பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

இரா.தோணி, தூத்துக்குடி. 

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

  'நேருவின் வாக்குறுதி; நீர் மேல் குமிழியா?’ என்று கேட்கிறாரே கருணாநிதி. அது என்ன நேருவின் வாக்குறுதி?

அன்றைய (1961) தி.மு.க. எம்.பி-யான ஈ.வெ.கி.சம்பத்துக்கு அன்றைய பிரதமர் நேரு ஒரு கடிதம் எழுதினார். 'இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது’ என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாராம்சம். இதற்கு 'நேருவின் வாக்குறுதி’ என்று பெயர். மத்திய அரசு ஊழியர்கள் இந்தியில் ஒரு நாள் கையெழுத்துப் போட வேண்டும் என்று வந்த உத்தரவைக் கண்டித் திருக்கும் கருணாநிதி, நேருவின் வாக்குறுதியை ஞாபகப்படுத்தி உள்ளார்.

பெரும்பாலான தனியார் பள்ளி களில் எப்போதோ இந்தி நுழைந்துவிட்டது... அதெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாதா?

 கே.முனியாண்டி, கீழநத்தம்.

கழுகார் பதில்கள்

பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தனக்குத்தானே சிக்கல் ஏற்படுத்திக் கொண்டுவிட்டது என்கிறேன் நான். நீர் என்ன சொல்கிறீர்?

இதற்கான பதிலை நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்துத்தான் சொல்ல முடியும். ஒருவேளை பி.ஜே.பி. வென்றால்... பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி முழுமையாக அறிந்துகொள்ளும்!

 ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் பதில்கள்

மத்திய அரசை மிரட்டுவதில் கை தேர்ந்த வர் கருணாநிதியா... மம்தா பானர்ஜியா... சரத்பவாரா?

##~##

மூவருமே மிரட்டுவதுபோல் நடிப்ப வர்கள். தங்கள் நாற்காலிக்கு ஆபத்து என்று தெரிய வந்தால் பதுங்கிவிடுவார்கள். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் விமர்சிப்பவர்கள் மட்டுமே உண்மையான அரசியல் தலைவர்கள். அதனால், இவர்கள் வெறும் பூச்சாண்டிகள். எந்தக் கட்சி தன்னுடைய பிரதமர் நாற்காலிக்கு முட்டுக் கொடுத்துத் தாங்கி நின்றதோ... அந்த பி.ஜே.பி-யின் ரத யாத்திரைக்குத் தடை போட்டார் பிரதமர் வி.பி.சிங். ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்கள் என்பது தெரிந்தும் தடுத்தார். அந்தத் துணிச்சலும் கொள்கை உறுதியும் இவர்களுக்குக் கிடையாது!

 சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

கழுகார் பதில்கள்

தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வேறுபாடு?

தீவிரவாதம் என்பது சிந்தனை. பயங்கரவாதம் என்பது செயல்.

தீவிரமான சிந்தனைகள் - மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளன. மன்னர் ஆட்சி நடக்கும் நாட்டில், ஜனநாயக எண்ணமே தீவிரவாதமாகக் குற்றம் சாட்டப்படும். ஜனநாயக நாட்டில், தேர்தலை நிராகரிப்பவர்கள் தீவிரவாதிகளாகக் கருதப்படு கிறார்கள். இதனால் ஆபத்து இல்லை. ஆனால் பயங்கரவாதம், குருட்டுத்தனமான ஆயுதவாதமாக இன்று மாறிவிட்டது. இதன் பழிவாங்குதலுக்கு அப்பாவிகள் தான் அதிகம் பலியாகிறார்கள். எனவே பயங்கரவாதம் வெறுக்கத் தக்கது!

கழுகார் பதில்கள்

மு.கல்யாண சுந்தரம், மேட்டுப்பாளையம்.

  ஜெயலலிதாவின் கோபத்தில் இருந்து தப்பிக்க எம்.எல்.ஏ-க்கள், கவுன்சிலர்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்ன?

  'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்’ - என்கிறார் வள்ளுவர்.

செய்ய வேண்டாததை செய்வதாலும், செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதாலும் கெடும் என்கிறார். இந்தக் குறள், ஆளும் கட்சியினருக்கு மட்டுமல்ல எல்லாக் கட்சிகளுக்குமான பாடம்.  அரசியல்வாதிகள் அனைவருமே இந்த அரிச் சுவடியைப் பின்பற்றினால் சிக்கலே வராது!

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

  'தமிழகத்தில் சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை’ என்கிறாரே டாக்டர் ராம்தாஸ்?

சுரண்டை சப் இன்ஸ்பெக்டரை ஏட்டு கொல்கிறார். மாமூல் தராததால் மருகால்குறிச்சி வானமாமலையை என்கவுன்ட்டர் செய்கிறார் இன்ஸ்பெக்டர். காவல் துறைக்கு உள்ளேயே இத்தனை ஒழுங்கீனங்கள் நடந்தால்... குற்றம் செய் வதையே தொழிலாகக்கொண்டவர்கள் எவ்வளவு செய்வார்கள்?

'பிப்ரவரி 12-ம் தேதி கடமலைக் குண்டு காவல் நிலையத்தில் நான் கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஒரு பெண் கதறினார். ஐந்து மாதங்கள் ஆகியும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட போலீஸ் எந்த ஒழுங்கைக் காப்பாற்றும் என்று நினைக்கிறீர்கள்?

 கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

கழுகார் பதில்கள்

  பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்ற நேரத்தில், கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரும் பாராட்டினார்களே?

டெல்லியில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் அதுதானே!

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

  கருணாநிதியின் அடுத்த இலக்கு என்னவென்று யூகிக்க முடிகிறதா?

கருணாநிதி மட்டுமல்ல எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரே இலக்கு... தேர்தல்தான்!

 எஸ்.ராமசாமி, குட்டை தயிர்பாளையம்.

கழுகார் பதில்கள்

  'அரசின் நம்பகத்தன்மையை மீட்டு எடுக்க வேண்டும்’ என்று பிரதமருக்கு ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளது பற்றி?

பிரதமருக்குக் கோரிக்கைவைக்கத் தகுதியானவர் தான் ரத்தன் டாடா. அவரது நம்பகத்தன்மையை முதலில் நீரா ராடியாக்களிடம் இருந்து மீட்டு எடுக் கட்டும்!

 சங்கத்தமிழன், சென்னிவீரம்பாளையம்.

கழுகார் பதில்கள்

  தமிழக அமைச்சர் ஆகும் கனவில் மிதக்கும் மூன்று பேர் பெயரை உம்மால் சொல்ல முடியுமா?

  நிச்சயம் முடியும். ஆனால் நாம் சொன்னதற் காகவே அந்த மூவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப் படலாம். எனவே, அந்தப் பாவம் நமக்கு வேண் டாம்!

 முருகேசன், திருவள்ளூர்.

கழுகார் பதில்கள்

  பஞ்ச தந்திரங்களையும் அறிந்தவர்கள்தான் அரசியலில் கோலோச்ச முடியும் என்பது உண்மையா?

  பஞ்ச தந்திரங்களில் எதுவுமே நல்ல விஷயங்கள் அல்ல. நட்பைக் கெடுத்து பகை உண்டாக்குதல் - மித்திர பேதம். தங்களுக்கு சமமானவர்களுடன் மட்டும் நட்புகொண்டுவிடுவது - சுகிர்ல லாபம். பகைவரோடு உறவுவைத்து அழிப்பது - சந்திர விக்ரகம். தன் கையில் கிடைத்த பொருளையோ மற்றவர்களையோ அழித்துவிடுவது - அர்த்த நாசம். தீர விசாரிக்காமல் ஆலோசிக்காமல் காரியம் செய்வது - அஸம்பிரேட்சிய காரித்துவம். இவைதான் பஞ்ச தந்திரம். சுதர்சன நாட்டு மன்னனுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும் தவறாக வளர்ந்ததாகவும், அவர்களைத் திருத்துவதற்காக விஷ்ணு சர்மா என்ற ஞானி சொன்ன கதைகள்தான் பஞ்ச தந்திரக் கதைகளாக சொல்லப்பட்டன. வேடிக்கைக் கதைகள் மூலமாக எப்படி வாழக் கூடாது என்றுதான் விஷ்ணு சர்மா விளக்கம் அளித்தார்.

இந்த தந்திரங்களை சில தலைவர்கள் பின்பற்றலாம். ஆனால் அந்தச் சூழலுக்குள் விரைவில் அவர்களே சிக்கிவிடுவார்கள் என்பதே யதார்த்தம்.

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு