Published:Updated:

தலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா?

தலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா?

தலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா?

தலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா?

Published:Updated:
தலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா?
தலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா?

ன்னதென்றே அறியாமல் தினந்தோறும் நடக்கிறது பெரும் பாவம்! துள்ளித் திரிய வேண்டிய பாலப் பருவத்தில், கல்வி என்ற பெயரால் பெரும் கல்லைத் தூக்கிப் பிள்ளைகளின் தலையில் கட்டிவிட்டு, 'நல்ல பள்ளியை நாடுகிறோம்' என்ற பெயரில் மைல்கணக்கில் அன்றாடம் பயணிக்கவைக்கிறோம். தூக்கத்தில் பாதியும் பாடம்பற்றிய கவலையில் மீதியுமாகப் பேருந்தில் ஏறி, நீண்ட தூரத்துக்கு ஏராளமான நேரத்தை வீணடித்தபடி பயணித்து, பள்ளிக்குப் போய்த் திரும்பும் நம் குழந்தைகளின் நிலை பரிதாபத்திலும் பரிதாபம்.

அந்தக் கொடுமையின் உச்சகட்டம்தான், கடந்த வாரத்தின் இரண்டு நாட்களில் மூன்று குழந்தைகளைப் பேருந்துகளின் சக்கரங்களுக்குத் தின்னக் கொடுத்த பாவம். சென்னையில் பால் மணம் மாறாச் சிறுமி ஸ்ருதி, வேலூர் அருகே சுஜிதா இருவரையும் அவரவர் பயணித்த பள்ளிப் பேருந்துகளே தின்று முடித்துவிட... சிதம்பரம் அருகே வீடு செல்லும் ஆர்வத்தோடு ஓடிப் போய் அரசுப் பேருந்தில் ஏற முயன்றபோது, அந்தப் பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்து சக்கரத்தில் நசுங்கி இறந்திருக்கிறாள் ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா.

பேருந்தின் ஓட்டுநர், பள்ளித் தாளாளர் தொடங்கி, போக்குவரத்து அதிகாரி வரையில் கைதுசெய்து... கண் சிவக்கச் சட்டம் பேசி, கண்ணீர் அஞ்சலி செலுத்தி... அதிகபட்சம் ஆறேழு நாட்கள் அக்கறையோடு அலசுவோமா இந்தப் பரிதாபத்துக்கான தீர்வுகள்பற்றி?

அரக்கப் பறக்க சோறூட்டி, அரைகுறையாகத் தலைவாரி, அடித்து உதைக்காத குறையாக மிரட்டி, தரதரவென்று இழுத்துப்போய்... படிக்கட்டின் உயரம்கூட வளர்ந்திராத குழந்தையைப் பேருந்துக்குள் தூக்கி வீசி, அன்றைய கடமை முடிந்த 'நிம்மதி’யோடு கையசைத்துவிட்டுக் கிளம்புவதை நிறுத்த முடியுமா நம்மால்?

பள்ளி - கல்லூரி வாகனங்கள் அனைத்தையும் அதிரடியாகச் சோதித்து, அதன் மூலம் ஒரு பயத்தை ஏற்படுத்தி... அலட்சியத்துக்கு முடிவுகட்ட முனையும் நடவடிக்கை நிச்சயம் தேவைதான். ஆனால், அதுவே ஆகிவிடுமா நிரந்தரத் தீர்வு?

பெற்றவர்கள் இருவருமே வேலைக்குப் போனால்தான் பொருளாதாரம் நிமிரும் என்ற கட்டாய நிலை இன்று நகரங்களில். கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, பிஞ்சுகளைப் பார்த்துக்கொள்ள பெரியவர்களே இல்லாமல் போய்விட்ட காலம் இது. 'அதிகக் கட்டணம் வாங்கினால்தான், சிறந்த கல்வி தருவார்கள்' என்று நாமாக நம்பி, உயர்தரப் பள்ளி என்ற விளம்பர அடையாளங்களில் வீணாக மயங்கிவிட்டோம். வீட்டைவிட்டு எத்தனை தூரம் இருந்தாலும் பரவாயில்லை என்று குழந்தையின் விருப்பம்பற்றி துளிகூடக் கவலைப்படாமல் மூட்டை சுமக்கும் மூட்டைகளாக அள்ளி வண்டியில் போட்டு அனுப்பிவிட்டு, கடமை முடிந்தது என்று பெருமூச்சு விடும், நாமும்தானே குற்றவாளிகள்?

பள்ளி வளாகம் உள்ள இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்குள் வீடு இருக்கும் குழந்தைகளுக்குத்தான் அனுமதியில் முன்னுரிமை என்ற சட்டத்தை பள்ளிகள் மீது கட்டாயமாகத் திணித்தாக வேண்டாமா அரசு? அது எத்தனை பெரிய வசதிகள் கொண்டதாக இருந்தாலும் சரி... கல்விக் கட்டணம் வசூலிப்பதில் சீரான வரையறைகள் இருந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டாமா? தனியார் பள்ளிகள்தான் தரமான கல்வி தரும் என்ற நிலையை முற்றிலுமாக  மாற்றி, பேட்டைக்குப் பேட்டை உள்ள அரசாங்கப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தி பெற்றோரின் நம்பிக்கையை அந்தப் பக்கம் திருப்ப வேண்டாமா? அமைச்சர்கள் - உயர் அதிகாரிகளின் குழந்தைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிற அளவுக்கு அரசுக்குத் துணிச்சல் வர வேண்டாமா?

சட்டத்திலும் சமூக அமைப்பிலும் பொதுப் பார்வையிலும் தவறுகளை வைத்துக்கொண்டு... ஒரு பாவமும் அறியாத மலர்களைக் கசக்கி நுகர்கிற எல்லோருமே குற்றவாளிகள்தான். ஆம், ஓட்டை... அந்தப் பேருந்தில் மட்டுமே இல்லை!