Published:Updated:

அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!

Vikatan Correspondent
அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!
அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!
அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!

புதுடெல்லி: அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்காக, அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகள் கடந்த 1964ஆம் ஆண்டு அமலுக்கு வந்தன. ஏற்கனவே ஒருமுறை அதில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், நேற்று 2வது தடவையாக திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி, அமைச்சர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக, அரசு அதிகாரிகளை அமைச்சர்கள் துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்த உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகள், அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கத்தில் செயல்படுவதையும் தடுக்கிறது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சக செய்தி கூறுகையில், ''அமைச்சர்கள் பதவி ஏற்றதில் இருந்து அமைச்சர்களாக நீடிக்கும்வரை, அரசு அதிகாரிகள் விஷயத்தில் அரசியல் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை, எவ்வகையிலும் தங்கள் பணிக்கோ, பொறுப்புகளுக்கோ குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுமாறு கூறக்கூடாது.

##~~##
அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில், அரசு அதிகாரிகளை கவர்வதற்காக, அவர்களுக்கு பிடித்தமான பணியிடங்கள் வழங்குவதையோ, இடமாற்றம் வழங்குவதையோ அமைச்சர்கள் செய்யக்கூடாது. அரசு அதிகாரிகளும் தங்கள் பணிக்கு குந்தகம் விளையாத வகையில் செயல்பட உதவும். இந்த திருத்தத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றபோதிலும், இவற்றை அமைச்சர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள நடத்தை நெறிமுறைகளின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள், அமைச்சர்கள் தங்களுடைய மற்றும் குடும்பத்தினருடைய சொத்து விவரங்கள் மற்றும் கடன் விவரங்களை பிரதமரிடமும், மாநில அமைச்சர்களாக இருப்பின், முதலமைச்சரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
அமைச்சர்கள் தாங்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாகவோ யாரிடமும் பண உதவி பெறக்கூடாது. பதிவு செய்யப்பட்ட சங்கத்துக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ, அமைச்சர்களிடம் யாராவது காசோலை வழங்கினால், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அமைச்சர்கள் வழங்கிவிட வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த திருத்தம், மத்திய அரசில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, அவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.