Published:Updated:

`ஸ்டாலின் வழியில் மக்களுக்கு சேவை செய்வேன்!'- பா.ம.க-வை எதிர்த்து வென்ற சேலம் பட்டதாரி இளம்பெண்

ப்ரீத்தி மோகன்
ப்ரீத்தி மோகன்

அயோத்தியாபட்டினம் பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலராக பட்டதாரிப் பெண் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்ட பட்டதாரி இளம்பெண் பிரீத்தி மோகன் வெற்றி பெற்றுள்ளார்.

பிரீத்தி மோகனிடம் பேசினோம். '' நான் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துவருகிறேன். எனக்கு 22 வயதாகிறது. என்னுடைய மாமனார் சக்கரவர்த்தி, தி.மு.க-வில் ஆரம்ப காலம் முதல் இருந்துவருகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வில் பொறுப்பில் இருக்கிறார்.

எண்ணிக்கை
எண்ணிக்கை

அவரைப் பார்த்து எனக்கும் தி.மு.க மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் நானும் தி.மு.க-வில் இணைந்து கட்சிப் பணிகளைச் செய்துவருகிறேன். இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வந்ததையடுத்து, அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்தில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டேன். பொதுமக்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்தத் தேர்தலில் தி.மு.க, பா.ம.க மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 5 பேர் போட்டியிட்டோம். மொத்தம் 4,560 வாக்குகள் பதிவாகின. இதில் நான் 2,203 வாக்குகளும் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க-வைச் சேர்ந்த பூங்கோதை 1,150 வாக்குகளும் பெற்றார். நான் 1,053 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். தி.மு.க தலைவர் தளபதியை எல்லாத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர் வழியில் நானும் மக்களுக்கு சேவை செய்வேன்.

மக்களின் அனைத்துத் தேவைகளையும் அறிந்து, அதற்கான வசதிகளைச் செய்துகொடுப்பேன். இந்த ஊராட்சியில், கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க அரசு எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்துகொடுக்கவில்லை. அவர்களைப் போல இல்லாமல், உடனுக்குடன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பேன்'' என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு