரசுதான் என்பதை ஞானதேசிகனுக்கு யாரா​வது ஞாபகப்படுத்​துங்கள். ஞான​தேசி கன் நியாயமானவராக இருந்​தால், இந்த அறிக்கையை இந்தியில் மொழிபெயர்த்து மன்மோகனுக்கும் சோனியா​வுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்!

 இரா.வளன், புனல்வாசல்.

கழுகார் பதில்கள்!

அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவர்களில் யாருக்கு முதல் இடம்?

யாரைச் சொல்வது? மழைக் காலத்தில் அணையின் நீர்மட்​டம் மாதிரி சொத்துக்கணக்கு கூடிக்கொண்டே இருக்கிறது பலருக்கு. இதில் ஒருவரை மட்டும் கண்டுபிடிப்​பது கஷ்டம்!

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்!

'என் ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் எதுவும் நடக்கவில்லை’ என்று மன்மோகன் கூறியுள்ளாரே?

இதுவரை, மன்மோகன் மௌன சாமியாராக இருந்தார். பேச ஆரம்பித்ததும் இப்படிப் பொய் சொல்கிறார். இதற்கு அவர் மௌனமாய் இருப்பதே நல்லது!

 வி.எஸ்.சேனாதிபதி, வேலூர்-9.

கழுகார் பதில்கள்!

அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனையை வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள், அரசு வேலைக்கு மட்டும் துடிப்பது ஏன்?

அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பது கௌரவக் குறைச்சல். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கேவலம். ஆனால், 'அரையணா காசுன்னாலும் அரசாங்கக் காசு’ என்ற பழமொழிக்கு இன்னும் உயிர் இருக்கிறதே. கல்யாண மார்க்கெட்டில் கவர்மென்ட் பதவிக்கு இன்னமும் மவுசு மங்காததுதான் காரணம்!

 அர்ஜுனன் ஜி., திருப்பூர்-7.

கழுகார் பதில்கள்!

நட்சத்திர விடுதிகளில் 24 மணி நேர பார் வசதிக்கு அரசு அனுமதி அளித்துள்ளதே?

யார் எப்படிக் கெட்டு அழிந்தாலும் பரவாயில்லை... கஜானா நிரம்பினால் போதும் என்று சாராயக் கம்பெ​னிகள் நினைக்கலாம். அரசாங்கமும் அப்படி நினைப்பது அநியாயம். குடி உருவாக்கப்போகும் சமூக நெருக்கடியை எத்தனை கோடிகளைக் கொண்டும் சமாளிக்க முடியாது!

 பி.ஜீ.தர்ஷினி, குடந்தை-1.

கழுகார் பதில்கள்!

'ஆங்கிலேயர்களே இந்த நாட்டைத் தொடர்ந்து ஆண்டு இருக்கணும் என்று எண்ணத் தோன்றுகிறது’ - என்கிறாரே விஜயகாந்த்?’

பிரிட்டிஷ் பார்லிமென்டில் நாக்கைத் துருத்தினால், என்ன தண்டனை தெரியுமா?

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு