ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

கழுகார் பதில்கள்!

பிரேமானந்தா, நித்தியானந்தா - இருவரையும் ஒப்பிட முடியுமா?

இருவருமே பெண்களால் காட்டிக்கொடுக்கப்​பட்டவர்கள். லிங்கம் எடுத்து பிரபலம் ஆனார் பிரேம்ஸ். லிங்கம் அமைத்துப் பெருமையைக் கூட்டிக்கொண்டார் நித்தி. ஆனால், நித்தி அளவுக்கு பிரேமானந்தாவுக்கு மார்க்கெட்டிங் தெரியாது. இருவருமே வாய் இனிக்கப் பேசுவார்கள். மரணப் படுக்கையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்தபோது கூட, 'ராஜா... ராஜா.... எனக்கு எதுவுமே தெரியாது ராஜா!’ என்று கெஞ்சிக்கொண்டு இருந்தார் பிரேமானந்தா. இப்போது மீடியா முன்னால், 'ஐயா.... அப்படி இல்லீங்கய்யா.... இப்படிய்யா’ என்று நித்தி கெஞ்சுவதைப் பார்க்கும்போது, அதுதான் ஞாபகம் வருகிறது.

பிரேமானந்தாவுக்கு இரட்டைஆயுள் தண்டனை கிடைத்தது. நித்தியானந்​தாவுக்கு இப்போதைய ஆயுளே தண்ட​னையாக குடைச்சல் கொடுக்கிறது!

 முருகேசன், திருவள்ளூர்.

கழுகார் பதில்கள்!

ஆங்கிலேயர் வந்த பிறகுதான் நாம் நாகரிகம் அடைந்தோம் என்று சிலர் சொல்கிறார்களே?

##~##

இதை ஆங்கிலேயர்களே ஏற்றுக்​கொள்ள மாட்டார்கள். சென்னை அண்ணா சாலையின் தொடக்கத்தில் குதிரை மீது கம்பீரமாக நிற்கும் சர்.தாமஸ் மன்றோ இதற்கான பதிலைச் சொல்லி இருக்கிறார்.

'இந்திய மக்களை நாகரிகம் உடையவர்களாக மாற்ற வேண்டும் என்று சிலர் சொல்வது எனக்குப் புரியவில்லை. ஒரு நல்ல அரசாங்கத்தை உருவாக்கும் கொள்கையிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் அவர்களிடம் குறைபாடு இருக்கலாம். ஆனால், நல்ல வேளாண்மை முறை, ஈடு இணையற்ற உற்பத்தித் திறன், எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துதல், அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்ளுதல், விருந்தோம்பல், பெண்களிடம் நளினமாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்ளுதல் போன்றவைதான் நாகரிகத்தின் அடையாளங்கள் என்றால், இந்திய மக்கள் நாகரிகத்தில் ஐரோப்பியர்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை’ என்று சொன்னார் மன்றோ.

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

அரசியல்வாதிகள் நினைப்பதெல்லாம் நடந்தால்..?

இப்போது என்ன நடக்கிறது... அரசியல்​வாதிகள் நினைப்பதுதானே! அவர்கள் எதைக் காட்டுகிறார்களோ அதைத் தலைமைச் செயலகம் என்று தலை ஆட்டுகிறோம். அவர்கள் எதை புத்தாண்டு என்கிறார்களோ, அதைக் கொண்டாடுகிறோம். டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் தலைநகரை மாற்றிக்கொண்டு இருந்தவரை காமெடியன் என்​கிறோம். இப்போது நடப்பதும் அதுதானே!

 சங்கீதா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

கழுகார் பதில்கள்!

மருத்துவர் ராமதாஸிடம் தங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

மதுவுக்கு எதிராக மருத்துவர் செய்துவரும் தொடர் பிரசாரம்!

 பஞ்சவண்ணமகன், கருப்பம்​புலம்.

கழுகார் பதில்கள்!

சோனியாவுக்கு, பிரதமர் ஆசையே கிடையாதா?

2004 மே மாதத்துடன் அந்த ஆசை சோ​னியா​வுக்குப் பறந்து விட்டது. இப்போது, மகனை உட்கார வைத்துப் பார்க்கும் பேராசை மட்டுமே இருக்கிறது!

 இரா.வளன், புனல்வாசல்.

கழுகார் பதில்கள்!

அரசியல் நடிகனுக்கும் சினிமா நடிகனுக்கும் என்ன வித்தியாசம்?

சினிமா நடிகர்கள் ஐந்தாறு டேக் வாங்கு​கிறார்கள். ஆனால், அரசியல் நடிகர்​களோ ஒத்திகையே இல்லாமல் பிய்த்து உதறு​​கிறார்கள்.

 எஸ்.சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்!

'பிரதமருக்குத் தவறான தகவலை ஆ.ராசா தெரிவித்தார்’ என்று சி.பி.ஐ. மீண்டும் குற்றம் சாட்டி உள்ளதே?

ஆ.ராசா சொன்னது தவறான தகவல் என்று இப்போதாவது பிரதமருக்குத் தெரியுமா? அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லையே!

 புயல். சிவக்குமார், பவித்திரமாணிக்கம்.

கழுகார் பதில்கள்!

மேலும் மேலும் வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறாரே வீரபாண்டி ஆறுமுகம்?

மேலும் மேலும் தப்பு பண்ணுவதாகச் சொல்​கிறார்கள். சேலம் அங்கம்மாள் காலனி இடம் அவரது பெயரைச் சொல்லி ஆக்கிரமிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த இடம் மீட்கப்​​​பட்டது. ஆட்சி மாறிவிட்டது என்பதால், அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் குடிசைகளை நடுராத்திரியில் கொளுத்தி​யதாகச் சொன்னார்கள். இதுதான் குண்டாஸுக்கு அடித்தளம் அமைத்தது.

பொதுவாகவே, சேலம் மாவட்​டத்தை ஆறுமுகம் ஆதர​வாளர்கள், 'வீரபாண்டியார் மாவட்டம்’ என்றுதான் அழைப்பார்கள். அது, தி.மு.க-வுக்குச் சரியாக இருக்​கலாம். அதை ஜெய​லலிதாவும் ஏற்றுக்கொள்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

 ஆர்.சுஜிதா, கம்பம்.

கழுகார் பதில்கள்!

ராகுல், பிரதமர் ஆவதற்குத் தடையாக இருப்பது யார்?

பிரதமராக இருப்பவர்​தான்!

 அல்லிராஜ், கோவை-15.

கழுகார் பதில்கள்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா?

இது கருணாநிதி பதில் சொல்ல வேண்டிய கேள்வி. மூவருடைய தூக்குக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அவர். ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்துபவர் அவர். பிரணாப் முகர்ஜியை முன்மொழிந்தவர் அவர். இந்த மூன்று தகுதிகளின் அடிப்படையில் கருணாநிதியே இதற்குப் பதில் சொல்லத் தகுதி ஆனவர்!

 மு.நடராஜன், திருப்பூர்-7.

கழுகார் பதில்கள்!

கடினமான பொருளாதாரச் சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளாரே?

 தேசிய மாதிரி சோதனை நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ.) வெளியிட்டுள்ள ஆய்வைப் படித்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இந்த ஆய்வைச் நடத்தியுள்ளனர். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் தினசரி வருமானம் ரூ.28.65 என்று அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால், நடைமுறையில் இதைவிடக் குறைவாக உள்ளதாகவே இந்த ஆய்வு சொல்கிறது. கிராமத்தில் தினமும் 17 ரூபாய் வருமானத்தில் வாழ்பவர்கள் 10 சதவிகிதம் பேர் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

ஏழை அடிமட்ட ஏழையாகவும், பணக்காரர் பெரும் பணக்காரர் ஆகவும் மட்டுமே இந்தச் சீர்திருத்தங்கள் அமைந்துள்ளன. இந்தியா இன்னும் என்ன ஆகவேண்டும் என்று ஒபாமா எதிர்பார்க்கிறாரோ!

 குமணன், நெல்லை.

கழுகார் பதில்கள்!

சங்மாவுக்கு கிடைத்த தோல்வி, பி.ஜே.பி-க்கு பின்னடைவுதானே?

இதில் பி.ஜே.பி. தந்திரமாகத் தப்பி விட்டது என்று​தான் சொல்ல வேண்டும். லாகவமாக அவர்கள் ஜெயலலிதாவை மாட்டிவிட்டுத் தப்பி விட்டார்கள். மோடியும் நவீன் பட்நாயக்கும் சும்மா சும்மா வந்து இவரைச் சந்தித்து உசுப்பேற்றி, சங்மாவை வேட்பாளராக அறிவிக்க வைத்தனர். இதன்மூலம், அகில இந்திய பிரபல்யம் கிடைக்கும் என்று நினைத்து ஜெயலலிதாவும் அவசரப்பட்டுவிட்டார். தங்களுக்கு எந்த அக்கறையும் இல்லாதது மாதிரி சங்மாவை ஆதரித்த பி.ஜே.பி., அவரை வெற்றி பெறவைக்கும் ஆர்வத்துடன்கூட செயல்படவில்லை.

டெல்லி அரசியலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஜெயலலிதாவின் முதல் அசைன்மென்ட் ஃப்ளாப் ஆனதுதான் மிச்சம்!

கழுகார் பதில்கள்!