Published:Updated:

சசிகலாவுக்கு ரெட் கார்பெட்!

கட்சியினரை அலற வைத்த எஸ்டேட் விழா!

பிரீமியம் ஸ்டோரி

ஆச்சர்யமான விழா அது! 

பல நூறு கோடிகள் மதிப்பீட்டில் பெரும் தொழிற்சாலைகளையும், அரசுத் திட்டங்களையும் துவக்கிவைக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்கள், ஒரு மலையின் மூலையில் இருக்கும் தம்மாத்தூண்டு ஏ.டி.எம். மையத்தை கடந்த 25-ம் தேதி திறந்துவைத்தன!

##~##

கழுகார் கடந்த இதழில் சொல்லி இருந்தபடியே, முதல்வரின் பங்களா வாயிலில் ஆரம்பித்து தோரணங்கள், அலங்கரிப்புகள், ஆட்டம் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. எஸ்டேட் பங்களாவுக்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால், சில கிலோ மீட்டர்கள் நடந்தேதான் மக்களால் விழாவுக்கு வர முடிந்தது.  மழை, காற்று மற்றும் குரங்குகள் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மேடை மூன்று பக்கமும் மூடப்பட்டு இருந்தது. பிற்பகல் 2 மணி அளவில், பார்வையாளர்கள் நடந்து வரும் பாதையில் இருந்த ரெட் கார்பெட்டை பரபரவென சரிசெய்து ஒழுங்குபடுத்திய போலீஸார், படுபவ்யமாக ஒதுங்கி நின்று யாரையோ வழி மேல் விழிவைத்து எதிர்பார்த்தனர். கொஞ்ச நேரத்தில் கம்பீர நடை போட்டு பிரசன்னமானார் சசிகலா. பிரிவு, இணைப்பு நெகிழ்வுகளுக்குப் பிறகு முதல்வரோடு சசிகலா பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. முதல் வரிசை இருக்கையை நோக்கி சசிகலா நகர, பவ்யமாக எழுந்து நின்று குனிந்து வணங்கினர் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மேயர்கள். அத்தனை மரியாதையையும் அர்த்தபுஷ்டியான சிரிப்போடு ஏற்றுக்கொண்டார் சசிகலா. விழாவுக்கு வந்திருந்த சசிகலாவைப் புகைப்படம் எடுக்க பத்திரிகைகள் முயன்றபோது 'அவங்க விரும்ப மாட்டாங்க. எடுக்காதீங்க, எடுக்காதீங்க’ என்று பாய்ந்து, மறைத்து அதிகப்படி விசுவாசம் காட்டினார் மக்கள் செய்தி தொடர்புத் துறை அதிகாரி ஒருவர். அடுத்த சில நொடிகளில், மேடையில் என்ட்ரி ஆனார் முதல்வர். ரிப்பன் வெட்டி பாங்க் ஆஃப் இண்டியாவின் ஏ.டி.எம்-மைத் திறந்துவைத்த முதல்வர், தனக்காக அந்த வங்கி வழங்கிய விசேஷமான ஏ.டி.எம். கார்டையும் பெற்றுக்கொண்டார். விழாப் பேருரை ஆற்றிய முதல்வர், ''இந்த வங்கியின் சேவையை இங்கிருக்கும் மக்கள் பயன்படுத்தி சேமிக்கும் பழக்கத்தை வளர்த்து, தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தால் பெற முடியாத விஷயங்களும் இந்த உலகத்தில் உண்டு. பணத்தால் நல்ல கட்டிலை வாங்கலாம், மெத்தை மற்றும் தலையணையை வாங்கலாம். ஆனால் நிம்மதியான தூக்கத்தை வாங்க முடியுமா? பணத்தால் நல்ல சத்தான ஆகாரத்தை வாங்க முடியும். ஆனால் பசியை வாங்க முடியுமா? ஆக பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை'' என்று தத்துவார்த்தமாகப் பேசி, இரண்டு குட்டிக் கதைகளும் சொல்லி முடித்தார்.

சசிகலாவுக்கு ரெட் கார்பெட்!
சசிகலாவுக்கு ரெட் கார்பெட்!

மேடையில் இருந்து சற்று தொலைவில் நின்ற இரு அமைச்சர்களின் கார்களில் தொற்றிக்கொள்ள நிர்வாகிகளுக்குள் செம போட்டி. அமைச்சர் தாமோதரனின் மடியில் அமர்ந்து பயணித்தார் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை. இந்தக் கார்களில் இடம் கிடைக்காதா என்று அலைபாய்ந்த ஈரோடு மற்றும் திருப்பூரின் பெண் மேயர்கள் மல்லிகா மற்றும் விசாலாட்சிக்கு 'இடமில்லம்மா. நகருங்க’ என்று பெப்பே காட்டிவிட்டுப் பறந்தனர்.

நிகழ்ச்சி க்யூட்டாக நடந்து முடிந்த சந்தோஷத்தில் இருந்த முதல்வரை, ஒரு புகார் ஃபைல் கடும் அப்செட் ஆக்கியிருக்கிறதாம். அதாவது ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் பொதுப் பணித் துறை அமைச்சரான கே.வி.ராமலிங்கத்துக்கும், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான ஆர்.என்.கிட்டுசாமிக்கும் இடையில் பெரும் யுத்தமாம். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா அமைச்சர்களையும் கலந்துகொள்ள அழைக்கலாம் என்று எம்.எல்.ஏ. தரப்பு சொன்னால், 'இந்த மாவட்ட அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கமும், தோப்பு வெங்கடாசலமும் போதுமே. எதுக்கு எல்லாரும்?’ என்று எதிர்க் குரல் வருகிறதாம். சின்னச்சின்ன பிரச்னைகளுக்கும் முட்டல் மோதல் இருப்பதால், அழைப்பிதழ்கூட முடிவு செய்ய முடியவில்லையாம். இந்த விவகாரம்தான் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக்கிய அ.தி.மு.க. புள்ளியான செங்கோட்டையனைக் கழற்றிவிட்ட நிலையில், தீரன் சின்னமலை விழாவை வைத்து நடக்கும் மோதல் ஜெயலலிதாவுக்குக் கடும் கோபத்தை மூட்டியதாம். அதனால், இது தொடர்பாக சில முக்கிய உத்தரவுகளைப் போட்டுவிட்டு சில அப்பாயின்ட்மென்ட்களுக்கு ஓகே சொல்லி இருக்கிறாராம்.

விழாவில் சசிகலா தலை காட்டத் தொடங்கி இருப்பதையும், முக்கியப் புள்ளிகளுடன் சந்திப்பு நடக்க இருப்பதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் நிர்வாகிகள்... கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் விரைவில் இருக்கலாம் என்று மிரள்கிறார்கள்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு