ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!

##~##

''அறிவாலயம் அறைக்குள் நடந்த ஸ்பெக்ட்ரம் விசாரணை குறித்து கடந்த இதழில் நீர் சொன்ன தகவல்கள் பலத்த அதிர்வலைகளை எழுப்பி உள்ளது போலும்!'' என்றதும் புன்னகைத்தார் கழுகார். 

''கடந்த இதழில் உமது நிருபர், 'அடுத்த மூவ் குறித்து முடிவெடுப் பதற்கு அண்ணனின் வரவுக்காகக் காத்திருக்கிறது அழகிரி தி.மு.க!’ என்று எழுதி முடித்திருந்தார். ஆனால், அழகிரி மதுரையில் லேண்ட் ஆவதற்கு முன்பாகவே அமர்க் களப்பட்டுப்போனது மதுரை தி.மு.க.'' என்று ஆரம்பித்தார்!

''மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதிக்கு எதிராக அழகிரி அணியினர் கருணாநிதி வரை புகார் வாசித்த கதையை நானே உமக்குச் சொல்லி இருந்தேன். இதனால் உஷாரான தளபதி, டெசோ மாநாடு குறித்துப் பேசுவதற்காக அவசரமாக ஜூலை 31-ம் தேதி மாவட்டக் கழகக் கூட்டத்தைக் கூட்டினார். இதை அறிந்த மன்னன் உள்ளிட்ட அழகிரி ஆட்கள் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே ரகசிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். 72 வட்டச் செயலாளர்களில் 68 பேரும் ஒன்பது பகுதிச் செயலாளர்களில் எட்டுப் பேரும் தளபதியையும் தவிர்த்து மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் இந்தக் கூட்டத்தில் ஆஜரானார்கள்.''

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!

''பலம் அழகிரிக்குத்தானோ?''

''மதுரையில் அவருக்குத்தான். 'அண்ணனை மதிக்காத தளபதி கூட்டும் டெசோ மாநாட்டு ஆலோசனைக்

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!

கூட்டத்துக்கு நாம் யாரும் போகக் கூடாது. அவர் யாரை வேண்டுமானாலும் வைத்துக் கூட்டம் நடத்தட்டும்’ என்று அந்தக் கூட்டத்தில் சிலர் பேசினார்களாம். இன்னும் சிலரோ, 'கூட்டத்தை நடத்த விடாமல்  தளபதி யிடம் போய்த் தகராறு செய்வோம்’ என்று ஆவேசப்பட்டார்களாம். அவர்களைச் சாந்தப்படுத்திய பொறுப்பாளர்கள், 'நாம் போய் தகராறு செய்தால், போலீஸை வெச்சு ஆளும் கட்சி கேம் ஆடிடும். டெசோ மாநாட்டுக்கு மதுரையில் இருந்து நாம் தனிப்பட்ட முறையில் ஆட்களைத் திரட்டிக் கொண்டுபோய் அண்ணனோட பலத்தை நிரூபிப்போம்’ என்று சொன்னார்களாம். முடிவில், 'யாரையும் கலந்து பேசாமல் தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்படும் தளபதி மீது தலைமை உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இயக்கப் பணிகள் சிறப்பான முறையில் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தை எழுதி, வந்திருந்த அத்தனை பேரிடமும் கையெழுத்து வாங்கினர். அந்தத் தீர்மானத்தைத் தலைமையிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் சிவக்குமாரை சென்னைக்கு ரயில் ஏற்றினார்கள்.''

''ரயில்வே துறைக்கு நல்ல வருமானம்!''

''சிவக்குமாரிடம் இருந்த தீர்மான நகலை வாங்கிப் படித்த கருணாநிதி, 'இப்போதைக்கு எதுவும் பேச முடியாது. டெசோ மாநாடு முடிந்த பிறகு மதுரைப் பிரச்னைக்கு ஒரு முடிவு எடுப்போம்யா’ என்று மட்டும் சொல்லி அனுப்பினாராம்.''

''தளபதி ஆலோசனைக் கூட்டம் என்ன ஆச்சு?''

''31-ம் தேதி டெசோ மாநாட்டு ஆலோசனைக் கூட்டத்தை திட்டமிட்டபடி கூட்டினார் தளபதி. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, வி.கே.குருசாமி, தணிக்கைக் குழு உறுப்பினர் குழந்தைவேலு, தீர்மானக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மாநகர் மாவட்ட இளைஞர் அணி  அமைப்பாளர் ஜெயராம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களும் அழகிரி தரப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஒன்றிரண்டு வட்டச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். இத்தனை நாளும் அழகிரி புகழ் பாடிவந்த சிலர், இந்தக் கூட்டத்தில் அவருக்கு எதிராகப் பொங்கி வெடித்தது ஸ்டாலின் தரப்பே எதிர்பார்க்காத திகில் திருப்பம்.''

''யாராம்?''

''முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமியும் ஜெயராமும் பேசி இருக்கிறார்கள். ஆனால், வி.கே.குருசாமிதான் அழகிரியைக் கடுமையாகத் தாளித்தார். 'தளபதி

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!

ஸ்டாலின்தான் எதிர்காலத்தில் கட்சியை வழி நடத்தப்போறார்னு தலைவரே சொல்லிட்டார். அதனால நாங்க ஸ்டாலின் அணிதான். தனக்கு எதிரா போலீஸ்ல வழக்கு இருக்குன்னு தெரிஞ்சிருந்தும் துணிச்சலா டி.ஜி.பி. ஆபீஸுக்குப் போய், 'என்னைக் கைது பண்ணுங்க’னு சொன்னவர் தளபதி ஸ்டாலின். அவரை விட்டுட்டு, வழக்குக்குப் பயந்துக்கிட்டு மாமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கே வராமப் படுத்துக்கிட்டவங்க பின்னால போறதுக்கு இனியும் நாங்க தயாராக இல்லை’ என்றாராம் அவர். பொன்.முத்துராமலிங்கம் பேசும்போது, 'கிராமங்கள்ல மழைக்காலத்தில் இடி இடிச்சா, 'அர்ச்சுனன் பேர் பத்து... அர்ச்சுனன் பேர் பத்து’னு சொல்வாங்க. ஆனா, மதுரையில எதுக்கு எடுத்தாலும் 'அர்ச்சுனன் பத்து... அர்ச்சுனன் பத்து’னு சொல்லியே பயமுறுத்துறாங்க. இப்ப என்ன இடி இடிக்குதா... இல்லை மழை பெய்யுதா? பின்ன எதுக்குய்யா தொட்டதுக்கெல்லாம் 'அர்ச்சுனன் பத்து’ சொல்றீங்க? அதை விட்டுட்டு கட்சிப் பணிக்கு வாங்கய்யா. இந்தப் போர்வையில இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போறீங்க? இந்தத் தவறுகளை எல்லாம் கண்டிக்காம விட்டா, நான் 20 வருஷம் மாவட்டச் செயலாளரா இருந்ததுல அர்த்தமே இல்லை. உங்களுக்குக் குறைகள் இருந்தா, இந்தக் கூட்டத்துல வந்து சொல்லுங்க. தவறு இருந்தால், தளபதியை இதே மேடையில் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறோம். அதைவிட்டுட்டு போட்டிக் கூட்டம் போடுறது கட்சிக்கும் நல்லது இல்லை... உங்களுக்கும் நல்லது இல்லை. எனக்குப் பின்னால் கட்சியை வழி நடத்துபவர்னு தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாலின் பின்னால போகாம எங்களை வேற யாரு பின்னால போகச்சொல்றீங்க?’னு பொன்.முத்துவும் ஒரு பிடி பிடிச்சிட்டார். மொத்தத்தில் அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!''

''அழகிரி ரியாக்ஷன்?''

''மதுரைக்கு வந்ததுமே, 'தனக்கு எதிராகச் செயல்படும் தளபதி, பொன்.முத்து உள்ளிட்ட 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர் மாவட்டக் கழகத்தைக் கலைத்துவிட்டு புதிதாகப் பொறுப்புக் குழு போட வேண்டும்’ - என்று இரண்டு அதிரடி அஸ்திரங்கள் வீசுவார் என்கிறார்கள்!'' என்ற கழுகார் அடுத்து கொடநாட்டுப் பக்கம் தாவினார்!

''கொடநாடு விசிட்டை முடித்து சென்னைக்குக் கிளம்பும் மூடுக்கு வந்துவிட்டார் முதல்வர். சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றுவதற்கு வசதியாக ஆகஸ்டு 12 அல்லது 13 கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, எஸ்டேட் பங்களாவில் நடந்துவரும் ஆயத்தப் பணிகளை பார்த்தால் ஒரு வாரம் முன்னதாகவே... அதாவது வரும் 5 அல்லது 6 தேதிகளில் கிளம்பிவிடுவார் என்றே தெரிகிறது. பங்களாவில் பணிபுரியும் அதிகாரிகள் வட்டாரத்திலும் பேச்சு அப்படித்தான் இருக்கிறது. இவ்வளவு சீக்கிரம் முதல்வர் கிளம்புவதற்கான முக்கியக் காரணமாக துணை ஜனாதிபதித் தேர்தலை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக சில அறிவுரைகளைக் கூற அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் கூட்டம் அனேகமாக வரும் 6-ம் தேதி நடத்தப்படலாம் என்கிறார்கள். கிளம்பும் முடிவுக்கு வந்துவிட்டதால், சில அப்பாயின்ட்மென்ட்கள் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீலகிரி சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நீலகிரித் தோட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு காசோலை வழங்கிய கையோடு, கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். ஜெயலலிதா கொடநாட்டில் இருக்கும்போது மாற்றுக் கட்சியினர் சிலரை அழைத்துவந்து அவர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்க்கும் சம்பிரதாயம் நடைபெறுவது வழக்கம். இந்த முறையும் அப்படியே நடந்தேறியது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 60 பேரை மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் அழைத்து வந்து முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைத்தார்.''

''கட்சி மற்றும் ஆட்சி வேலைகளையும் அங்கிருந்தே கவனிக்கிறார் என்று சொல்லும்!''

''ரிலாக்ஸ்டான சூழல் தரும் புத்துணர்வில் இருக்கிறார் முதல்வர். டிரைவிங்கில் நாட்டம் உடைய ஜெ., கடந்த சில நாட்களுக்கு முன் மஹேந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யூ.வி. 500 காரை எடுத்து டெஸ்ட் டிரைவ் பார்த்ததாகச் சொல்கிறார்கள். சசிகலா அடிக்கடி குன்னூர் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு சர்ப்ரைஸ் ஷாப்பிங் சென்று வருவதும் நடக்கிறது. சந்தோஷ மூடில் இருக்கும் முதல்வரை சிறிது அப்செட் ஆக்கிய தகவல் ஒன்று உண்டு. அதாவது பருவ மழை தவறி இருப்பதால், பரவலாக ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சம் குறித்து அறிக்கை ஒன்றைக் கேட்டு வாங்கி இருக்கிறார் முதல்வர். அதில், தான் தங்கியிருக்கும் கொடநாட்டுக்கு அருகில் இருக்கும் கோத்தகிரி பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையும், கடந்த 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் தனியாரிடம் இருந்து ஒரு குடம் தண்ணீரை ஐந்தாறு ரூபாய் கொடுத்து மக்கள் வாங்கும் அவலமும் தெரிய வந்ததாம். இதெல்லாம் முதல்வரை சங்கடப்படுத்தி இருக்கின்றன'' என்றவர் அங்கிருந்து டெல்லிக்குத் தாவினார்.

''ப.சிதம்பரம் முக்கியமான அனைத்துத் துறை களையும் பார்த்து விட்டார். அவர் மீண்டும் நிதித் துறைக்கு வந்தது அந்தத் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி ஆனதும் அந்தப் பதவியை அடைய டெல்லியில் ஏகப்போட்டி இருந்ததும் உண்மை. மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், பிரதமரின் ஆலோசகர் ரங்கராஜன், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் ரேஸில் இறங்கினர். 'ஆட்சி முடியும் வரை பிரதமரே தன் வசம் நிதித்துறையை வைத்திருக்கலாம்' என்று இன்னொரு கோஷ்டி காங்கிரஸ் மேலிடத்தை வற்புறுத்தியது. ஆனால், சோனியாவின் சாய்ஸ்தான் ப.சிதம்பரம்.''

''அப்படியா?''

''ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடு பிடித்த சமயத்தில் சோனியா வெளி நாட்டில் இருந்தார். அவர் திரும்பி வந்ததும், நிதி அமைச்சர் பதவியில் அப்போது இருந்த ப.சிதம்பரமும், ஆ.ராசாவும் கைகோத்து ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்தார்கள் என்ற கோணத்தில் அவருக்குப் பிடிக்காத டெல்லி லாபி வத்தி வைத்தது.  இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட ப.சிதம்பரம், அவரே முந்திக்கொண்டு சோனியாவை முதலில் சந்தித்தார். ஊழல் தொடர்பான முக்கிய ஃபைல்களை எல்லாம் காட்டினார். அவற்றில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தனது தரப்பில் என்னென்ன ஆலோசனைகள், எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டன என்பது பற்றியும், அதை எல்லாம் புறக்கணித்து விட்டு ஆ.ராசா செயல்பட்ட விவரங்களையும் ஆதாரத்தோடு விளக்கினாராம். சிதம்பரத்தின் அணுகுமுறை சோனியாவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். அந்த ஃபைல்களை வாங்கி வைத்துக்கொண்டவர், சம்பந்தப்பட்ட துறையின் முக்கியஸ்தர் களை வரவழைத்து நேரிலும் விசாரித்திருக் கிறார். பல்வேறு துறைகளின் உயர் பதவிகளில் உள்ளவர்களை அழைத்து ஆலோசனை நடத்திய பிறகுதான், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் நடந்துகொண்ட விதம் சந்தேகத்துக்கு இடமில்லாதது என்ற முடிவுக்கு வந்தாராம்.  அதன் பிறகே, ப.சிதம்பரத்துக்கு சோனியாவின் முழு ஆதரவு கிடைத்ததாம். புதிய நிதி அமைச்சர் யார் என்ற பேச்சு எழுந்தபோது, சோனியாவே ப.சிதம்பரம் பெயரைச் சொன்னதும், மற்றவர்கள் கப்சிப் ஆனார்களாம்.''

''உள் துறைக்கு சுஷில்குமார் ஷிண்டே பொருத்தமானவர்தானா?''

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!

''சுஷில்குமார் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவாருக்கு அரசியல் ரீதியான செக் இவர். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் கறாராக இருப்பார் என்பதை உணர்ந்துதான், அவர் புனேவில் கலந்துகொள்ள இருந்த முதல் நிகழ்ச்சிக்கு முன்னதாக, தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அட்வான்ஸ் எச்சரிக்கை செய்திருக் கிறார்கள் தீவிரவாதிகள். பொறுத்திருந்து பாரும். அவர் இந்தத் துறைக்குச் சரியான ஆள் என்றே சொல்கிறார்கள்!'' என்ற கழுகார், திருவள்ளூர் பக்கமாகத் திரும்பினார்.

''தே.மு.தி.க. கட்சியின் எம்.எல்.ஏ-க்களை மனமாற்றம் செய்தார் என்று சொல்லி, கட்சியை விட்டுக் கட்டம் கட்டப்பட்ட சங்கீதா சீனிவாசனின் மனம் தி.மு.க. பக்கமாக அலை பாய்கிறதாம். அனேக மாக அவரை அறிவாலயம் பக்கம் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள்'' என்று சொல்லிப் பறந்தார் கழுகார்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 அழகிரி வந்தாச்சு!

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கடந்த 2-ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். 'அழகிரியை வரவேற்க தென் மண்டலத்தில் உள்ள அனைத்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் மதுரை விமான நிலையத்துக்கு வர வேண்டும்’ என்று அழகிரியின் ஆதரவாளர்கள் போனில் தகவல் தெரிவித்து இருந்தனர். ஆனால், மதுரை புறநகர் மூர்த்தி, தேனி மூக்கையாவைத் தவிர மற்றவர்கள் ஆப் சென்ட்!

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!
மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு எதிரான அரங்கேற்றம்!