Published:Updated:

மிஸ்டர் கழுகு: நோ டாஸ்மாக்!

மிஸ்டர் கழுகு: நோ டாஸ்மாக்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: நோ டாஸ்மாக்!
##~##

''முதல்வர் மனதில் உள்ள ஒரு நல்ல விஷயத்துக்கு மனப்பூர்வமான வரவேற்பைச் சொல்லிக் கொள்கிறேன்!'' - கழுகார் வந்ததும் இப்படிப் பீடிகை போட்டார். நாம் குறுக்கிடவில்லை! 

''நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிட்டால் என்ன? என்ற ஆழமான யோசனையில் முதல்வர் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகார மையத்தை வலம் வருபவர்கள்!''

''ஆச்சர்யமான அதிர்ச்சியாக இருக்கிறதே...''

'மயக்கம் என்ன?’ தொடர் பக்கங்களைப் புரட்டிய கழுகார், ''உம்மைப் போலத்தான் நானும் ஷாக் ஆனேன். மிகமிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறதாம் அந்த ஆலோசனைப் படலம். மதுக்கடைகளால் ஒரே பயன், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம். இதன்மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலமாக அந்த வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று வழி என்ன என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் தருமாறு தனக்கு நெருக்கமான சிலருக்கு அஸைன்மென்ட் கொடுத்துள்ளார் முதல்வர்’ என்றும் சொல்கிறார்கள்!''

மிஸ்டர் கழுகு: நோ டாஸ்மாக்!

''இப்படி ஒரு அறிவிப்பு வந்தால், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுமே?''

''நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வந்தால், மொத்தத் தொகுதிகளையும் அப்படியே அள்ளுவதற்கு ஆளும் கட்சிக்கு இது உதவியாக இருக்கும் என்பதால் இதில் அரசியல் கணக்கும் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல் களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!''

''இன்று நேற்று அல்ல.... 40 ஆண்டுகளாக அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?''

''குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. ஆனால் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில், குஜராத்தில் தங்கும் வெளிநாட்டினர் மட்டும் தங்களது பாஸ்போர்ட்டைக் காண்பித்து ஒரு மாத காலத்துக்கான மது பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளலாம். குஜராத்தில் தங்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சில ஆவணங்களைக் காண்பித்து 'ஹெல்த்’ லைசென்ஸ் பெற்று மது அருந்தலாமாம். இப்படிச் சில சலுகைகள் தவிர, அங்கே குடிக்கு தடைதான். ஆனால், சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது நடப்பதும், அதைக் கண்டுபிடித்து தண்டிப்பதும் நடக்கத்தான் செய்கிறது. 'நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்குக் கடனாகவும் வழங்குகிறது. பூரண மதுவிலக்கு அமலில் இருக்கையில் இது எப்படி சாத்தியம்?’ என்பது எல்லோருக்கும்  ஒரு முன்மாதிரிப் பாடம்தானே!''

''நம் முதல்வருக்கு நன்கு நெருக்கமானவர்தானே குஜராத் முதல்வர்?''

''குஜராத் நிர்வாகம் மிக ஒழுங்குடனும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதே இதற்கு மிகமுக்கியமான காரணம். மக்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் முறைகேடான பண வசூலின்றி, குறித்த காலத்துக்குள் மாநில நிர்வாகம் செய்து கொடுப்பதால் மக்களும் அத்தனை வரிகளையும் முறையாக செலுத்தி விடுகிறார்கள். விற்பனை வரியில் ஆரம்பித்து அனைத்து ரக வரி வசூலும் துல்லியமாக நடைபெற்று அரசின் கஜானா நிரப்பப்படுகிறதாம். இலவசம் என்பதே மாநிலத்தின் நிர்வாகக் கொள்கையில் கிடையாதாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடையாது. ஆனால் விவசாயத்துக்குப் பயன்படும் மின்சாரத்துக்கான கட்டணம் மற்ற பயன்பாட்டுக் கட்டணங்களில் இருந்து ஒரு ரூபாய் குறைவு... இப்படி நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன!''

''முதல்வரின் கனவு எப்போது நனவு ஆகுமாம்?''

''கிடைக்கும் உற்சாகத் தகவல்களை வைத்துத்தான் நல்ல நாள் பார்க்கப்படும். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் அது நடைமுறைக்கு வரலாம். ஒரு வேளை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அறிவிப்பாகக்கூட வரலாம். மாதங்கள் கடந்தாலும் முதல்வரின் யோசனை மதுபானக் கடைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக நிச்சயமாக இருக்கும்!'' என்றபடி அடுத்த சப்ஜெட் மாறினார் கழுகார்!

''தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான முஸ்தீபுகளில் கருணாநிதி இறங்கி இருப்பதை மத்திய அரசு இன்னும் கசப்பான முகம் கொண்டுதான் பார்க்கிறது. ராஜபக்ஷேவும் நம் பிரதமருக்கு நெருக்கடி கொடுத்தாராம். 'உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வர இருக்கிறார்கள். இது அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கும். இதற்கு மத்திய அரசாங்கம் அனுமதித்தால், சார்க் நாடுகளின் அமைப்பில் இருந்து விலக வேண்டி வரும்’ என்று சொன்னாராம். இதை கருணாநிதிக்கும் சொன்னார்கள். அதனால் அவரும் அடக்கி வாசித்து, தமிழ் ஈழம் என்ற வார்த்தையைக் கட் செய்துவிட்டு... ஈழத்தமிழர் வாழ்வுரிமை... பாதுகாப்பு என்று மையமான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆனாலும் இதை மத்திய அரசு அவ்வளவாக ரசிக்கவில்லை. மேலும் இதில் சோனியா, மன்மோகனுக்குச் சிக்கலான அமைச்சர் சரத்பவார் வர ஒப்புக்கொண்டதையும் வித்தியாசமாகத்தான் பார்க்கிறார்கள்!''

''சரத்பவாரை அழைத்ததில் கருணாநிதிக்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?''

''காங்கிரஸ் அமைச்சர்கள் யாரையும் அழைக்க முடியாது. அதற்காக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானவர்களையும் அழைக்க முடியாது. அதனால் கூட்டணிக்குள் இருப்பவர்களை மட்டும் அழைக்க கருணாநிதி திட்டமிட்டார். சரத்பவாரின் மகள், கனிமொழிக்கு நெருக்கமானவர் என்பது அவரும் அறிந்ததுதான். ஈழத் தமிழ் எம்.பி-க்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், யோகேஸ்வரன், சரவணபவன் ஆகியோரை வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அழைத்துள்ளார். இவர்களை சம்மதிக்க வைத்ததுதான் பெரும்பாடு என்கிறார்கள். இந்த மாநாட்டில் இஸ்லாமியப் பிரதிநிதிகள் அதிகமாகக் கலந்துகொள்கிறார்கள். ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா இவர்களை அழைத்து வருகிறாராம். துறைமுகம் காஜா ஏற்பாட்டில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் வருகிறார்கள். 12-ம் தேதி காலையில் ஜெகத்ரட்சகனின் அக்கார்டு ஹோட்டலில் ஒரு கருத்தரங்கமும் மாலையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திறந்த வெளி மாநாடுமாக டெசோ நடக்கப்போகிறது!''

''ஓ...''

''அதைக்கூட நிம்மதியாக நடத்த முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு புதுக்குடைச்சல் ஆரம்பம் ஆகிவிட்டது. மாவட்டம்தோறும் இளைஞர் அணி நிர்வாகிகளை ஸ்டாலின் நியமித்து வருகிறார் அல்லவா? மதுரை மாநகரில் அத்தகைய நியமனம் கூடாது என்று அழகிரி ஆட்கள் ரயில் ஏறி வந்துவிட்டார்கள். புதன்கிழமை வந்தார்கள். ஏனோ கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. தலைவரை அவர்கள் பார்க்கிறார்களா என்பதை அறிவதற்காகவே அறிவாலயத்தில் இருந்தார் ஸ்டாலின். மறுநாளும் வந்தார்கள் மதுரைக்காரர்கள். கருணாநிதியைப் பார்க்க அனுமதி கிடைத்தது. 'அண்ணன் ஜப்பான் போயிருக்கிறார். அவர் வர்ற வரைக்கும் இளைஞர் அணி நிர்வாகிகளை நியமனம் செய்யக் கூடாது. அது மாதிரியே மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியை உடனடியாக மாற்றி ஆக வேண்டும்’ என்று அழகிரி ஆட்களான முன்னாள் மேயர் மன்னன், உதயகுமார் உள்ளிட்டவர்கள் கருணாநிதியிடம் சொல்ல... 'இதை ஸ்டாலினிடம் சொல்லிட்டுப் போங்க’ என்று அவர் சொல்லி இருக்கிறார். வெளியே வந்தவர்கள், 'அவரிடம் எதுக்கு இதைச் சொல்லணும்’ என்று பார்க்காமலேயே புறப்பட்டு விட்டார்கள்!''

''மறுபடியும் மோதலா?''

''மோதல் தொடர்கிறது என்று சொல்லும். 'இளைஞர் அணியை இணை அதிகாரம் உள்ள பதவியாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும்?’ என்று அவர்கள் அறிவாலய வளாகத்திலேயே நின்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அடுத்த வாரம் அழகிரி வரும்போது க்ளைமாக்ஸ் இருக்கலாம்!''

''இருக்கட்டும்!''

''ஜெயலலிதா தரப்பினர், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் அடிக்கடி மனு போடுவதும், அந்த மனு டிஸ்மிஸ் ஆவதும் வாடிக்கையாகி விட்டது. 'நீதிபதி மல்லிகார்ஜுனையாவை நியமித்ததே செல்லாது’ என்று போடப்பட்ட மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி சசிகலா பெங்களூரு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம்போல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் வரவில்லை. 'டிஸ்மிஸ் ஆன மனு குறித்து அப்பீல் செய்துள்ளோம்’ என்று காரணம் சொன்னார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.''

''அன்றும் காரணம் கிடைக்காதா என்ன?''

''அதைவிட முக்கியமான விஷயம் ஒன்று ஆகஸ்ட் முதல் வாரம் நடக்கப்போகிறது. அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 4-ம் தேதி நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெறப்போகிறார். பொதுவாக

மிஸ்டர் கழுகு: நோ டாஸ்மாக்!

மாதத்தின் இடையில் ஓய்வு பெறுபவர், அந்த மாதம் கடைசி வரைக்கும் பதவியில் இருக்கலாம். ஆனால் முக்கிய முடிவுகள், தீர்ப்புகள் சொல்ல முடியாது. அந்த நாளைத்தான் ஜெயலலிதா தரப்பு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!'' என்று கிளம்பப்போன கழுகார்...

''பெரியார் திராவிடர் கழகத்தில் நடக்கும் உள்கட்சிக் குழப்பம் குறித்து ஏற்கெனவே உமக்குச் சொல்லிஇருந்தேன். கோவை ராமகிருஷ்ணனை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று கொளத்தூர் மணி ஆட்கள் கோரிக்கை வைத்து, அதனால் கட்சி இரண்டாகும் சூழ்நிலை கடந்த மாதம் ஏற்பட்டது. சமாதானம் பேசப் பலரும் முயன்றும் பயன் இல்லை. இந்தநிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கடந்தவாரம் நடந்தது. இரண்டு அணிகளுக்கும் பொதுவாக 'தடா’ வழக்கறிஞர் துரைசாமியைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தனர். கோவை ராமகிருஷ்ணன் தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் துரைசாமியைச் சந்தித்த கொளத்தூர் மணி, 'ராமகிருஷ்ணனை நீக்கியாக வேண்டும்’ என்று கறாராகச் சொல்லி விட்டாராம். தன்னால் எந்தக் குழப்பமும் வேண்டாம் என்று முடிவெடுத்த கோவை ராமகிருஷ்ணன், செப்டம்பர் 17-ம் நாள் 'தமிழ்நாடு திராவிடர் கழகம்’ என்ற தனது பழைய கட்சியை மீண்டும் தொடங்கும் வேலையில் இறங்கி விட்டாராம்...'' என்றபடி பறந்தார் கழுகார்!

படம்: சு.குமரேசன்

''எதிர்ப்பு சக்தி இல்லை!''

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் 'கும்கி’ படத்தின் ஆடியோ விழா கடந்த 26-ம் தேதி நடந்தது. அழைப்பிதழில் பெயர் இல்லாமல் திடீரென அரங்கில் நுழைந்த ரஜினி பேச்சுதான் ஹாட்!

மிஸ்டர் கழுகு: நோ டாஸ்மாக்!

''நான் பொதுவா எந்த சினிமா விழாவிலும் கலந்துக்கிறது இல்லை. ஒரு விழாவுக்கு ஒப்புக்கிட்டா, எல்லா விழாவுக்கும் கூப்பிடுவாங்க. அதனால தவிர்த்திடுவேன். நான் எங்கே போனாலும் என் மேல எல்லாரும் அன்பு செலுத்துறாங்க. அதனால, கடன் வாங்கின கடன்காரன் மாதிரி அவங்களைப் பார்த்துப் பயந்துப் பதுங்கிப் போறேன். எனக்கு சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட் நடந்தப்போ, என்னைத் தேடி கமல் வந்தார். அவரைக்கூட என்னைப் பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கலை. அப்புறமா போனில் பேசும்போது, 'ரஜினி உன்னைப் பார்க்க சிங்கப்பூர் வந்தேன், யாரும் விடலை’னு வருத்தப்பட்டார். நானும் 'சென்னை வந்தவுடனே முதல்ல உன்னைத்தான் பார்ப்பேன்’னு சொன்னேன். என் உடம்புல இம்யூனிட்டி பவர் (எதிர்ப்பு சக்தி) இல்லை, பப்ளிக் ஃபங்ஷன்ல கலந்துக்காதீங்கனு டாக்டர்கள் அட்வைஸ் செய்றாங்க. அதுனால நான் போக வேண்டிய இடங்களுக்குக்கூட போறது இல்லை!'' என்றார் உருக்கமாக!

 ஆலங்குடியில் ரகசிய யாகம்!

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்துக்குப் புகழ் பெற்றது. கடந்த 26-ம் தேதி காலை, பக்தர்கள் திடீரென வெளியேற்றப்பட்டு மூன்று புள்ளிகளுக்கு ஸ்பெஷல் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆறு குடங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாம். சுவாமிமலை சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், ஆலங்குடி அர்ச்சகர் ஜோதி.ராமலிங்க சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பு யாகங்களைச் செய்திருக்கிறார்கள். சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த யாகம் குறித்து எந்தத் தகவலும் சொல்லாமல் ரகசியம் காக்கிறார்கள், அரசு அதிகாரிகள்!

 அடுத்தது கே.வி.ராமலிங்கம்?

பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை இரண்டாவது முறையாக கொடநாட்டுக்கு அழைத்து லெஃப்ட் ரைட் வாங்கினாராம் முதல்வர் ஜெயலலிதா. ஏனென்றால் முன்பு முதல்வரிடம், 'என்னால் எந்த வேலையும் சுயமாகப் பார்க்க முடியவில்லை. சில அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தலையிடுகிறார்கள்’ என்று புகார் சொன்​னாராம் ராமலிங்கம். உடனே, 'அவர்களின் பெயர்களை எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா.

''ஜனாதிபதி தேர்தலுக்கு ஓட்டுப் போட வந்த முதல்வர், இந்தப் பட்டியலில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலரை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது​தான் ராமலிங்கம் பொய் சொன்னது தெரியவந்தது. உடனே மீண்டும் அழைத்து ஏகத்துக்கும் டோஸ் விட்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் காவிரி தொடர்பாக ஜெயலலிதா கேட்ட சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் திணறினாராம் ராமலிங்கம். மேலும், பொதுப்பணித் துறை தொடர்பாக அனைத்துப் பணிகளும் அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒரு கான்ட்ராக்டர் மூலம்தான் நடக்கிறது என்ற புகாரும் கொடநாடுக்குப் போயிருக்கிறது'' என்று சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு