Published:Updated:

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ
##~##

ழுகார் உள்ளே நுழைந்ததும், ''ப.சிதம்பரம்....'' என்று தொடங்கி வைத்தோம். ''அதற்கு நான் அப்புறம் வருகிறேன். கடந்த இதழில் நான் சொன்ன மதுரை ஆதீனம் - நித்தி மேட்டருக்கு முக்கியமான ஃபாலோ-அப் இருக்கிறது. அதை முத லில் சொல்கிறேன்'' என்று தொடங்கினார்! 

''மதுரை ஆதீனத்தின் கோபத்தையும், நித்தியின் பதவிக்கு ஆபத்து நெருங்கி விட்டதையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இன்னும் சில அதிரடி சம்பவங்கள் மதுரையில் நடக்கத் தொடங்கி விட்டன. மதுரை ஆதீனம் மதுரையிலும் நித்தியானந்தா கொடைக்கானலிலும்தான் இருக்கிறார்கள். நித்தியின் அழைப்பின் பேரில் கொடைக்கானல் சென்ற ஆதீனம், உடனே திரும்பி விட்டார். 'எனக்கு அங்கே குளிர் சரிப்படலை’ என்று காரணம் சொன்னார். ஆனால், இருவருக்குமான மனவருத்தம்தான் ஆதீனம் திரும்பியதற்குக் காரணம் என்று அப்போது சொன்னார்கள்!''

''இப்போதைய திருப்பங்களைச் சொல்லும்!''

''கடந்த 12-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென மதுரை வந்தார் நித்தியானந்தா. அருணகிரி​நாதரிடம் சில விளக்கங்களைப் பெறுவதற்காக வந்த நித்தியிடம், 'ஆதீனம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். எதுவானாலும் காலையில் பேசிக்கொள்ளலாம்’ என்று மடத்தில் இருந்த ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் 'சரி’ என்று கோபத்துடன் தூங்கப் போனாராம் நித்தி. உடல்நிலை காரணமாக சமீப காலமாக காலையில் தாமதமாக எழுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார் அருணகிரி. காலையில் அவர் எதுவும் சாப்பிடுவதும் கிடையாது என்பதால், 11 மணிக்குத்தான் குளியல் நடக்குமாம். அது வரை காத்திருக்கத் தயாராக இல்லை நித்தி. உடனடியாக அவரை எழச்சொல்லி பிரஷர் கொடுத்துள்ளார்கள். 'சந்நிதானம் சொன்னதாக பத்திரிகைகளில் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையா?’ என்று எடுத்த வுடனேயே கிடுக்கிப்பிடி போட்டாராம் நித்தி. 'சொன்னேன்... ஆனா, அப்படிச் சொல்லலை...’ என்று 'என்னத்தே’ கண்ணையா போல இழுத்தாராம் அருணகிரி!''

''விட மாட்டாரே நித்தி?''

''ம்! 'கலிஃபோர்னியா நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், என்னை ஆதீனமாக நியமித்​ததை மறுபரிசீலனை செய்யப்போவதாக நீங்கள் சொன்னதாகத் தகவல் வருகிறது. முதலில் அந்த வழக்கின் தன்மையைப் பற்றி முழுசாப் புரிஞ்சுக்கோங்க. அது என் மீதான வழக்கே கிடையாது. என்னோட தியான பீட பக்தர்களான கோபால் ஷீலம் ரெட்டி, பாபட்லால் சாவ்லா ஆகியோருக்கு இடையே நடக்கும் வழக்கு. இப்போது வந்திருப்பது முதல் கட்டத் தீர்ப்புதான். 19-ம் தேதி வரவிருக்கும் இறுதித் தீர்ப்பு எங்களுக்கு எதிரானதாக இருக்காது. அப்படியே வந்தாலும், அபராதம் மட்டும்தான் விதிப்பார்கள். எட்டு கோடி பணம் கட்டச் சொன்னாலும், நான் இப்போதே ரெடி. தயவு ​செய்து, என் மீதான தவறான எண்ணத்தை முதலில் நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று கெஞ்சி​னாராம். அருணகிரி குழப்பத்​துடனேயே தலையை ஆட்டி இருக்கிறார்.''

''வாக்கு​வாதம் வரை போனதா?''

''நித்தியானந்தா மூலமாக தனக்கு சில சிக்கல்கள் வருவதாக மதுரை ஆதீனம் வருந்துகிறார். நித்தியை, மதுரை இளைய ஆதீனமாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மதுரை மீனாட்சிப் பிள்ளைகள் அமைப்பின் சார்பில் மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர். இதைத் தொடர்ந்து ஆதீனத்துக்கும் நித்திக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை அருணகிரிநாதர் பெற்றிருந்தார். நித்தியானந்தாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன், அவர் கொடைக்கானலில் இருந்ததால் கொடுக்கப்படவில்லை. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 9-ம் தேதி அன்று நடந்தபோது, இருவருமே கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, வழக்கை 24-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, 'நித்தியானந்தாவுக்கு சம்மன் சார்பு செய்யப்படாததால் அதுகுறித்த அறிவிப்பை பத்திரிகை​களில் விளம்பரம் செய்ய வேண்டும்’ என்று மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு பற்றியும் அருணகிரிநாதர் மற்றும் தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார் நித்தி. அப்போது அருணகிரிநாதர், 'ஆதீனம் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து வெள்ளைக்காரன் காலத்திலேயே விலக்கு அளித்து விட்டார்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னாராம். 'சும்மா இருங்க சாமி. இப்போது இருக்கிற சூழலில் எனக்கு வாரன்ட் போட்டுவிட்டால் சங்கடம். அதனால், நம்முடைய சார்பில் வக்கீல்களை ஆஜராகச் சொல்வோம்’ என்றாராம் நித்தி. இப்படி சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்திய நித்தி, காலை 11 மணிக்கு மீண்டும் கொடைக்கானல் கிளம்பி விட்டார் என்கிறது தகவல்கள்!''

''ரகசியப் பயணமோ?''

''தன்னுடைய ரகசிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, கொடைக்கானல் திரும்பிய நித்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினம் மாலை பத்திரிகையிலேயே, நித்தி மதுரை வந்ததையும், தன்னுடன் ஆலோசனை செய்ததையும் பேட்டி​யாகக் கொடுத்திருந்தார் அருணகிரி. கடுப்பாகிப் போன நித்தியின் சீடர்கள், 'இந்த ஆளு வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டார். ஒரு பிரஸ் மீட்டில் வைத்தே, உங்களை இளைய ஆதீனப் பட்டத்தில் இருந்து நீக்கினாலும் நீக்குவார். அவர் மதுரையில் இருந்தால் வில்லங்கம்தான்’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வந்துவிடும்படி, அருணகிரிக்கு போனில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தாராம் நித்தி. 'அங்கே ரொம்பக் குளிருது. வேண்டாம்... வேண்டாம்’ என்றாராம் அருணகிரி. ஆனாலும், கடந்த 15-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆதீனத்தைக் கட்டாயப்படுத்தி கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றார்கள் நித்தியின் சீடர்கள். தன்னுடன் புறப்பட்ட வைஷ்ணவியை, 'வாடகை வசூல் நேரம். நீ இங்கேயே இரு’ என்று சொன்ன ஆதீனம், வைஷ்ணவியின் தங்கை கஸ்தூரியை மட்டும் உடன் அழைத்துச் சென்றுவிட்டாராம். மதுரை மடத்தில் இப்போது நித்தியின் சிஷ்யரான வினோத் மட்டுமே இருக்கிறார். மடத்துக்கு வருபவர்களிடம், 'இன்று அருணகிரியின் மேலாளர் விடுமுறை. வைஷ்ணவியும் இங்கு இல்லை. ஆதீனம் கொடைக்கானல் போயிருக்கிறார். எப்போது வருவார் என்று தெரியாது’ என்று கிளிப்பிள்ளை போல சொல்லி வருகிறார். மறுநாள் வந்தவர்களுக்கும் இதே பதில்தான் கிடைத்ததாம். 'அநேகமாக கலிஃபோர்னியா கோர்ட் தீர்ப்பு எப்படி என்று பார்த்து விட்டுத்தான், அருணகிரியை மதுரைக்கு அனுப்புவதா அல்லது கொடைக்கானலிலேயே தங்க​ வைப்பதா’ என்று நித்தி முடிவெடுப்பார் என்கிறார்கள்!''

''கொடைக்கானல் அரெஸ்ட்?''

''இதற்கிடையே, அருணகிரிநாதரைக் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுப்போடும் முடிவில் இருப்பதாகச் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார் மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் செயலாளர் ஜெகதல​பிரதாபன். கர்நாடக போலீஸுக்குப் பயந்து நித்தி தலைமறைவாக இருந்தபோது இதே​போன்ற வழக்கை தன் ஆதரவாளரை வைத்துத் தொடர்ந்தவர்தான் ஜெகதலபிரதாபன். எனவே, நித்தி - மதுரை ஆதீனம் மேட்டர் க்ளைமாக்ஸ் காட்சியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது!''

''கொடைக்கானலில் என்ன பண்ணுகிறார் நித்தி?''

''நித்தியானந்தா தங்கி இருக்கும் 'ஸ்டெர்லிங் ரிசார்ட்’ கொடைக்கானல் நகரில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்டுவம்பட்டி எனும் வனப்பகுதியில் இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்த ஹோட்டலில் மொத்தம் 60 அறைகள் உள்ளன. அத்தனையையும் இரண்டு மாதங்களுக்கு மொத்தமாக 'புக்’ பண்ணி இருக்கிறார் நித்தி. வெளிநபர்கள் யாரும் உள்ளே போக முடியாது என்பதால், அந்த ஹோட்டலே நித்தியின் தியான பீடம்போல் காட்சி அளிக்கிறது. அங்கே உள்ள சோர்ஸ் ஒருவரிடம் பேசினேன். 'சொரூபானந்தா உள்ளிட்டவர்கள், ஞாயிறு இரவே அருணகிரியை இங்கு அழைத்து வந்துவிட்டார்கள். இன்று காலையில் அவரை இங்கு உள்ள மினி மீட்டிங் ஹாலுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் நித்தி. உள்ளே நித்தியின் சிஷ்யர்களுக்கே அனுமதி இல்லை. அதனால், அங்கே என்ன பேசுகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை’ என்றார்கள். ஏற்கெனவே இருக்கிற பெண் சிஷ்யைகள் போதாது என்று இப்போது புதிதாக சில பெண்கள் அறிமுகமாகி இருப்பதாகவும் சொல்கிறார்கள்'' என்று சிரித்த கழுகார் சப்ஜெக்ட் மாறினார்.

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

''நீர் கேட்ட ப.சிதம்பரம் மேட்டருக்கு வருகிறேன். கருணாநிதியை ப.சிதம்பரம் சந்திப்பது ஒன்றும் ரகசியம் அல்ல. 'மரியாதை நிமித்தமான’ சந்திப்புக்களை இருவரும் அவ்வப்போது நடத்துவார்கள். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அது மொத்தமாகக் குறைந்து​ விட்டது. 'தமிழகத்துக்கு வரும் சிதம்பரம் தன்னை சந்திக்கவில்லை’ என்ற வருத்தம் கருணாநிதிக்கு இருந்தது. அது சிதம்பரம் காதுக்குச் சென்றாலும் கருணாநிதியைச் சந்திக்காமல் இருந்தார். கருணாநிதி ஒருமுறை டெல்லி சென்று ஸ்டார் ஹோட்​டல் ஒன்றில் தங்கி இருந்தார். அப்போது அந்த ஹோட்​டலுக்கு வேறு ஒரு சந்திப்​புக்​காகச் சென்ற ப.சிதம்​பரம், கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பி வந்ததும் நடந்தது. அதனால் கோபம் அதிகமாகி இருந்தது!''

''அந்தக் கோபத்தை அடக்கத்​தான் சென்னை வந்தாரா சிதம்பரம்?''

''இல்லை. விஷயம் அதைவிட சீரியஸ். கருணாநிதி மிகப்பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு இருக்கும் டெசோ மாநாட்டை எப்படியாவது தள்ளிப்போட நினைக்கிறதாம் மத்திய அரசு. அதற்கான தாக்கீதை சிதம்பரம் எடுத்துவந்ததாகச் சொல்கிறார்கள். 'இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் பேசுவது என்பது வேறு... அதற்காக இலங்கையைப் பிரித்து தமிழ்ஈழம் அமைக்க வேண்டும் என்று பேசுவது வேறு. ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று, மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு பிரதானக் கட்சியே பேசலாமா? அதற்காக மாநாடு நடத்தலாமா?’ என்று பிரதமர் மன்மோகன் நினைக்கிறாராம். அதுபற்றிப் பேசுவதற்குத்தான் சிதம்பரம் அனுப்பப்பட்டாராம். 'நான் இந்தியப் பிரச்னை குறித்து முரண்பாடான கருத்தைச் சொல்லவில்லை. இலங்கை விவகாரத்தில், தனி நாட்டைத் தவிர வேறு வழி இல்லை என்றுதானே சொல்கிறேன்’ என்ற அர்த்தத்தில் கருணாநிதி பதில் சொல்கிறாராம். 'இது தி.மு.க-வின் தனிப்பட்ட கருத்து.’ என்றாராம் கருணாநிதி. ஆனால் அதை சிதம்பரம் ஏற்கவில்லை. 'இப்படி ஒரு மாநாடு நடப்பதையே டெல்லி விரும்பவில்லை’ என்றாராம் சிதம்பரம். 'அனைத்து ஏற்பாடுகளும் செய்து ​விட்டேன்’ என்றாராம் கருணாநிதி. ஆனால், மத்திய அரசின் முடிவு இதுதான் என்று கறாராகச் சொல்லிச் சென்று விட்டாராம் சிதம்​பரம்.''

''அப்படியா?''

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

''தனித் தமிழ்ஈழம் என்று பேசுவதும், அதற்கு அனைத்து நாடுகளில் இருந்தும் தமிழர் பிரதிநிதிகளை வரவழைக்க இருப்பதும் தவறான முன்னுதாரணம் என்று நினைக்கிறது டெல்லி. அதைச் சொல்வதற்காகத்தான் ப.சிதம்பரத்தின் வருகை அமைந்​ததாகச் சொல்​கிறார்கள். இங்குள்ள மத்திய புலனாய்வுத் துறையினர் டெ​சோ மாநாடு குறித்த தகவல்​களை மத்திய அரசுக்கு தொ​டர்ந்து அனுப்பி​வந்தார்கள். இதைப் பார்த்து கொந்தளித்த மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு அறிக்கையை டெல்லியில் இருந்து கொடுத்தது. 'தமிழர்களுக்காக தனிநாடு (தனிஈழம்) என்பதை நோக்கமாகக்கொண்ட எல்.டி.டி-யின் செயல்பாடுகளின் தாக்கம் இந்தியப் பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி... அது சட்டத்​துக்குப் புறம்பான செயல்களுக்கு வழிவகுப்​பதுடன் இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்று எச்சரிக்கை செய்கிறது அந்த அறிக்கை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால், கடந்த மே மாதமே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டும். மாறாக இரண்டு மாதங்கள் கழித்து இந்த அறிக்கையைத் தூசிதட்டி வெளியிட வேண்டிய அவசியம், டெசோ மாநாட்டைத் தடுப்பதற்குத்தான்.''

''அப்படியா?''

''ஞாயிறு மதியம் 4 மணிக்கு சிதம்​பரம் வருகிறார் என்பதே ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்​துக்கு முன்னதாகத்தான் தனது வீட்டுக்கே தகவல் சொல்லி இருக்கிறார் ப.சி. பொதுவாக விமான நிலையத்துக்கு தன்னை வரவேற்க வருபவர்களை தனது காரில் சிதம்பரம் ஏற்றிக்கொள்வார். ஆனால் இம்முறை, 'யாரும் ஏற வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத் தனியாக தனது வீட்டுக்கு வந்தார். அங் கிருந்தபடி, கருணாநிதியைச் சந்திக்க சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார். இரவு வேறு எந்தச் சந்திப்பும் இல்லாமல் மீண்டும் டெல்லிக்குப் பறந்துவிட்டார் சிதம்பரம்.''

''ம்!''

''ஆனால், தி.மு.க. வட்டாரம் என்ன சொல்கிறது தெரியுமா? 'துணை ஜனாதிபதி வேட்பாளராக அன்சாரி அறிவிக்கப்பட்டதற்கு அதிகாரப்​பூர்வமாக ஒப்புதல் வாங்கத்தான் சிதம்பரம் வந்தார்’ என்கிறார்கள். துணை ஜனாதிபதிக்கு ஒப்புதல் என்பது, அறிவிப்பதற்கு முன்பே வாங்குவதுதானே பொருத்தமானது. ஆனால், இந்தச் சந்திப்புக்கு முன்பே அன்சாரி பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும், இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியோ புகைப்படமோ, 'முரசொலி’யில் வரவில்லை. 'அன்சாரி பெயரைச் சொல்வதற்கான ஒப்புதல் என்றால் கருணாநிதி அதைச் சந்தோஷமாகச் சொல்லிவிடுவார் அல்லவா’ என்ற லாஜிக் இடிக்கிறதே!

ஆக, இந்த டெசோ மாநாடு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வைக்கும் ஆசிட் டெஸ்ட் என்று நினைத்தாராம் கருணாநிதி. சிதம்பரம் சென்ற பிறகு ஆழ்ந்த யோசனையில் இருந்த கருணாநிதி, 'தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வைத்தால்தானே தவறு. அந்தக் கோரிக்கையை வைக்காமல் இலங்கைத் தமிழர் நல்வாழ்வு என்று பேசினால் என்ன?’ என்று யோசித்தாராம். அதனால்தான் திங்கள் கிழமை காலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். 'தனித் தமிழ் ஈழம் என்பது தீர்மானமாக இருக்காது’ என்றும் சொன்னார். 'தனி ஈழத்துக்காகப் போராட்டமோ கிளர்ச்சிகளோ எதுவும் இப்போது இல்லை. இந்த மாநாட்டின் தலைப்பே ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு மாநாடு’ என்றும் அறிவித்து விட்டார் கருணாநிதி. 'டெசோ’ என்றாலே  'தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு’ (Tamil Eelam Supporters Organization) என்பதுதான். தமிழ் ஈழத்துக்கான தீர்மானமே அதில் இல்லை என்றால் புஸ் ஆனது மாதிரிதான்!'' என்று கிளம்பினார் கழுகார்!

படம்: சு.குமரேசன்

அன்புமணி கொடுத்த ஆதாரம்!

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இன்டக்ஸ் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸை முதல் குற்றவாளியாக சி.பி.ஐ. சேர்த்தது. அந்த வழக்கில் கடந்த வாரம் சி.பி.ஐ. நீதிமன்றத்திலும் ஆஜரானார் அன்புமணி. இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணம் ஒன்றை அன்புமணி தரப்பில் தாக்கல் செய்திருக்கிறார்கள். அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்ரமணியம் என்பவர், சுப்ரீம் கோர்ட்டுக்கு எழுதிய கடிதம் அது. அந்தக் கடிதத்தில், 'இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது கல்லூரியின் உள்கட்டமைப்பு சரியாக இருக்கிறது. பணிபுரியும் பேராசிரியர்கள், மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அங்கே உள்ள மிகச்சிறிய குறைபாடுகளைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற என்னுடைய கோரிக்கைக்கு, 26 செப்டம்பர் 2008-ல் வழங்கப்பட்ட அனுமதியில் குறுக்கிடக் கூடாது என்று நீதிமன்றமும் சுட்டிக் காட்டி இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ''வழக்கிலிருந்து விடுபட இது முக்கியமான ஆதாரம்'' என்று அன்புமணி வட்டாரம் சொல்ல ஆரம்பித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல், ''லாலு, மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரிடம் எல்லாம், எப்படி பழி வாங்கும் நோக்கத்தில் காங்கிரஸ் நடந்து கொண்டதோ...அதே நோக்கத்தோடுதான் அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியோடு பா.ம.க. கூட்டணி வைக்க வேண்டும் என்று சோனியா நினைக்கிறார். கருணாநிதி மூலம் அதற்காக நூல் விட்டும் பார்த்தார். கருணாநிதியோ, 'அவங்க வர வாய்ப்பே இல்லை. தனித்துப் போட்டி என்பதில் உறுதியா இருக்காங்க’ என்று சொல்லி விட்டார். அதன் பிறகுதான் எங்களைப் பணிய வைப்பதற்காக இப்படி பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கிறாங்க'' என்று அரசியல் உள்நோக்கம் கற்பித்து பேசி கொண்டிருக்கிறது பா.ம.க. வட்டாரம்.

 'ஸ்மைல் ப்ளீஸ்!’

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

கொடநாடு கடந்த வாரம் குதூகலத்தில் மிதந்தது. எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அம்மாவுடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள ரொம்ப நாள் ஆசையாம். இதை நிறைவேற்றச் சொன்னாராம் முதல்வர். 850 தொழிலாளர்களும் ஒன்பது குரூப்களாக முதல்வருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்பட வைபவத்தில் முதல்வர் மிகவும் குஷியாக இருந்ததுதான் ஹைலைட். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட முதல்வர், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கினாராம்.

 எங்களுக்கும் வந்திருக்கே!

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ

கடந்த வாரம் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப், ஆதரவு கேட்டு தனக்கு எழுதிய கடிதத்தை எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் பெருமையாகக் காண்பித்து உள்ளார். அப்போது, அனைத்து எம்.எல்.ஏ-க்களும், 'எங்களுக்கும் லெட்டர் வந்திருக்கு கேப்டன்’ என்று ஆளுக்கொரு கடிதத்தைக் காண்பிக்க... டென்ஷன் ஆகி விட்டாராம் கேப்டன்!

• அமைச்சருக்கு அவர் பி.ஏ-வும் இல்லை, அரசு அதிகாரியும் இல்லை. ஆனால், தமிழகத்தின் மிக முக்கியமான  துறையின் அமைச்சர் வீட்டில் இருக்கும் அந்தப் புள்ளி வைப்பதுதான் சட்டமாம். அமைச்சரின் மனைவிக்கு உறவினர் என்பதால் அப்படி ஓர் ஆட்டமாம். தாங்க முடியாமல் தவிக்கிறார்கள் பொதுவான அதிகாரிகள்!

• பத்திரப் பதிவுத் துறையில் இருக்கும் சப் ரிஜிஸ்தார்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்களுக்கு அதி ரடியாக டிரான்ஸ்ஃபர். இந்த மாறுதலுக்குப் பின்னால் லட்சக்கணக்கில் பணம் விளையாடி இருக்கிறதாம். அமைச்சருக்கு நெருக்கமான உறவையும் அதிகாரி ஒருவரையும் பிடித்தால்தான் காரியம் நடக்குமாம்!

• கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகம் அரசியல் சித்து விளையாட்டில் சிக்கித் தவிக்கிறது. அதன் கட்டுமானத்தில் தொடர்புடைய கம்பெனி இப்போது ஆளும் கட்சியுடன் ஐக்கியமாகி விட்டதாம். ஆளும் கட்சிக்கு நெருக்கமான டி.வி-க்கு முக்கிய ஸ்பான்ஸரே அந்த நிறுவனம்தானாம்!

• சென்னையில் உள்ள தென்மண்டல சி.பி.ஐ-யின் அலுவலகத்தின் இணை இயக்குனராக கடந்த எட்டரை ஆண்டுகளாக இருப்பவர் அசோக்குமார். கூடுதல் டி.ஜி.பி-யான அவரது மத்திய அரசுப்பணி முடிவுக்கு வருவதால், மாநில அரசுப் பணிக்கு விரைவில் திரும்புகிறார். லஞ்ச ஒழிப்புத் துறை அல்லது உளவுத்துறையில் அசோக்குமாருக்கு ஸீட் கன்ஃபார்ம். அதேபோல், காலி ஆகப்போகும் சி.பி.ஐ-யின் இணை இயக்குனர் பதவிக்கு தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளான கந்தசாமி, அருணாசலம் மற்றும் ரவீந்திர குமார ரெட்டி ஆகியோர் ரேஸில் இருக்கிறார்களாம்.

• மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கடந்த ஒரு மாதமாகவே அடிக்கடி உடல்நிலை சரியில்லை. தூக்கத்தில் எழுதல், கடுமையான வயிற்றுவலி, பிதற்றுதல், தன்னை யாரோ பின்தொடர்வது போன்ற பிரமை என்று அவதிப்பட்டு வந்தாராம். ஒரு கட்டத்தில் அவரின் எதிரிகள் பில்லி சூன்யம் வைத்து விட்டதாகப் பிதற்ற ஆரம்பித்து விட்டாராம். பிரபல மந்திரவாதி ஒருவரைப் பிடித்து வந்து பிரமாண்ட பூஜைகள் நடத்தி 'அந்த’ சூன்யத்தை எடுத்தார்களாம்.

மிஸ்டர் கழுகு: டெசோ...! புஸ்ஸ்ஸ்சோ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு