பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கழுகார் பதில்கள்!

சரத்குமார் - விஜயகாந்த் ஒப்பிடுங்கள்!

கழுகார் பதில்கள்!

இருவரும் மாஜி நண்பர்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். நடிகர் சங்கத் தலைவர்கள். அரசியலில் தனது சொந்த செல்வாக்கை விஜயகாந்த் நிரூபித்துவிட்டார். சரத்குமாரின் தனிப்பட்ட செல்வாக்கு எத்தனை சதவிகிதம் என்பது இது வரை தெரியாது. ஜெயலலிதாவின் நிழலில் வளர நினைக்கிறார் சரத். அவரை நிராகரித்துவிடத் துடிக்கின்றார் காந்த். இருவருமே கருணாநிதியை ஒரு காலத்தில் 'அப்பா’ என்று அழைத்து அல்வா கொடுத்தவர்கள்!

 வி.ஜி.சத்தியநாராயணன், நங்கநல்லூர்.

கழுகார் பதில்கள்!

பிரணாபை ஆதரிக்க மம்தா முடிவெடுக்க என்ன காரணம்?

##~##

வங்காளப் பாசம் முதலாவது காரணம். தனக்கு ஒன்று என்றால் யாரையும் மடக்கிப்போடும் பிரணா​பின் ராஜ தந்திரம் இரண்டாவது காரணம். 'அரசி​யலில் எவருக்கும் வெட்கம் இல்லை’ என்பது மூன்றாவது காரணம்!

 புயல்.சிவக்குமார், பவித்திரமாணிக்கம்.

கழுகார் பதில்கள்!

அமைச்சர் கே.பி.முனுசாமி பேச்சில், கருணாநிதி மீதான காரம் அதிகமாக இருக்கிறதே?

கருணாநிதியைத் திட்டுவதற்கான லைசென்ஸ் கே.பி.முனுசாமிக்கு மட்டுமே ஜெயலலிதா அதிகார​பூர்​வமாகக் கொடுத்துள்ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அதனை முதல்வர் அறிவித்தார். அதனால்தான் காரம் தூக்கலாக இருக்கிறது. அதை அவர் மிஸ்யூஸ் பண்ணாத வரை நல்லது... அவருக்கு!

 என்.வி.சீனிவாசன், புதுபெருங்களத்தூர்.

கழுகார் பதில்கள்!

கட்சியில் உயர் பதவிகளை வகிப்பது குறித்து ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறாரே சோனியா?

கடந்த தேர்தலின்போதே ராகுலுக்கு பிரதமர் ஆவதற்கான பச்சை சிக்னலை சோனியா காட்டிவிட்டார். காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உள்ள பலரது எண்ணமும் அப்படித்தான் இருந்தது. ராகுல் மறுத்ததும், 'அமைச்சராவது ஆகுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் மன்மோகன். அதையும் மறுத்துவிட்டார்.

ஆனால் இப்போது காங்கிரஸ் முகம் ரொம்பவே சாயம் போக ஆரம்பித்துள்ளதால்... வேறு வழி இல்லை. புது முகத்தைக் காட்டித்தான் ஆகவேண்டும். எனவே ராகுலைக் கொண்டுவருவதைத் தவிர வேறு வழி இல்லை. அடுத்த சில நாட்களில் ராகுல் மத்திய அமைச்சர் ஆகலாம். அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ஆகலாம். காங்கிரஸின் கடைசிக் கையிருப்பு அவர் மட்டும்தான்!

பி.சூடாமணி, திருச்சி-6.

கழுகார் பதில்கள்!

இலங்கையுடனான வர்த்தகம், தொழில் உறவுகளை முற்றிலுமாக மத்திய அரசால் கைவிட முடியுமா?

இலங்கைக்கு எதிரான எந்த நிலைப்பாட்டை இந்தியா எடுத்தாலும் அது சீனாவுக்குச் சாதகமாகி​விடும் என்று மத்திய அரசு நினைக்கிறது. நம்முடைய நாட்டின் வெளியுறவுத் துறை அறிவுரைப்படி  அத்தகைய முடிவை எடுக்க மாட்டார்கள்!

 துரைப்பாண்டியன், ராஜபாளையம்.

கழுகார் பதில்கள்!

நம்முடைய மகான்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்துள்​ளார்கள்?

வழக்குப் போட்டவரே எழுந்து நின்று வணங்கக்​​கூடியவர்களாக நம்முடைய மகான்கள் இருந்​துள்ளார்கள்.

வடலூர் ராமலிங்க வள்ளலாரின் சன்மார்க்கக் கருத்துக்கு எதிராக பிரசாரம் செய்தவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். கடலூர் மஞ்சள்குப்பம் நீதிமன்​றத்தில் வள்ளலாருக்கு எதிராக வழக்கும் போட்டார். வள்ளலாருக்கு சம்மன் அனுப்பியது நீதிமன்றம். வள்ளலார் வந்தார். அனைவருமே எழுந்து நின்று வணங்கினார்கள். வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரும் எழுந்துவிட்டார். உணர்ச்சியமயமான நீதிபதியும் எழுந்து வணங்கினார்.

ஆறுமுக நாவலரைப் பார்த்து நீதிபதி, ''வழக்குப் போட்ட நீங்கள் ஏன் எழுந்தீர்கள்?'' என்று கேட்டார். ''பெரியவர் வருகிறாரே என எழுந்தேன்'' என்றார் நாவலர். ''பிரதிவாதியைப் பெரியவர் என்று ஒப்புக்கொள்ளும் நீங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டாம். உமது கட்சியில் உண்மை இல்லை என்பது உமது செய்கையால் தெளிவாகிவிட்டது. எனவே வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்'' என்று நீதிபதி அறிவித்தார். எதிராளியும் வணங்கத்தக்கவராய் இருந்ததால்தான் வள்ளலார். 'தனிப்பெரும் கருணை’யாகக் கருதப்பட்டார். இன்று தங்களை 'மகான்’ என்று சொல்லிக்கொள்பவர்களை நினைத்தால் தலையில் அடித்துக்கொள்ளத்தான் தோன்றுகிறது!

 பா.ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்!

கொடநாட்டுக்கும் சென்னைக்கும் இடையே எவ்வளவு தூரம்?

வந்து வார்னிங் கொடுத்துவிட்டுப் போகும் தூரம்தான்!

 ஆர்.சேஷாத்திரி ஐயங்கார், பருத்திப்பட்டு.

கழுகார் பதில்கள்!

எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதாரிடம் புகழ் இல்லையே ஏன்?

பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்​டாடப்​​பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா-வும் வரதராஜலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்திய​மூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ.சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர், 'காண்டீபம்’ ஆசிரியர் எஸ்.எஸ்.மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணாமலை.

அனைத்துக்கும் மேலாக, பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியாக தன்னை அறிவித்துக்கொண்ட அண்ணா, 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக்கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் காலமெல்லாம் அரசியல் நடத்தினாரோ அந்தக் காமராஜர்... ராஜாஜியின் கடைசிக் காலத்தில் அவரோடு  ஒரே மேடைக்கு வந்தார். எனவே ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப்பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை!

 சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

கழுகார் பதில்கள்!

மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தபோது மக்களும் மீடியாக்களும் 'சரியான தேர்வு’ என்றே பாராட்டினார்கள். ஆனால் இன்று மீடியாக்களின் கடும் கண்டனத்துக்கு உரியவராக மன்மோகன் மாறிவிட்டாரே?

பொருளாதார ஞானமும் நிர்வாகத் திறனும் பெற்றவராக அரசியல் உள்​நோக்கமும் சுயநலமும் இல்லாமல் மன்மோகன் சிங் செயல்படுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்​தார்கள். அவரது பொருளாதார ஞானம், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கப் பயன்படவில்லை. நிர்வாகத் திறன் இருந்த அளவு, சக அமைச்சர்களை கன்ட்ரோல் செய்யும் தைரியம் இல்லை. 'நான் சுத்தமானவனாக இருக்கிறேன்’ என்று இருந்தாரே தவிர, 'என்னுடைய சகாக்களும் அப்படிப்பட்டவர்கள்தான்’ என்று அவரால் சொல்ல முடியாது. காரணம், யார் எப்படிப் போனால் என்ன, நம்முடைய நாற்காலிக்குச் சிக்கல் வராமல் இருந்தால் போதும் என்று நினைத்தார். வல்லவர் என்று வரவேற்றோம். அவர் தனிப்பட்ட முறையில் நல்லவராக மட்டுமே காட்டிக்கொண்டார்.

இதைத் தெரிந்துகொள்ள நமக்கு எட்டு ஆண்டுகள் ஆகி இருக்கிறது!

 பால.கோவிந்தராஜ், மதுரை-17.

கழுகார் பதில்கள்!

விலைவாசி குறைய என்ன செய்ய வேண்டும்?

விற்பனை வரி வசூலிப்பதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டது என்று அரசாங்கம் நினைக்கக் கூடாது. உற்பத்திக்கும் - விற்பனைக்கும் இடைப்பட்ட கூடுதல் உயர்வை அனைத்துப் பொருட்களிலும் நிர்ணயித்துக் கண்காணிக்க வேண்டும்!

 மு.நடராஜன், திருப்பூர்-7.

கழுகார் பதில்கள்!

அரசாங்கத்தை நடத்த 32 அமைச்சர்கள் தேவையா?

32 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? அவர்களுக்குக் கெடுதல் பண்ணும் கேள்விகளைத் தவிர்க்கவும்!

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு