Published:Updated:

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!
##~##

''என்ன... புதுச் சிறகுடன் மாணவர் படை புறப்பட்டு விட்டதா? அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!'' என்ற பூத்தூவலுடன் கழுகார் பிரசன்னம்! நாம் புன்னகையுடன் நன்றி தெரிவித்தோம். 

''ஆளும் கட்சி வட்டாரத்தில் சிலர் ஆவலுடன் எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போனதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம்தான். ஆனாலும், சுதந்திரதினக் கொடியேற்றம் வரைக்கும் எந்த மாற்றங்களும் இல்லை என்பதில் பலருக்கு மெகா நிம்மதி!'' என்று ஆரம்பித்தார் கழுகார்!

''முதல்வர் மீண்டும் சென்னை விஜயம் எப்போதாம்?''

''அனேகமாக ஆகஸ்ட் 12 அல்லது 13-ம் தேதியாக இருக்கலாம் என்கிறார்கள். அதுவரை கொடநாடு தான். நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல் கொடநாடு வியூபாயின்ட் அருகே பேங்க் ஆஃப் இண்டியாவின் ஏ.டி.எம்-மை முதல்வர் திறந்து வைக்கிறார். வரும் 25-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கொடநாடு பங்களாவில் முதல்வர் கவலை இன்றி ஓய்வெடுக்கிறார் என்கிற நையாண்டி விமர்சனத்தைத் தகர்க்கவாம் இந்த விழா. கொடநாடு பங்களாவின் நுழைவு வாயிலில் தோரணம் அமைக்கப்படுகிறது. பங்களாவில் இருந்து மேடை வரையிலான குறுகிய தூரத்துக்குள் 19 வகையான நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது மாவட்டக் கழகத்தின் பொறுப்பு. மேடை அமைக்கும் பொறுப்பு அந்த வங்கிக்குத் தரப்பட்டு உள்ளது. 4,000 நாற்காலிகள், திடீரென மழை கொட்டினால் பார்வையாளர்கள் ஒதுங்கி நிற்க தற்காலிகக் கூடாரம் என்று ஏற்பாடு தூள் பறக்கிறது. புதன் அன்று பிற்பகல் 2 மணியளவில் ராகு காலம் முடிந்த பின் முதல்வர் ஏ.டி.எம்-மைத் திறந்து வைக்கிறார். இதற்காக சுமார் 12 மணியளவில் கொடநாடு வியூ பாயின்ட்டை நோக்கிய சாலையில், பங்களாவுக்கு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் முன்பே போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும். அதன்பிறகு. இரண்டே இரண்டு வாகனங்களின் மூலமாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பார்வையாளர்கள் கூட்டிச் செல்லப்படுவார்கள். ஏ.டி.எம். திறப்பு வைபவத்துடன் அந்த வங்கி சார்பாக 106 நபர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் ஆறு பேரும் தன் கையாலேயே கடன் உதவியை வழங்குகிறார் முதல்வர்!''

''என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொல்லாமல் சொல்வாரோ..!''

''விழா எப்படி நடத்தப்பட வேண்டும், வரவேற்பு அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல உத்தரவு​களையும், ஐடியாக்களையும் சசிகலா வழங்கியதாகத் தகவல். கடந்த சனிக் கிழமை மாலை 5.30 மணியளவில் திடீர் விசிட்டாக பங்களாவில் இருந்து காரில் கிளம்பிய சசி, விழா மேடை வரையில் வந்து பார்வையிட்டு சென்றிருக்கிறார். தோரணங்கள், நடனக் குழு நிற்கும் பகுதிகள் போன்றவற்றை அப்சர்வ் செய்து கொள்ள வசதியாக மிக மெதுவாக ஊர்ந்து சென்றிருக்கிறது அவரது வாகனம்.  வாகனத்தில் அமர்ந்தபடியே தேஜஸான முகத்துடன் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். சின்னம்மாவின் திடீர் விசிட்டை எதிர்பாராத அ.தி.மு.க. நிர்வாகிகள், சட்டென்று கவனித்து குனிந்து, வளைந்து வணக்கம் வைத்திருக்கின்றனர். அவரும் புன்னகை மாறாமல், பழைய கம்பீரத்தோடு பதில் மரியாதை செய்திருக்கிறார். அதே காரின் பின் இருக்கையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் இருந்தாராம்.  கம்பளி ஆடையில் பொதிந்திருந்த அவர் யாரென்று புரியாமல் தலையை சொறிந்தவர்கள், அவருக்கும் சேர்த்தே வணக்கம் வைத்திருக்கிறார்கள்.''

''இதிலெல்லாம் ரிஸ்க் எடுக்க முடியுமா?''

''இந்த விழா மூலமாக நீலகிரி மாவட்ட அ.தி.மு.க-வில் ஒரு புதிய நபர் முக்கிய இடத்துக்கு வருகிறார் என்பது ஹாட் டாக். அந்தக் கட்சியின் மாநில விவசாய அணியின் துணைச் செயலாளராக இருப்பவர் பாரதியார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன்​ நீலகிரியில் செட்டிலானவர். அமைச்சர் கோகுல இந்திரா மூலமாக முதல்வரின் கவனத்துக்கு வந்தவர். 'இட்ட கட்ட​ளையை துல்லியமாக முடிப்பார்’ என்று இவருக்கு முதல்வரிடமே ஒரு சர்டிஃபிகேட் உண்டு. காரணம் கடந்த ஆட்சி நேரத்தில் மேல்சபை கொண்டுவர கருணாநிதி முயற்சித்தபோது சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கும் அஸைன்மென்ட் இவரிடம் வழங்கப்பட்டது. அதை முடித்துக் கொடுத்தார். அதேபோல் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளரான வாப்புவுக்கு நாலாவது இடமே என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது. எனவே அவரை ஜெயிக்க வைக்கவேண்டிய பொறுப்பு பாரதியாரிடம் கொடுக்கப்பட, அதையும் கச்சிதமாக நிறைவேற்றி கொடுத்தாராம். அத்தகைய நல்லபிள்ளை பாரதியாருக்கு எஸ்டேட்டில் ஏக சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடவே இந்த ஏ.டி.எம். திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யும் விஷயத்திலும் பெரும் பொறுப்பு இவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.''

''சரிந்த செங்கோட்டையன் எப்படி இருக்​கிறார்?''

''அவருக்கென்ன... சட்டென்று சுதாரித்து உற்சாகமாகத்தான் இருக்கிறார். பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தலைவி போனில் பேசினாராம். 'அது ஒன்று போதும் அண்ணனுக்கு!’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அந்த உற்சாகத்தில் தான் 'அனுமன் இதயத்தைத் திறந்து ஸ்ரீராமரைக் காட்டியதைப் போல நான் எப்போதும் அம்மாவை இதயத்தில் தாங்கியவன்’ என்று கோபியில் நடந்த விழாவில் மைக் பிடித்து பேசும் அளவுக்கு செங்கோட்டையன் தெம்பாகவே இருக்கிறார்'' என்ற கழுகார்... தி.மு.க. வட்டாரத்துக்கு திசை மாறினார்!

''அ.தி.மு.க. வட்டாரத்தில் மந்திரி சபை மாற்​றத்தை எதிர்பார்ப்பது மாதிரியே இப்போது தி.மு.க. வட்டா​ரத்திலும் மந்திரிசபை  எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது... இது மத்திய மந்திரி சபை!''

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

''ஓ!''

''ஏற்கெனவே ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இரு கேபினெட் அமைச்சர்கள் பதவி விலகிய பிறகு அதற்கான மாற்று மந்திரிகளைக் கேட்டு வாங்குவதில் கருணாநிதி தயக்கம் காட்டி வந்தார். இதற்கு இரண்டு காரணங்கள். காங்கிரஸ் மீதான கோபம் ஒன்று. மந்திரி சபையில் இடம் வாங்கினாலும், அதை குடும்பத்துக்குள் சிக்கல் வராமல் யாருக்குக் கொடுப்பது என்பதில் இருந்த குழப்பம்!''

''குழப்பமும் தயக்கமும் இப்போது போய்​விட்டதா?''

''கருணாநிதிக்கு போய்விட்டதா என்பது தெரியாது. ஆனால் டி.ஆர்.பாலுவின்  தவிப்பை அனைவராலும் உணரமுடிகிறது. இன்று ஸ்டாலினுக்குப் பக்கத்தில் இருந்து அவரது அணுக்கமான அன்பராக

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

மாறிவிட்டவர் பாலு. 'கேபினெட் அமைச்சராக பாலுவின் பெயரை தளபதி முன்மொழிந்து விட்டார். அதற்கான முஸ்தீபுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதற்காகவே நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தலையைத் தட்டுவதற்கும் தயார் ஆகிவிட்டார்கள். அதன் முன்முயற்சியாகத்தான் தி.மு.க. செயற்குழுவில் பழனிமாணிக்கத்துக்கு எதிராக ஸ்டாலினின் வலது கரங்களில் ஒருவரான தென்சென்னை ஜெ.அன்பழகன் பேசியது’ என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.''

''ம்...''

''ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி-யான பாலு, அடுத்த முறை தஞ்சையில் நிற்க நினைக்கிறார். அதற்காகவே அந்தத் தொகுதிக்கு பல திட்டங்களைக் கொண்டுபோய் பெயர் வாங்கிக் கொண்டு வருகிறார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழனிமாணிக்கத்துக்கு இறங்குமுகம் வந்தால்தான் பாலுவுக்கு பாய்ச்சல் கூடும். அந்த யோசனைகளுக்கு ஏற்ப ஸ்டாலினும் இப்போது காய் நகர்த்தத் தொடங்கி உள்ளார் என்று ஒரு பேச்சு!''

''டி.ஆர்.பாலு மீது பிரதமர் உள்ளிட்டவர்கள் அதிருப்தி தெரிவித்ததால் தானே கடந்த முறை கட்டை விழுந்தது?’

''அதெல்லாம் பழைய கதை. நாடு முழுக்க இப்போது காங்கிரஸுக்கு இருக்கிற 'நற்பெயர்' அப்படி! வருகிற தேர்தலின்போது தி.மு.க. தங்களோடே இருந்தால் தேவலை என்று நினைக்கிறார்களாம். அதற்காகவாவது கருணாநிதி சொல்லும் ஆளை கண்ணை மூடிக்கொண்டு அமைச்சராக்க டெல்லி இப்போது தயாராகிவிட்டதாம். பாலு பெயரை கருணாநிதிக்கு வழிமொழிய இஷ்டம் இல்லை என்றாலும்...  ஸ்டாலின் விடுவதாக இல்லை என்றும் அறிவாலயம் பக்கம் பேச்சு கேட்கிறது. இதோடு சேர்த்து, முன்னாள் அமைச்சரும் இன்னாள் எம்.பி-யுமான சேலம் செல்வகணபதியையும் அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் முயற்சியை ஸ்டாலின் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.''

''செல்வகணபதி மீது அப்படியென்ன திடீர் நாட்டம்?''

''செல்வகணபதிக்கு செல்வாக்கா என்பதைவிட, சேலத்தில் இருக்கும் ஒருவரின் செல்வாக்கை குறைப்பதற்கான முயற்சியாக இதனைக் கூட்டிக் கழித்துப் பாரும்!'' என்று  சிரித்த கழுகார், சில பெட்டிச் செய்திகளும் ஒரு விளக்கச் செய்தியையும் நம் கையில் திணித்தபடி பறந்தார்.

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்

 எதையும் மறைக்கவில்லை... காரில் பெண்கள் இல்லை!

போலீஸ் அதிகாரி ஒருவரது மகன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாக... அதைத் தொடர்ந்து போலீஸ் வட்டாரத்திலிருந்து பரவிய ஒரு செய்தியை 25.07.2012 இதழில் கழுகார் சொல்லியிருந்தார். தற்போது தெரிய வரும் விவரங்களின்படி பார்த்தால், விபத்து நடந்ததைத் தொடர்ந்து அது குறித்து எஃப்.ஐ.ஆர். முறைப்படி போடப்பட்டிருக்கிறது. அதோடு, குறிப்பிட்ட அதிகாரியின் மகன் பெயரும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், புதுவை ஆசிரமம் நோக்கி இளைஞர்கள் பயணித்த அந்தக் காரில் பெண்கள் யாரும் கிடையாது. 'யாரும், யாரையும் காப்பாற்றவோ... எதையும் மறைக்கவோ எந்தவொரு முயற்சியும் இதில் எடுக்கவில்லை' என்று தற்போது கூடுதல் தகவலாகக் கூறுகிறார்கள்!

 வசூலில் மட்டும் பிஸி!

மத்திய மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் அவர்! இவரின் பி.ஏ-க்கள் என்கிற பேனரில் இரட்டையர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் 'வரும்படி'களை வாங்குகிறார்கள். கலெக்ஷன் ஏஜென்டுகள் என்று கட்சிக்காரர்கள் இந்த இரட்டையர்களை அழைக்கிறார்கள். பகல் முழுக்க வசூலாம். இரவு நேரத்தில் ரூபாய் நோட்டு எண்ணும் மிஷினில் எண்ணி முடித்து கட்டுக்கட்டி மேற்படியாரின் கிராமத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுத்தான் தூங்கப்போகிறார்களாம். தனது தொகுதிக்கு  அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியை  விலைபேசி முடித்துவிட்டாராம் மேற்படியார். இது ஒருபுறமிருக்க, கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் யார் வந்தாலும் முகம்கொடுத்து பேசுவதில்லை என்று வேறு வருத்தமான புகார் இவர் மீது. அவ்ளோ பிஸி!  

கொங்கு வட்டாரத்தைச்  சேர்ந்த அமைச்சர் அவர்! ஒரு டஜன் கைத்தடிகளை தனது கஸ்டடியில் வைத்திருக்கும் இவர், வாரம் ஒரு கைத்தடியை அறிவிக்கப்படாத பி.ஏ-வாக வைத்துக்கொள்வார். இந்த அமைச்சரின் இல்லம்தான் எல்லாவித டீலிங்குகளையும் உதவியாளர்கள் மூலமாக கவனிக்குமாம். சொந்தக் கிராமத்தில் உள்ள நிலத்துக்கு அருகில் உள்ள ஒரு நிலத்தை விலைக்கு கேட்க... விவகாரம் ஆரம்பித்தது. நீதிமன்ற படியேறி நியாயம் கேட்டிருக்கிறார் நிலத்துக்காரர். விவசாயத் துறையில் கோலோச்சி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மனிதர் ஒருவரும் இந்த கொங்கு மினிஸ்டருக்கு குறுகிய கால பி.ஏ. ஆகத் துடித்து, அதற்கான காரியங்களையும் தொடங்கிவிட்டாராம்!

அமைச்சரவையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் செல்வாக்கான மந்திரி இவர். இவரது உறவினர் ஒருவர்தான் இப்போது ஏரியாவில் நிழல் அமைச்சர். உள்ளூரில் கட்சிப் பொறுப்பிலும் இருக்கிறாராம். ஜமாய் மாப்ளே, ஜமாய்!

மிஸ்டர் கழுகு: கழகத்தில் கேபினெட் கலகம்!

 கப்சிப் அருணகிரி... கலக்கத்தில் நித்தி!

 மதுரை ஆதீனம் தனக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் நித்தி. அவருக்கு சிக்கல் ஏற்படுத்தும் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது கொடைக்கானலில் இருந்தார். உடனடியாக மதுரைக்கு வந்தார்.

'சுவாமி, நான் பனிலிங்க தரிசனத்துக்காக இமயமலை செல்ல இருக்கிறேன். தாங்களும் வந்தால் சிறப்பாக இருக்கும்'' என்று நித்தி தூண்டில் போட்டாராம். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ஆதீனம், 'இப்போது என்னுடைய உடல்நிலை இருக்கிற சூழலில், என்னால் அவ்வளவு தூரம் வரமுடியாது' என்று கறாராகச் சொல்லி இருக்கிறார். அருணகிரியின் மனதை மாற்றி அழைத்துச் செல்வது, அதுவரையில் பத்திரிகையாளர்களோ, மற்றவர்களோ அருணகிரியைச் சந்திக்கவிடாமல் தடுப்பதுதான் மற்றவரின் திட்டமாம்!

நித்தி இளைய ஆதீனமாக பொறுப்​பேற்ற பின்னும் வாடகை வசூல் உள்ளிட்ட கணக்கு வழக்குகளை இன்னமும்  வைஷ்ணவிதான் கவனித்து வருகிறார். இதில் கோபமாகி இருக்கும் நித்தியின் ஆட்கள் சிலர், வாடகைதாரர்களை மிரட்டத் தொடங்கியுள்ளார்கள்.  மேலமாசி வீசி சூடம் சாமியார் சந்தில் குடியிருப்பில் வசிப்பவர்களை நித்தியின் ஆட்கள் மிரட்டிய தகவல் அறிந்ததும், அருணகிரி கொந்தளித்து விட்டாராம்.

'எப்படியும் 30-ம் தேதிக்குள் மதுரை ஆதீன விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்’ என்பது அருணகிரி ஆதரவாளர்​களது ஆர்வமான கணிப்பு!