Published:Updated:

அன்னா ஹசாரே - ஆம் ஆத்மி மோதல் மீண்டும் வெடித்தது!

Vikatan Correspondent
அன்னா ஹசாரே - ஆம் ஆத்மி மோதல் மீண்டும் வெடித்தது!
அன்னா ஹசாரே - ஆம் ஆத்மி மோதல் மீண்டும் வெடித்தது!
அன்னா ஹசாரே - ஆம் ஆத்மி மோதல் மீண்டும் வெடித்தது!

ராலேகான் சித்தி: தமது உண்ணாவிரத மேடையில் குறுக்கிட்டு பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரை வெளியேறுமாறு அன்னா ஹசாரே கூறியதால் இருதரப்புக்குமிடையேயான மோதல் மீண்டும் பகிரங்கமாக வெடித்துள்ளது.

வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரத மேடையில் இன்று பங்கேற்ற இந்திய ராணுவ முன்னாள் தளபதி வி.கே. சிங், தனது உரையின்போது, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக தாக்கிப்பேசினார்.

"அன்னாவை விட தாங்கள் பெரியவர்கள் என சிலர் நினைத்துக்கொள்கிறார்கள்" என்று மறைமுகமாக கெஜ்ரிவாலை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கோபால் ராய், கோபத்துடன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனையடுத்து அன்னா தலையிட்டு, கோபால் ராயை அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு, வி.கே.சிங்கை நோக்கி பேச்சை தொடருமாறு கூறினார்.

மேலும் கோபால் ராயை நோக்கி, "இனியும் வி.கே. சிங்கின் பேச்சுக்கு இடையூறு செய்ய நினைத்தால் இப்பொழுதே இங்கிருந்து சென்றுவிடுங்கள்!" என்று கோபத்துடன் கூறினார்.

இதனையடுத்து கோபால் ராய் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் செய்தியாளகளிடம் பேசிய அவர், வி.கே. சிங் ஒரு பா.ஜனதா ஆதரவாளர் என்றும், மோடியை முன்னிறுத்துவதற்காக அன்னாவைவிட்டு விலகி, தேர்தலில் போட்டியிட ஒரு சீட்  கிடைக்காதா என்ற எண்ணத்தில் மோடியை புகழ்ந்தவர், எங்களை கண்டித்துப்பேசுவது வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

##~~##
"அன்னா ஹசாரே எனது தந்தை போன்றவர். என்னை கண்டிக்கவோ, திட்டவோ அவருக்கு உரிமை உள்ளது. அவர் எவ்வளவு நாள் உண்ணாவிரதம் இருக்கிறாரோ அவ்வளவு நாட்கள் நானும் அவருடன் இருப்பேன்" என்று அவர் மேலும் கூறினார்.
அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் சிலர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்னாவின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பையும், அன்னா ஹசாரேவுக்கு கிடைத்த புகழையும் தனது அரசியல் ஆதாயத்திற்காக கடத்திச் சென்றுவிட்டதாக கோபத்துடன் உள்ளதாக கூறப்படும் நிலையிலேயே, இந்த மோதல் இடம்பெற்றுள்ளது 

முன்னதாக டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது, தமது பெயரையோ, புகழையோ தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கண்டிப்புடன் கடிதம் எழுதியதும், இதற்கு பதிலடியாக அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.