Published:Updated:

மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்

மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்
##~##

ளுக்கு முன்னால் அலுவலகத்துக்கு வந்த கழுகார், ஒரு மாதத்து பேப்பர் ஃபைலை எடுத்து எதையோ தேடிக்கொண்டு இருந்தார். இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நம் முன் ஆஜர் ஆனார்! 

''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க. மீதான பிடி இறுகுகிறது. தெரிந்தோ தெரியாமலோ தி.மு.க-காரர் ஒருவரே அதற்கு உடந்தையாக இருந்து விட்டார்!''- என்று மெகா குண்டு ஒன்றை மெதுவாக உருட்டி விட்டார் கழுகார்!

''கட்சியைக் காப்பாற்றாமல் ஒருவரால் இருக்க முடியுமா என்ன?'' என்று நாம் சந்தேகக் கேள்வியைப் போட்டோம். கழுகார் நிமிர்ந்து உட்கார்ந்து செய்தி களைக் கொட்டத் தொடங்கினார்.

''மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கருணாநிதியை நித்தமும் தூங்க விடாமல் செய்து வரும் விவகாரம், 2ஜி ஸ்பெக்ட்ரம்தான். அவர் எந்த அளவுக்கு அவஸ்தையில் இருக்கிறார் என்றால்... இரண்டு வாரங்களுக்கு முன், நடுஇரவு நேரத்தில் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு கருணாநிதி போன் செய்தாராம். 'எங்களுக்கு ஒரு நீதி... மாயாவதிக்கு ஒரு நீதியா?’ என்ற அர்த்தத்தில் அந்த அமைச்சரிடம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாராம். 'வழக்குப் போட்டார்கள்... கைது செய்தார்கள்... அதற்குப் பிறகும் மத்திய அரசு எதற்கு இன்னமும் நெருக்கடியை கொடுக்க வேண்டும். மாயாவதி வேண்டும் என்பதற்காக அவருக்குச் சாதகமாக சுப்ரீம் கோர்ட்டில் லாகவமாக சி.பி.ஐ-யை நடந்துகொள்ளச் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு கோரிக்கை வைத்தால் மட்டும் கையை விரிக் கிறார்களே...’ என்பதுதான் தி.மு.க. தரப்பு ஆதங்கம். 'நான் பி.எம்-மிடம் பேசுறேன்’ என்று தலையைக் கோதிக்கொண்டபடி போனைக் கட் செய்தாராம் அந்த அமைச்சர். அந்த அளவுக்கு கருணாநிதிக்கு அவஸ்தை கொடுத்து வருகிறது ஸ்பெக்ட்ரம்!''

மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்

''அதில் தி.மு.க. அமைச்சர் எங்கே வருகிறார்?''

''கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தை வரவழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் கருணாநிதி.அறிவாலயத்தின் உள்ளே கருணாநிதியின் தனிஅறையில் இது நடந்துள்ளது. பொதுவாக, கருணாநிதியின் தனிஅறைக்கு ஸ்டாலின் வர மாட்டாராம். ஆனால் அப்போது, ஸ்டாலினும் இருந்துள்ளார், ஆ.ராசாவும் உடன் இருந்தார். 'கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் கைமாறியது’ என்பதை வைத்துத்தானே சி.பி.ஐ. தன்னுடைய கைதுப் படலத்தை நடத்தியது. கனிமொழி கைதாகி ஜாமீனில் வந்தார். தயாளு அம்மாள் சாட்சிப் படி ஏறினார். அந்த வழக்கில் கடந்த வாரத்தில் மிக முக்கியமான திருப்புமுனை. 'கலைஞர் டி.வி-க்குப் பணம் கொடுத்த கம்பெனிகள் போலி பெயர்களில் உள்ளன. அவர்களை முழுமையாக விசாரித்து விட்டோம்’ என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு முன்னால், வருமான வரித் துறையைக் கவனிக்கும் மத்திய அரசின் அதிகாரி ஒருவர் வாக்குமூலம் கொடுத்தார். 'இந்தக் கம்பெனிகளுக்கு எப்படிப் பணம் வந்தது என்று விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு போட்டுள்ளோம்’ என்று வாக்குறுதியும் கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார் அந்த அதிகாரி. 'இந்த அறிக்கை வந்தால், கலைஞர் டி.வி-க்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் அமையும். இதை, நிதித்துறை திரட்டுவது தி.மு.க.வுக்கு ஆபத்தானது’ என்று டெல்லியில் பேச்சு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையின் இணை அமைச்சராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த பழனிமாணிக்கம். அவருக்குத் தெரியாமல் நிதித்துறை அதிகாரிகள் இந்த முயற்சிகளை எடுப்பார்களா என்பதுதான் கருணாநிதியின் அதிர்ச்சி!''

''அப்படியா?''

''இப்படி ஒரு தகவல் கிடைத்ததும் கொதித்துப் போய்விட்டார் கருணாநிதி. பழனிமாணிக்கத்துக்கு போன் செய்து கொந்தளித்தாராம். 'இப்படி ஒரு கடிதம் எங்களது துறையில் இருந்து அனுப்பப்​படவில்லை’ என்று அவர் சொன்​னாராம். ஆனால், நிதித்துறை அமைச் சகம் அனுப்பிய கடிதத்தின் நகல் கருணாநிதியின் கைக்கு வந்துவிட்டது!''

''எப்படி?''

''ஆ.ராசாவின் கைங்கர்யம் என்கிறார்கள். கலைஞர் டி.வி-க்குப் பணம் கொடுத்த கம்பெனிகள் தொடர்பான விசாரணையை தொடங்கச் சொல்லி அமலாக்கத் துறைக்கு உத்தரவிடும் கடிதமாம் அது. அதை வைத்துக்கொண்டு பழனிமாணிக்கத்தை நேரில் வர உத்தரவு போட்டாராம் கருணாநிதி. மதியம் இரண்டு மணி நேரம் கருணாநிதி, ஸ்டாலின், பழனிமாணிக்கம் மூவரும் இருந்துள்ளனர். அதன் பிறகு, கருணாநிதி கிளம்பிப் போக... ஸ்டாலினும் பழனிமாணிக்கமும் இருந்துள்ளனர் அந்த அறைக்குள். 'தலைவரும் தளபதியும் கேட்கும்போது பழனிமாணிக்கத்தால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. இதில் நம் கையில் எதுவும் இல்லை... எல்லாமே பிரதமர் அலுவலகம்தான் செய்கிறது. நமக்குப் பல விஷயங்கள் தெரியாது என்றே அவர் சொல்லிக்கொண்டு இருந்தார்’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

'வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகள் ஆகியவை இவரது நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது. இவைதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இப்போது முக்கிய விசாரணை நடத்தி வரும் துறைகள். இந்தத் துறைகள் மூலம் எதிர்க்கட்சியினர் என்றில்லாமல் யாரையும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கலாம். அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தலாம். இவ்வளவு பவர்ஃபுல் துறையை கவனிக்கும் பழனிமாணிக்கம் எதையும் கண்டுகொள்ள மாட்டார். தான் உண்டு தன்வேலை உண்டு என்று நடமாடுவார். அவர் மனது வைத்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். அவ்வப்போது நிலவரத்தைத் தலைவரிடம் சொல்லி இருந்தால், அவர் காங்கிரஸ் தலைமையிடம் பேசி, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பார். எதையும் பழனி மாணிக்கம் செய்யவில்லை’ என்று அறிவாலயம் வட்டாரம் குமுறுகிறது!''

''பிரதமரின் கண்காணிப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையிலும் உள்ள முக்கியமான ஒரு வழக்கில் ஓர் அமைச்சரால் என்ன செய்துவிட முடியும்?''

''கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதுபற்றி நிதித்துறை உயர் அதிகாரிகள் நாடாளுமன்றக் கூட்டு குழு முன்பு ஆஜராகிக் கருத்து தெரிவித்தபோது, அந்தப் பணம் முழுக்க லஞ்சப் பணம் என்ற வார்த்தையைப் பதிவு செய்தனர். அதைக் கடுமையாக எதிர்த்து வாதாடி அந்தக் குறிப்பிட்ட வார்த்தையை அகற்றச் சொன்னார் குழுவின் உறுப்பினரான திருச்சி சிவா. 'பங்கு வாங்க முயற்சி செய்தார்கள். இரு தரப்புக்கும் சரிப்பட்டு வரவில்லை. வட்டியுடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர். இதற்குப் பெயர்

லஞ்சப் பணமா?' என்று குரலை உயர்த்த, குழுவின் தலைவரான பி.சி.சாக்கோ, அந்த அதிகாரிகளிடம் அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கு உரிய விளக்கம் கேட்டு பிரச்னையைத் தள்ளிவைத்தார். 'நிதித் துறையின் உயர் அதிகாரிகள் இதுமாதிரி விசாரணைக்குப் போகிறார்கள் என்றால், அதற்கு முன்பு, பழனிமாணிக்கம் அவர்களை அழைத்து, 'என்ன பேசப்போகிறீர்கள்?' என்று ஆலோசனை நடத்தியிருக்கலாம். அதிகாரிகள் தரப்பு முடிவைத் தெரிவிக்கும்போது, அதில் வார்த்தையோ, வரிகளோ முரண்பாடாகத் தெரிந்தால், திருத்தி இருக்கலாம். இதுமாதிரி பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்’ என்றும் தி.மு.க. வட்டாரம் வருத்தப்படுகிறது. இவை அனைத்தும் மொத்தமாக பழனிமாணிக்கத்தை பரேடு வாங்க வைத்துவிட்டது!''

''வருமானவரித் துறையின் அதிகாரிகள் அளித்த சாட்சியத்தால் கலைஞர் டி.வி-க்கு அதிகச் சிக்கலா?''

''நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன், மத்திய நேரடி வரி வாரிய சேர்மன் லஷ்மண்தாஸும் அவருடன் சீனியர் அதிகாரிகளும் ஆஜராகிப் பதில் அளித்தனர். அப்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டி.வி. வாங்கிய 200 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுப்பதற்காக பல்வேறு வழிகளில் பணத்தைத் திரட்டியிருக்கிறார்கள். அதில், கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட 18 நிறுவனங்களும் அடக்கம். அவை மூலமாக 52 கோடி ரூபாய் வந்ததாக கணக்குச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அந்த 18 நிறுவனங்களின் பூர்வீக விவரங்கள் ஏதும் இல்லை. அநேகமாக, அவை அனைத்தும் போலியாகத்தான் இருக்கும் என்ற சந்தேகத்தை அதிகாரிகள் கிளப்பி இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு,  வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. அப்போது சிக்கல் அதிகம் ஆகும் என்று நினைக்கிறார் கருணா நிதி. அதற்குள் பழனிமாணிக்கம் பதவிக்குச் சிக்கல் வந்துவிடும்'' என்ற கழுகார் அடுத்த நியூஸுக்குத் தாவினார்.

''ஆத்தூர் அருகே உள்ள ஆறகலூர் காமநாதீஸ்வரர் கோயிலில் உள்ள கால பைரவருக்கு ஆடி வெள்ளிக்கிழமை வரலஷ்மி விரதத்தில் சண்டி யாகம் செய்தால் தனக்கு எதிரான வினைகள் அனைத்தும் அழிந்து புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் என்பது ஐதீகம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை சேலம் அம்மா பேரவை பொறுப்பாளர் ஒருவர் இந்த யாகம் செய்தாராம். 'செங்கோட்டையன் உறவினரும், தீவிர விசுவாசியுமான ஓர் அமைச்சர்தான் இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். செங்கோட்டையன் மீது அம்மாவுக்கு இருக்கும் வருத்தம் குறைய வேண்டும்... எங்கள் அமைச்சர் பதவிக்கு இதனால் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் யாகம் செய்தோம்’ என்றும் சொன்னாராம்.  இதை அடுத்து கல்லேறிப்பட்டி முனியப்பனுக்கு கறி விருந்து படைத்தால் காலமெல்லாம் பதவி களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டதால், 25 ஆடுகள் வெட்டி அன்னதானமும் நடக்கிறதாம்!''

''ஓ!''

''அமைச்சர்கள் அத்தனை பேரும் ஒருவருக் கொருவர் கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி, 'அம்மா எப்போ சென்னைக்கு வர்றாங்க?’ என்பதுதான். சென்னைக்கு வந்தால் அமைச்சரவை மாற்றம் உறுதி என்று அர்த்தமாம். 12-ம் தேதி முதல்வர் சென்னை வரலாம் என்று தகவல். அதற்கு முன்னதாகவும் அவரது வருகை இருக்கலாம். சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிவைத்துப் பேசுவதற்கான உரை, கொடநாட்டில் தயாராகி வருகிறதாம்.''

''ம்!''

''கொடநாட்டில் இருந்து வந்ததும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு முதல்வர் தயாராகி விட்டார் என்கிறார்கள். முதல்கட்டமாக இரண்டு கவுன்சிலர்கள் வகித்துவந்த கட்சிப் பதவிகளில் இருந்து கட்டம் கட்டப்பட்டு உள்ளார்கள். அருள்வேல் என்ற ஆவின்அருள், துறைமுகம் பகுதிச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அலிகான் பஷீர் என்பவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளராக இருந்தார். இருவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. 'ரிப்பன் பில்டிங் லோகோவைப் பயன்படுத்தி போலிரசீது தயாரித்து பார்க்கிங் கட்டணம் வசூலித்தார்’ என்று அலிகான் பஷீர் மீது புகார் போனதாம். ஆவின் அருள் மீது கட்டப்பஞ்சாயத்துப் புகார்கள். இதைக் கேள்விப்பட்டுத்தான் இந்த நடவடிக்கை எடுத்தாராம் முதல்வர். 'சிறப்பான அதிகாரி ஒருவரை நியமித்து மாநகராட்சியை அவர் கையில் கொடுத்தால் என்ன?’ என்று முதல்வர் கொந்தளிக்கும் அளவுக்கு இன்னமும் அடங்காமல் அலைகிறார்களாம் ஆளும்கட்சி கவுன்சிலர்கள். அவர்களுக்குதான், கொடநாட்டில் இருந்து வந்ததும் சிக்கல்'' என்று சொல்லி பறந்தார் கழுகார்.

விஜிலென்ஸ் பிடியில் அபிஷேக் தீக்ஷித்!

 சென்னை கவர்னர் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக இருந்து 2011 டிசம்பரில் கிருஷ்ணகிரி எஸ்.பி-யாகப் பொறுப்புக்கு வந்தவர் அபிஷேக் தீக்ஷித். அங்கு, எட்டு மாதங்கள் பணியாற்றிய அவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை கமாண்டோ படை எஸ்.பி-யாக மாற்றப்பட்டார். சமீபத்தில், பெரியார் திராவிடர் கழகப் பிரமுகர் பழனி கொலை வழக்கில் அபிஷேக் தலைமையில் அமைக்கப்பட்ட 12 தனிப்படைகளும் சிறப்பாக செயல்படாததுதான் டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்

இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி திடீரென லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கிருஷ்ணகிரியில் முகாமிட்டனர். எஸ்.பி-யான அபிஷேக் தீக்ஷித், காலி செய்யாமல் இருந்த அரசு பங்களா மற்றும் கிருஷ்ணகிரி போலீஸில் எஸ்.ஐ-யாக இருந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அபிஷேக்கின் சொந்த ஊரான லக்னோவில் நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு ஆரம்பமானது.

ஒரு டீம் பர்கூரில் இருந்த எஸ்.ஐ-யான ராமச்சந்திரன் வீட்டில் காலை 7.30 மணிக்கே களம் இறங்கியது. மற்றொரு டீம் அபிஷேக் தீக்ஷித் பயன்படுத்தி வந்த அரசு பங்களாவுக்குள் நுழைய முயன்றது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், மாலை 6.45 வரை வளாகத்திலேயே காத்துக் கிடந்தார்கள். சென்னையில் இருந்து வந்து அபிஷேக் சாவியைக் கொடுத்த பிறகுதான் ரெய்டு தொடங்கியது.

இந்த ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''ஒரு மாதத்துக்கு முன், மாவட்ட போலீஸில் 80-க்கும் மேற்பட்டோருக்கு டிரான்ஸ்ஃபர் மற்றும் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார். எஸ்.ஐ-யான ராமச்சந்திரன் மூலம் அதற்காக பெரிய அளவில் பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இந்தத் தகவல் புகாராக வந்ததின் பேரில்தான் ரெய்டு நடந்தது. புகாருக்கு ஆதாரமாக எஸ்.ஐ-யின் வீட்டில் நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத ஒரு கிலோ தங்கம் மற்றும் ஐந்து கிலோ வெள்ளியையும் கைப்பற்றியுள்ளோம். எஸ்.பி வீட்டிலும் ரெய்டு முடித்து, ஆவணங்களைக் கொண்டு விசாரணை நடத்துவோம்'' என்று கூறினார்கள்.

படம்: எம்.தமிழ்ச்செல்வன்

மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்

 காமெடி எதுவும் பண்ணலியே!

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 30-ம் தேதி நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த், ''ஜனாதிபதி தேர்தலைப் போலவே, துணை ஜனாதிபதி தேர்தலையும் தே.மு.தி.க. புறக் கணிக்கும்'' என்றார். அப்போது அங்கிருந்த கட்சியின் தொண்டர் ஒருவர் 'களுக்’ என சிரித்து விட்டார். ''எம்.பி-க்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியும். எம்.பி-க்களே இல்லாத நம்ம கட்சி எப்படி துணை ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க முடியும். கேப்டன் தெரிஞ்சுதான் பேசுறாரா? இல்ல காமெடி கீமெடி பண்ணுறாரா?'' என்று உரக்கவே கமென்ட் அடித்தார்.

மிஸ்டர் கழுகு: கதறும் கருணாநிதி... பதறும் பழனிமாணிக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு