பிரீமியம் ஸ்டோரி
##~##

'கட்சிக்கு உழைக்கிறவனைப் புறக்கணிச்சுட்டு, அவங்க இஷ்டப்பட்டவங்களுக்கு பதவிகளைக் கொடுத்தா... அப்புறம் நாமெல்லாம் எதுக்குய்யா பதவியில இருக்கணும்? பேசாம, எல்லாரும் பதவியை உதறிட்டு சாதாரணத் தொண்டனாய் இருப்போம்’ - ஜப்பானில் இருந்து அழகிரி அனுப்பி இருக்கும் இந்த அதிரடித் தகவல்தான் தி.மு.க. கோட்டைக்குள் இப்போது பரபரப்புச் செய்தி! 

'மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு அழகிரி விசுவாசிகள் கடந்த வாரம் அறிவாலயம் வந்துவிட்டுப் போனதை கடந்த இதழில் கழுகார் சொல்லி இருந்தார். அந்தப் பயணத்தின் நோக்கம் தங்களுக்குச் சாதகமாக அமையாது என்பதை விசுவாசிகள் தெரிவித்ததை அடுத்தே, அழகிரியிடம் இருந்து இந்த அதிரடி மெசேஜ்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க. முக்கியப் பொறுப்​பாளர் ஒருவர், ''நாங்க தலைவரைப்

அழகிரி ராஜினாமா?

போய்ப் பார்த்து குறைகளைச் சொல்றதுல அழகிரி அண்ணனுக்கு விருப்பமே இல்லை. 'தென் மண்டல அமைப்புச் செயலாளர்னு என்னைப் போட்டிருக்காங்க. தென் மண்டலத்துல எனக்கே தெரியாம என்னென்னமோ நடக்குது. அவங்க நினைச்சா ஆட்களை நியமிக்கிறாங்க; நினைச்சா பதவியைவிட்டுத் தூக்குறாங்க. எனக்குத் தகவல்கூட சொல்றது இல்லை. தென் மாவட்டப் 'பெரிய’ மனுஷன்  ஒருத்தரு, தேர்தல் செலவுக்காக தலைமையில் இருந்து கொடுத்த பணத்தை வேட்பாளர்களுக்குப் பிரிச்சுக் குடுக்கவே இல்லை. இது தலைமைக்கும் நல்லாத் தெரியும்; நானும் புகார் செஞ்சிருக்கேன். அந்த ஆள் மேல என்ன நடவடிக்கை எடுத்தாங்க? மதுரை மாநகராட்சி வார்டு தேர்தல்ல கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டவங்க மேல் நடவடிக்கை எடுங்கன்னு சொன்னேனே; எடுத்தாங்களா? மொத்தத்துல கட்சி இப்ப இருக்கிற நிலைமை நல்லா இல்லை. அதனால நீங்க போயி தலைவரைப் பார்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை’னு அண்ணன் சொன்னார். நாங்க ரொம்பவும் வற்புறுத்தின பின்னாடிதான், தலைவரைச் சந்திக்க எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் குடுத்தார்'' என்று சொன்னார்.

அறிவாலயம் சென்று வந்த இன்னொரு பொறுப்​​பாளரோ, ''மொத்தம் 17 பேர் போயிருந்தோம். முன்னாள் மேயர் மன்னன் முன்னி​லையில், 25-ம் தேதி சாயந்தரம் தலை​வரைப் பார்த்தோம். 'வந்துட்டீங்​களாப்பா?’னு ஜாலியாக் கேட்டவர், 'நாளைக்குப் பேசிக்கலாம்’னு அனுப்பிட்டார். மறுநாள் காலையில் தலைவரைச் சந்திச்சு, 'தளபதி ஸ்டாலினையும் அழகிரி அண்ணனையும் நாங்க வேற்றுமை இல்லாமத்தான் பார்க்கிறோம். ஆனா, கட்சிக்குள் குழப்பம் விளைவிச்சுக் குளிர்காய நினைக்கிற சிலர் ட்விஸ்ட் பண்ணிவிடுறாங்க’னு சொன்னோம். 'அப்ப ஏன்யா மதுரைக்கு வந்த ஸ்டாலினை புறக்கணிச்சீங்க?’னு தலைவர் கேட்டார்.

அப்பத்தான், நாங்க கொண்டுபோயிருந்த கடிதத்தைக் குடுத்தோம். 'நாங்க எல்லாரும் 30 வருஷமா அழகிரி அண்ணனைச் சார்ந்தே இருந்துட்டோம். அவரைப் புறக்கணிச்சிட்டு அவமரியாதை செய்ற மாதிரி ஒரு கூட்டத்தை மதுரையில் ஸ்டாலினைவெச்சு ஏற்பாடு செஞ்சார் மாநகரச் செயலாளர் தளபதி. அந்த மன வேதனையில்தான் நாங்க கூட்டத்தில் கலந்துக்கலை. அதுக்காக வருத்தம் தெரிவிச்சிக்கிறோம்’னு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்துட்டு, மதுரை மாவட்டச் செயலாளர் தளபதியோட பிரித்தாளும் சதிகளையும் எடுத்துச் சொன்னோம். கட்சிக்காரங்களை தளபதி கண்டுக்​

அழகிரி ராஜினாமா?

கிறதே இல்லை. மூணு மாசமா கட்சி ஆபீஸ் பூட்டியே​​கிடக்குது. ஏதாச்சும் கேட்டா, 'நான்தான் ராஜினாமா கொடுத்துட்​டேன்ல, தலைமை என் மேல நடவடிக்கை எடுக்கட்டும்’னு ஒரே போடா போடுறார். தலைமை அறிவிச்ச சிறை நிரப்பும் போராட்டத்தை மதுரையில் தனித்தனியா நடத்திப் பிசுபிசுக்கவெச்சதே தளபதிதான். டெசோ மாநாடு குறித்து இதுவரைக்கும் வாயே திறக்கலை. அவர் இதுக்கு மேலயும் பதவியில் இருக்கணுமான்னு தலைமைதான் முடிவு எடுக்கணும்’னு சொன்னோம்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் எங்களுக்காக நேரம் ஒதுக்கி எல்லாத்தையும் கவனமாக் கேட்டுக்கிட்ட தலைவர், பொதுச் செயலாளர்கிட்ட பேசி நல்ல முடிவு எடுப்போம்யா... போயிட்டு வாங்க’னு பரிவா அனுப்பிவெச்சார்.

'தளபதி ஸ்டாலினையும் பாத்துட்டுப் போறோம்’னு தயங்கியபடி நாங்க சொன்னதுக்கு, 'தாராளமாப் பாத்துட்டுப் போங்கய்யா’ன்னார். தலைவர் எங்ககிட்ட பேசுன மாதிரி தளபதி பேசலை. வருத்தத்தோடவே மதுரைக்கு ரயில் ஏறிட்டோம். சென்னையில்  நடந்த எல்லாவற்றையும் அண்ணன்கிட்ட தெரிவிச்சோம். 'இதுக்குத்தான் உங்களைப் போக வேண்டாம்னு சொன்னேன்’னு கோபப்பட்டார். 'அவங்க இஷ்டப்பட்டவங்​களுக்கே பதவிகளை கொடுத்துக்கட்டும். நீங்களும் கட்சிப் பதவிகளை ராஜினாமா பண்ணிருங்க; நானும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா பண்ணிடுறேன். அவங்க யாரை வெச்சுனாலும் கட்சியை நடத்திக்கட்டும்’னு சொன்னார். 'அவசரப்பட வேண்டாம்ணே... ஜப்பான்ல இருந்து வந்ததும் தலைவரை சந்திச்சு ராஜினாமா முடிவைச் சொல்​லுங்க. அதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லைன்னா, ஒரு முடிவுக்கு வரலாம்’னு சொல்லிவெச்​சிருக்கோம். ஆகஸ்ட் முதல் தேதி அண்ணன் சென்னைக்கு வந்ததும் நிச்சயம் பிரளயம் வெடிக்கும்'' என்கிறார்.

அழகிரி விசுவாசிகள் வருத்தப்பட்டு வண்டி ஏறும்படி ஸ்டாலின் அப்படி என்னதான் சொன்​னார்? ஸ்டாலின் விசுவாசப் பொறுப்பாளர் ஒருவரின் வாயைக் கிண்டினோம். ''இங்கிருந்து போனவங்க மதுரையில் ஸ்டாலின் கலந்துக்கிட்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணிச்சதுக்கு வருத்தம் தெரிவிச்சு ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்டிருக்காங்க. 'நான் யாரு உங்களை மன்னிக்கிறதுக்கு? எதுக்காக உங்களை மன்னிக்கணும்?’னு கேட்டிருக்கார். 'நீங்க கலந்துக்​கிட்ட கூட்டங்களுக்கு நாங்க வரலை... அதுக்காகத்தான்’னு சொல்லிருக்காங்க. 'உங்களை நான் அந்தக் கூட்டத்துக்கு கூப்பிடவே இல்லையே’னு சொன்ன ஸ்டாலின், 'நீங்க கூட்டத்துக்கு வராததும் தெரியும்... வந்தவங்களை வரவிடாமத் திருப்பி அனுப்பியதும் எனக்குத் தெரியும்’னு முகத்தை இறுக்கமாவெச்சிக்கிட்டு சொல்லிருக்கார்.

'இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம், 30 வயசுக்கு மேற்பட்டவங்களையும் தன்னோட சாதிக்​காரங்களையும் இளைஞர் அணிப் பொறுப்புக்கு சிபாரிசு பண்ணிருக்கார். அதை எல்லாம் கேன்சல் பண்ணிட்டு, அண்ணன் ஊரில் இருக்கும்போது மறு​படியும் நேர்காணல் நடத்தி தகுதியான நபர்களை இளைஞர் அணிக்குத் தேர்வு செய்யணும்’னு அழகிரி ஆளுங்க சொன்னதை வேண்டாவெறுப்பாக் கேட்டுக்​கிட்டவர், 'நீங்க யாரு சொல்லி வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். இளைஞர் அணி நியமனங்களில் யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. யாரும் என்னை ஏமாத்தவும் முடியாது; யார்கிட்டயும் நான் ஏமாறவும் மாட்டேன்.  போயிட்டு வாங்க’னு பேச்சை கட் பண்ணி அனுப்பிட்டாராம்'' என்று சொன்னார் அந்த ஸ்டாலின் விசுவாசி.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மதுரைக்குள் ஸ்டாலின் அணியைப் பலப்படுத்திவிட வேண்டும் என்பதில் அழகிரியால் ஓரங்கட்டப்பட்ட சீனியர்கள் சிலர் மெனக்கெடுகிறார்கள். இவர்களில் சிலர் ஒன்றுகூடி ரகசியக் கூட்டம் போட்டதாகச் சொல்லப்​படும் நிலையில், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்திக்கு எதிராக தலைமைச் செயற்குழு உறுப்​பினர்கள் இரண்டு பேர், ஒன்றியச் செயலாளர்கள் மூன்று பேர் உள்பட 17 பேர் கட்சித் தலைமைக்கு புகார் மனு அனுப்பிய விவகாரம் அழகிரியை மேலும் கடுப்பேற்றி இருக்கிறது. 'ஸ்டாலின் விசுவாசியான மாவட்டச் செயலாளர் தளபதி மீது நடவடிக்கை எடுத்தால், அழகிரி விசு​வாசியான மூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கணும்’ என்ற சூட்சுமம் இந்தப் புகாரின் பின்னணியில் இருப்பதாகச் சொல்​கிறார்கள்.

'கட்சிக்குத் தலைவர் கலைஞர்தான் என்றாலும், எனக்கு அரசியல் குரு அண்ணன் இசக்கிமுத்துதான்’ என்று அழகிரியால் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டவர் மதுரை​யின் முன்னாள் அவைத் தலைவர் இசக்கிமுத்து. ஸ்டாலின் விவகாரத்தில் அழகிரிக்காக வக்காலத்து வாங்கப்போய், அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவே தகுதி அற்றவராகச் சொல்லி நீக்கியது தலைமை. கட்சிக்காக 45 ஆண்டுகள் உழைத்து 18 முறை சிறை சென்ற இந்த உண்மை விசுவாசியையே அழகிரியால் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர முடியவில்லை. அதே சமயம், ராஜினாமா கடிதம் கொடுத்த மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும், இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமும் இன்னமும் பதவியில் நீடிக்கிறார்கள். அழகிரியின் அதிகாரத்தால் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நியமனத்திலும் ஸ்டாலின் கையே ஓங்கினால் என்னாவது என்பதுதான் அழகிரி ஆட்களின் ஆத்திரம்!

அடுத்த மூவ் குறித்து முடிவெடுப்பதற்கு அண்ணனின் வரவுக்காகக் காத்திருக்கிறது அழகிரி தி.மு.க!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு