Published:Updated:

"எதிர்க் கட்சித் தலைவருக்குப் பொறுப்பும் இல்லை... தகுதியும் இல்லை!"

கே.ராஜாதிருவேங்கடம்படங்கள் : வீ.நாகமணி

"எதிர்க் கட்சித் தலைவருக்குப் பொறுப்பும் இல்லை... தகுதியும் இல்லை!"

கே.ராஜாதிருவேங்கடம்படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
##~##

கேள்விக்குக் காத்திருக்கும் பொறுமைகூட இல்லாமல் படபடவெனப் பொரிகிறார் ராமதாஸ்.

 ''மதுக் கடைகளுக்கு பூட்டு போடவிடாம எங்களைத் தடுத்துக் கைது பண்ணிட்டா, நாங்க அடங்கிடுவோமா? சும்மா சம்பிரதாய மிரட்டலா நாங்க போராடலை. 'பூட்டு போடப்போறோம்’னு ஊருக்கெல்லாம் தகவல் சொல்லிட்டு வந்தாத்தானே கைது பண்ணுவாங்க. அடுத்து, நாங்க எங்கே பூட்டு போடப்போறோம்னு கடைசி நிமிஷம் வரைக்கும் தகவல் வெளிவராது. ராத்திரியோட ராத்திரியா சத்தமே இல்லாமப் போய் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடப்போறோம். பாருங்களேன் அநியாயத்தை... அரசாங்கம் பட்டப்பகல்ல கடை திறந்து சாராயம் விக்க கொஞ்சமும் கூச்சப்படலை. ஆனா, அதைத் தடுக்கணும்னு மெனக்கெடுற நாங்க பதுங்கிப் பதுங்கி ராத்திரில போய் போராட வேண்டியிருக்கு!'' - டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் கைதாகி விடுதலையான சில மணி நேரங்களில் ராமதாஸைச் சந்தித்தபோது, இன்னும் சீற்றம் குறையாமலேயே இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எதிர்க் கட்சித் தலைவருக்குப் பொறுப்பும் இல்லை... தகுதியும் இல்லை!"

''மதுவுக்கு எதிரா விடாமக் குரல் கொடுத்துட்டே இருக்கீங்க... ஆனா, அந்தப் பிரச்னையின் வீரியம் அரசாங்கத்துக்குப் புரிஞ்ச மாதிரியே இல்லையே?''  

''என்ன சொல்லி ஏசுறதுனுகூட எனக்குப் புரியலை. பேசாம, 'குடிகாரத் தமிழ்நாடு’னு மாநிலத்துக்குப் பேரை மாத்திட்டுப் போயிடுங்க. தமிழ்நாடு முழுக்க குக்கிராமம்கூட விடாம 6,172 டாஸ்மாக் கடைகளைத் திறந்துவெச்சுட்டு, 'வாங்க.. வந்து குடிங்க’னு அரசாங்கமே வெத்தலை பாக்கு வைக்காத குறையா கூப்பிட்டுகிட்டு இருக்கு. இப்போ ஆளும் ஜெயலலிதாவும் சரி... இதுக்கு முன்னாடி ஆண்ட கருணாநிதியும் சரி... சொந்த லாபம் சுய லாபத்துக்காகவே சாராய வணிகம் நடத்திட்டு இருக்காங்க. இவங்ககிட்ட யாரு வந்து மிக்ஸி, கிரைண்டர் கேட்டாங்க? யாரு குடும்பம் நாசமாப் போனாலும் கவலை இல்லை. அரசாங்க கஜானாவை நிரப்பி, அதுல இருந்து இலவசப் பொருளைக் கொடுத்து ஆட்சி யைத் தக்கவெச்சுக்கணும். இலவசமா கொடுக்குற ஆடு, மாடுக மேல இருக்குற அக்கறை கூடத் தன் மக்கள் மேல இந்த அரசாங்கத்துக்கு இல்லையே? தன் குடிமக்களோட வருமானத்தைச் சுரண்டி அவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா விஷம் வெச்சுக் கொல்ற அரசாங்கத்தை இந்த உலகத்துல வேற எங்கேயாவது பார்க்க முடியுமா?''

''அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சொல்லிட்டு இருக்காம, இளைஞர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த மெனக்கெடலாமே?''  

'' 'சிகரெட் குடிக்காதே’னு கோடிக்கணக்கானவங்ககிட்ட சொல்லிட்டு இருக்காம, சிகரெட் தயாரிக்கிற நாலஞ்சு நிறுவனங்களுக்குத் தடை போட்டாலே, புகைப் பழக்கத்தை ஒழிச்சுடலாம். அந்தச் சிந்தனைதான், மது விற்பனை செய்யும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டி இருக்கு. முன்னாடியெல்லாம் குடிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களின் சராசரி வயது 25. ஆனா, இப்போ அது 13 ஆயிருச்சு. 12 வயசுப் பையன் ஒருத்தன் பீர் பாட்டிலை இடுப்புல சொருகிட்டு சைக்கிள்ல போயிருக்கான். அப்போ அந்த பாட்டில் வெடிச்சி, பையன் வயிறு கிழிஞ்சி செத்துருக்கான். இப்போ கணக்கு எடுங்களேன்... இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் நிச்சயம் தமிழகமாத்தான் இருக்கும். இதுல இங்கே நடக்குறதுக்குப் பேரு 'அம்மா ஆட்சி’. வேதனையா இருக்குங்க.''

''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி?''

''ஒரு வருஷம் முடிவதற்கு முன்னரே அ.தி.மு.க. ஆட்சிக்கு நூத்துக்கு இருபது மதிப்பெண்கள்தான் போட்டேன். இப்போ அதுலயும் பத்து மதிப்பெண்கள் குறைச்சிட்டேன். அ.தி.மு.க-வின் ஆட்சிக்கு இப்போது பத்து மதிப்பெண்கள்தான். எல்லா இடங்கள்லேயும் ஊழல் நீக்கமற நிறைஞ்சு இருக்கு. நிர்வாகம் ஸ்தம்பிச்சு இருக்கு. ஒரு மாநிலத்தின் காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் அந்த மாநிலத்தின் முதலமைச்சரை நினைத்த நேரத்தில் சந்திக்க வேண்டும். அல்லது தொலைபேசியிலேனும் தொடர்புகொள்ள முடிய வேண்டும். இது இரண்டுமே இங்கு சாத்தியம் கிடையாது. இந்தியாவில் எந்த முதலமைச்சராவது, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு 'ஓய்வு எடுக்கிறேன்’னு மாசக் கணக்கா மலையில உட்கார்ந்துட்டு இருக்காங்களா? 'இந்தத் தேர்தல்ல ஓட்டுக்கு ரெண்டாயிரம் கொடுத்தோம்... அடுத்த தேர்தல்ல மூவாயிரம் கொடுத்தா ஓட்டு போட்டுருவாங்க’ங்கிற எண்ணத்துலதான் அந்தம்மா இருக்காங்க. அதனால மக்களைப் பத்திக் கவலையே இல்லாமல் மலை மேல தூங்கிட்டு இருக்காங்க.''

"எதிர்க் கட்சித் தலைவருக்குப் பொறுப்பும் இல்லை... தகுதியும் இல்லை!"

''தமிழக எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகள்பற்றி உங்கள் எண்ணம்?''

''என்னைப் பொறுத்தவரை எதிர்க் கட்சின்னா அது தி.மு.க-தான். ஆனா, அவங்க வாயைத் திறந்து எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்காங்க. காரணம், அன்னைக்கு அவங்க செஞ்ச தவறைத்தான் இன்னைக்கு இவங்க செஞ்சுட்டு இருக்காங்க. அதனால தி.மு.க. அடக்க ஒடுக்கமா இருக்கு. சட்டமன்றத்துல எதிர்க் கட்சினு ஒரு கட்சி இருக்கு. ஆனா, அந்த கட்சித் தலைவருக்கு எதிர்க் கட்சித் தலைவருக் கான பொறுப் பும் கிடையாது, தகுதியும் கிடையாது. எந்தக் கொள்கையுமே இல்லாத கட்சி அது. இருபத்துநாலு மணி நேரமும் ஏதோ ஒரு மெதப்புலயே இருக்கிற ஒருத்தர், ஒரு கட்சிக்குத் தலைவரா இருந்தா, அப்புறம் அது விளங்குமா? ஏதோ அ.தி.மு.க. தயவில் அந்த இடத்துக்கு வந்துட்டாங்க. இதைஎல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆளும் கட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் பொறுப்பான எதிர்க் கட்சி... எங்கள் பா.ம.க. மட்டும்தான்.''

''ஆனா, உங்க கட்சியின் எதிர்கால நம்பிக்கையான அன்புமணி மீது வழக்கு... உங்கள் உறவினர்கள் சிலர் மீது கொலை வழக்குனு கட்சியோட இமேஜ் அடி வாங்குதே?''

''நீங்க குறிப்பிடுற அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் இருப்பதால், அவற்றைப் பற்றிப் பேச முடியாது. எங்கள் தரப்புநியா யத்தை நீதிமன்றத்தின் முன்வைப்போம்.''

''சினிமாவை மிக மூர்க்கமாக எதிர்க்கும் கட்சி பா.ம.க. ஆனால், உங்கள் கட்சித் தலைவர் மணியின் மகனே சினிமா தயாரிக்கிறாரே?''

''மணியோட மகன் சினிமாவில் நடிக்கவோ, இயக்கவோ செய்யலை. வேற யாருக்கோ அவரு படம் எடுத்துக் கொடுக் குறாரு. அவ்வளவுதான். வன்முறை, ஆபாசம், மது இல்லாத நல்ல சினிமாவுக்கு நாங்கள் எதிரி கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வருஷத்துக்கு ரெண்டு மூணு நல்ல படங்கள் வந்துட்டும் இருக்குது. மத்தபடி வன்முறையையும் ஆபாசத்தையும் மேலும் மேலும் ஊக்குவிச்சி, இளைஞர்களைத் திசை திருப்பும் சினிமாக்களைத்தான் நாங்க விமர்சிக்கிறோம். மக்களைச் சீரழிக் கும் எந்த விஷயத்தையும் பார்த்துக்கிட்டு நாங்க அமைதியாக இருக்க மாட்டோம். அது சினிமாவாக இருந்தாலும் சரி!''

''தனித்துதான் போட்டி என்ற உங்கள் நிலையில் தேர்தல் சமயத்திலும் உறுதியாக இருப்பீர்களா?''

''இரண்டு திராவிடக் கட்சிகளுமே மது மயக்கம், சினிமா மோகம், இலவச விநியோகம்... இந்த மூன்றையும் கொடுத்துதான் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கி வெச்சிருக்காங்க. 'இனி, தேர்தலில் தனித்துதான் போட்டி’ என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’யை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும்.

நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் தமிழ கத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம். அப்படிப் பொறுப்பேற்றுக்கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துக்குள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம். அப்படிச் செய்யாவிட்டால், மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக்கொள்வோம். இதை எங்கே வேண்டு மானாலும் எழுதிக்கொடுக்க நான் தயாரா இருக்கேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism