Published:Updated:

5 star சத்தியாகிரகம்: ராம்தேவ் மீது திக்விஜய் தாக்கு!

புதுடெல்லி, ஜூன் 4,2011

5 star சத்தியாகிரகம்: ராம்தேவ் மீது திக்விஜய் தாக்கு!

ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, 'ஃபைவ் ஸ்டார் சத்தியாகிரகம்' என சாடியிருக்கிறார், காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங். ##~~##

ராம்தேவின் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவரை ஆரம்பம் முதலே கடுமையாக தாக்கிப் பேசிவரும் திக்விஜய் சிங், பாபா ராம்தேவுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. உறுதுணையாக இருப்பதை கோடிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், "பாபா ராம்தேவின் நம்பகத்தன்மை இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி மற்றும் வி.எச்.பி.யிடம் இருந்து அவர் தற்போது வெளிப்படையாகவே ஆதரவு பெற்று வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆகியவை இணைந்து முடுக்கிவிட்டதன் காரணமாகவே ராம்தேவ் இவ்வாறு இயங்கிவருகிறார். தங்கள் வன்முறைப் போக்கில் இருந்து மக்களை திசைத் திருப்பவே அவர்கள் ராம்தேவை ஆதரித்துள்ளனர்.

ஜெட் விமானத்தில் பறக்கும் பாபாவின் சத்தியாகிரகம் எத்தகையது என்பதை தெளிவாக்குகிறது. ஐந்து நட்சத்திர ஓட்டலில் கிடைக்கின்ற வசதிகளுடன் அவர் நடத்தி வருவது சத்தியாகிரகமா? தமது போராட்ட நோக்கம் குறித்தே அவருக்கு எதுவும் தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் வி.எச்.பி.யின் 'படைவீரர்கள்' சூழ்ந்திருக்கும் நிலையைப் பார்த்தாலே அவரது சத்தியாகிரகத்தின் லட்சணம் தெரியும்," என்று சாடினார் திக் விஜய் சிங்.

முன்னதாக, 'பாபா ராம்தேவ் என்பவர் ஒரு சந்நியாசி அல்ல; தொழில் வியாபாரி' என்று அவர் வருணித்திருந்தது கவனத்துக்குரியது.

ராம்தேவுக்கு அண்ணா ஹஸாரே ஆதரவு தெரிவித்திருந்ததையும் சாடிய அவர், "அண்ணா ஹஸாரே தன்னை ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. மற்றும் பி.ஜே.பி.யுடன் இணைத்துக்கொண்டாரே என்பது தெரியவில்லை," என்றார்.