Published:Updated:

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

Published:Updated:
மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி
##~##

''டெசோ சார்பில் நடக்கும் மாநாட்டை நிம்மதியாக நடத்தி முடிக்க கருணாநிதி நினைக்கிறார். ஆனால் அழகிரி யும் ஸ்டாலினும் கருணாநிதியை அநியாயத்துக்கு நோகடிக்கிறார்கள்'' - கழுகார் வந்ததுமே மேட்டருக்குள் நுழைந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த 2-ம் தேதி மதுரை வந்து இறங்கிய அழகிரியை வரவேற்க தென் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது அழகிரி வட்டாராம். 'அப்படி எல்லாம் போக வேண்டிய கட்டாயம் இல்லை’ என்று ஸ்டாலின் தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டதால், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா தவிர மற்ற மாவட்டச் செயலாளர்கள் யாரும் ஏர்போர்ட் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. 'இது அண்ணன் மனதில் பெரிய மனவருத்தத்தை உண்டாக்கிவிட்டது’ என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

'இதைப் பற்றி தலைவரிடம் புகார் செய்யுங்க அண்ணே!’ என்று அவரது ஆதரவாளர்கள் தூண்டில் போட்டார்களாம். 'என்னத்தைய்யா கேக்கச் சொல்றீங்க..? ஒரு மணி நேரத்துக்கும் மேல அவரோட பேசிட்டுத்தான் இருந்தேன். உங்க ஆளுங்க மதுரையில இருந்து வந்துட்டுப் போனாங்கப்பா’னு தலைவரு ஒரு வார்த்தைகூட சொல்லலை. அப்புறம் என்னத்த அவருகிட்ட பேசுறது? மதுரையில 10 வருஷத்துக்கு முந்தி மூட்டை தூக்கி சம்பாதிச்சவன் எல்லாம் இப்ப, கோடி கோடியா சம்பாதிச்சுட்டான். அப்ப பஞ்சாலைக்கு டிரை சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருந்தவனெல்லாம் இப்ப கலர் கலர் காருல போறான். அதுக்கெல்லாம் இந்த அழகிரி பேர் தேவைப்பட்டுச்சு. என்னை வைச்சு சம்பாதிச்சவங்களே என்னை கிண்டல் பண்றதைத்தான் தாங்கிக்க முடியலை. தொண்டனுக்கு ஒண்ணுன்னா உசுரையே குடுக்கத் தயங்காத எனக்கே விசுவாசமா இல்லாதவங்க, அங்க போயி (அதாவது ஸ்டாலின் பக்கம்) மட்டும் விசுவாசமா இருந்துடப் போறாங்களாய்யா... இதுவும் எத்தனை நாளைக்குன்னு பாப்போம்’னு ஆத்திரமும் விரக்தியுமாக அழகிரி பேசிக்கொண்டு இருந்தாராம்!''

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

''இத்தனை விரக்திக்குக் காரணம்?''

''அவரது ஆதரவாளர்களே அவரைக் கிண்டல் பண்ணுவது மாதிரி பேசினார்களாம். 'எலி வளைக்குள்ள பதுங்கிக்கிற மாதிரி அண்ணன் பதுங்கிட்டார்’ என்று யாரோ சொன்னது அழகிரி காதுக்கு வந்துள்ளது. இந்த நேரம் பார்த்து டெசோ மாநாடு சம்பந்தமாக ஒருவர் அழகிரியிடம் பேசினாராம். 'அடப் போங்கய்யா... டெசோ கிசோன்னுட்டு. வெளியில எல்லாரும் கேலி பண்றாங்க. பேசாம போயி புள்ளைகளைப் படிக்கவையுங்கய்யா’னு வடிவேலு ஸ்டைலில்  கிண்டல் அடித்தாராம். 'உங்களுக்காகக் கட்சியை விட்டு நீக்கப்பட்ட இசக்கிமுத்துவை டெசோ மாநாட்டுக்கு முன்னாடி கட்சியில சேர்த்துடுறேன்’ என ஒருவர் சொன்னாராம். 'ஆமா, இசக்கிமுத்தைக் கட்சியில சேத்துட்டா, தனி ஈழம் கிடைச்சிருமாக்கும்’ என்று கிண்டல் அடித்தாராம் அழகிரி.''

''அப்பா சீரியஸாய் நினைப்பது மகனுக்கு கிண்டலாகத் தெரிகிறதா?''

''இது ஒருபுறம் இருக்க, புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி நடத்திய டெசோ மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில், திருமங்கலம் ஒன்றிய முன்னாள் சேர்மன் கொடி சந்திரசேகர், 'பொற்கிழிக்கு ஒரு கோடி ரூபாய் வசூல் செஞ்சீங்களே... அது என்னாச்சு?’ என்று கேட்டிருக்கிறார். மூர்த்தியை எதிர்த்து பிரச்னையைக் கிளப்பியதால் ரத்தக் காயப்பட்டுப் போனார். கொடி சந்திரசேகர், தளபதி, பொட்டு சுரேஷ் இந்த மூவரும்தான் நில அபகரிப்பு வழக்கில் கூட்டாக உள்ளே இருந்தவர்கள். இதை முடிச்சுப்போட்டு 'தளபதி கோஷ்டிதான் கொடி சந்திரசேகரைத் தூண்டிவிட்டிருக்கு’ என்று அழகிரியிடம் புகார் வாசித்திருக்கிறார் மூர்த்தி. டெல்லி கிளம்புவதற்கு முன்பு இதையும் தலைமையிடம் முறையிட்ட அழகிரி, 'மதுரை யில் இன்னும் என்னதான் நடக்கணும்னு எதிர்பார்க்குறீங்க?’ என்று சதாய்த்துவிட்டுத்தான் போனாராம்.''

''டெசோ மாநாடு முடிந்தால் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கருணாநிதி சொல்கிறார். ஆனால் அழகிரி பிரச்னைக்காவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா எனத் தெரியவில்லையே!'' என்றோம்.

அடுத்த சப்ஜெக்ட் தாவினார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

''கிரானைட் கொள்ளை தொடர்பாக மதுரை வட்டாரத்தில் அதிரடி ரெய்டுகள் தொடர்கிறது. கோட்டையில் அதிகாரிகளுடன் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை செய்துள்ளார். 'இந்த விஷயம் தொடர்பாக ஏ டு இசட் அனைத்துத் தகவல்களும் வேண்டும்’ என்று கட்டளை போட்டாராம். இந்தத் தகவல் தலைமைச் செயலாளர் சாரங்கி மூலமாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்குப் போனது. 'இது மிகப் பெரிய மோசடியாக இருப்பதால் தகவல்களைத் திரட்டுவது கஷ்டமாக இருக்கிறது. 10 நாட்களுக்குள் அனைத்துத் தகவல்களையும் திரட்டிவிடலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் கூடுதலாக ஒரு வாரம் ஆகும்’ என்று கலெக்டர் சொன்னாராம். எனவே கலெக்டரின் அறிக்கை கிடைத்த பிறகு மேல் நடவடிக்கைகள் இருக்கலாம். மதுரை மாவட்டக் கலெக்டராக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் நடவடிக்கை பாயலாம் என்றும் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி பல்வேறு அனுமதிகளை இந்த கிரானைட் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மன்னார்குடிக் குடும்பத்தில்  உள்ள மூன்றெழுத்து மூத்த பிரமுகர் தொடர்ந்து அந்த கிரானைட் பிரமுகர்களுடன் பொருளாதார நல்லுறவுகளுடன் இருந்தாராம். 'நான் யாருக்கெல்லாம் உதவி பண்ணினேன். அவங்க யாரும் இப்ப எனக்கு உதவலையே’ என்று கிரானைட் அதிபர் புலம்புகிறாராம்!''

''அப்படியா?''

''சகாயம் அனுப்பிய கடிதம் தன்னுடைய கவனத்துக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை என்பதில் முதல்வருக்கு வருத்தமாம். 'இவ்வளவு பெரிய மோசடி நடந்துவருவதை என்னுடைய கவனத்துக்கு ஏன் சொல்லவில்லை?’ என்று கடிந்துகொண்டாராம். சகாயம் அந்தக் கடிதத்தை மே மாதம் 19-ம் தேதி தமிழக தொழில் துறைச் செயலாளருக்கு அனுப்பிவிட்டார். ஆனால் செயலாளர் ஒருவர் கடந்த வாரம்தான் அந்தக் கடிதம் பற்றி பரபரப்பைக் காட்டினாராம்.   'எந்தத் தேதியில் மதுரையில் இருந்து அந்தக் கடிதம் டெஸ்பாட்ச் செய்யப்பட்டது?’ என்று எதுவும் தெரியாதவராகக் கேள்வி கேட்டாராம். இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு முதல்வரால் எப்படிச் செயல்பட முடியும்? சகாயத்தை மதுரையில் இருந்து டிரான்ஸ்ஃபர் செய்யும்போது, அவர் இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக முதல்வரிடம் தலைமைச் செயலாளர் தகவல் தெரிவித்தாரா என்றும் தெரியவில்லை’ என்கிறார்கள் கோட்டையில்!''

''ம்!''

''கிரானைட் அதிபர்கள் எப்படியாவது ஆட்சி மேலிடத்தை சந்திக்க முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. மதுரையில் இருந்து கிளம்பிய அதிபர்கள் மூன்று பேர், சென்னைக்கு வந்து மூன்று நாட்கள் தங்கினார்கள். டெல்லி வக்கீல்கள் சிலரையும் தங்களது துணைக்கு வைத்துக்கொண்டார்கள். கோட்டை சந்திப்புக்கு வழி இல்லாததால் டெல்லிக்குக் கிளம்பினார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் அவரது மகனும் நெடுங்காலமாகவே இந்த அதிபர்களுக்குப்  பக்க பலமாக இருந்தவர்களாம். 'டெல்லி மூலமா நான் பார்த்துக்கிறேன்’ என்று சொல்லிச் சென்றாராம் கிரானைட் அதிபர்'' என்று சொல்லி நிறுத்திய கழுகாரிடம்,

''பெங்களூரு கோர்ட் விவகாரத்தில் நகர்வுகள் உண்டா?'' என்று கேட்டோம்!

''டெல்லியில் கருணாநிதி டீம், பெங்களூருவில் ஜெயலலிதா டீம் என்று சூடாக இருக்கிறது. கடந்த இதழில் உமது நிருபர் கோடிட்டுக்காட்டி இருந்த நீதிமன்ற 'நியமன அரசியல்’ அனல் பறக்கிறது. அடுத்த  நீதிபதி யார் என்பதைத்  தீர்மானிக்க இரண்டு தரப்புமே துடிக்கிறார்கள். ஜெயலலிதா வழக்கின் போக்கை அறிய கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் இருந்த தி.மு.க. டீம், இப்போது டெல்லிக்கு நகர்ந்திருக்கிறது. முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவரின் வழிகாட்டுதலின் படி இயங்கும் அந்த லீகல் டீம், கருணாநிதிக்கு மிகவும் நெருங்கியவரும் முன்பு சட்டத் துறையைக் கவனித்து வந்து, இப்போது மின் துறை அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி மூலமாக தங்களுடைய மூவ் அஸ்திரத்தை நகர்த்துகிறார்களாம். ஏனென்றால் ஜெயலலிதா வழக்கின் அத்தனை நகர்வுகளையும் அறிந்து வைத்திருக்கும் சுப்ரீம் கோர்ட்தான், புதிய நீதிபதி நியமன விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காகத்தான் கருணாநிதி, வீரப்ப மொய்லியை அணுகச் சொன்னாராம். கடந்த வியாழக்கிழமை காலை டெல்லியில் வீரப்பமொய்லியுடன் சந்திப்பு நடந்ததாம். அதே போல கடந்த வாரம் பெங்களூரு வந்த சட்டம் மற்றும் நாடாளுமன்ற சட்ட விவகாரத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் என்ன மாதிரியான‌ ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கப்போகிறார்கள் என்பதையும் தீவிரமாகத் துருவுகிறதாம் தி.மு.க. டீம்!''

''அந்தப் பக்கத்தில்..?''

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி

''சொத்துக் குவிப்பு வழக்கைக் கவனித்து வரும் வக்கீல் செந்திலும், இளவரசியின் வக்கீல் அசோகனும் பெங்களூருவில் இருக்கிறார்கள். ஸ்பெஷல் கோர்ட், ஹை கோர்ட், ஆச்சார்யாவின் அலுவலகம் ஆகிய இடங்களைக் கண் கொத்திப் பாம்பாகக் கவனித்து வருகிறார்கள். கர்நாடக அரசியலையும், சட்ட அமைச்சராக இருக்கும் சுரேஷின் நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். தங்களை யாரும் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக, மறைந்திருந்தே வேலை செய்கிறார்கள்.''

''நீதித் துறை வட்டாரத்தில்..?''

''சத்தமே இல்லாமல் அடுத்த நீதிபதியைத் தேர்தெடுக்கும் வேலையில் இருக்கிறது கர்நாடக ஹை கோர்ட். 'ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக வரக்கூடியவரை கர்நாடக அரசும், ஹை கோர்ட்டும் கலந்து ஆலோசித்துதான் அறிவிக்கவேண்டும்’ என்று சட்டம் சொல்கிறது. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வரும் 36-வது அடிஷனல் சிட்டி சிவில் மற்றும் செஷன் கோர்ட் நீதிபதி பதவிக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் தகுதியானவர்கள். அதனால் கர்நாடகா முழுக்க இருக்கும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கேடரில் இருக்கும் 212 நீதிபதிகளில் முதலில் 20 பேரைத் தேர்வு செய்வார்களாம். அந்த 20 நீதிபதிகளின் பட்டியலை கர்நாடக ஹை கோர்ட்டின் நீதிமன்ற நிர்வாகக் குழு பரிசீலித்து அரசுக்குப் பரிந்துரைக்குமாம். அரசு பரிசீலித்த நீதிபதிகளின் பட்டியல் அடுத்து ஐந்து பேர் கொண்ட ஹை கோர்ட் நீதிபதிகள் குழுவுக்கு வருமாம். அந்தக் குழுவுக்கு ஹை கோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமை தாங்கி, புகார் இல்லாத நீதிபதியைத் தேர்ந்து எடுப்பார்களாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதியின் நியமனத்துக்கு முன்பாக, நியமிக்கப்படும் நீதிபதி குறித்து ஹை கோர்ட்டின் விஜிலென்ஸ் போலீஸ் தீவிரமாக விசாரித்து அறிக்கை கொடுத்த பின்னரே, கர்நாடக ஹை கோர்ட்டின் பதிவாளர் ஆணை வெளியிடுவார் என்கிறார்கள் கோர்ட் வட்டாரத்தில்!''

''இவ்வளவு விஷயங்களும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடுமா?''

''முடிய வேண்டும். ஆனால் மல்லிகார்ஜுனை யாவே தொடர வழி இருக்கிறதா என்பதில்தான் தி.மு.க. வட்டாரம் ஆர்வம் காட்டுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!'' என்றபடி பறந்தார் கழுகார்!

அடேங்கப்பா அதிகாரி!

டாமின் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரின் மனோகரத்தைப் பற்றி வண்டி வண்டியாய் தகவல் கொட்டுகிறார்கள். இவர் தினமும் 2,000 ரூபாய் மதிப்புள்ள டிரஸ்ஸைத்தான் அணிவாராம் அதிலும், ஒரு நாள் போட்ட சட்டையை மீண்டும் பயன்படுத்துவது இல்லை. அதனால் இவருக்கு தினந்தோறும் புதிய ஆடைதான். அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் வாங்கியது கம்மிதான். ஆனால், மதுரைக்கார கம்பெனி ஒன்று மாதச் சம்பளமாக இவருக்கு ஐந்து லகரம் கொடுத்து வந்ததாம். மற்ற கம்பெனிகளின் சம்பளம் தனி. இவர்தான் சட்டவிரோதமான முறையில் கிரானைட் குவாரி எடுக்க ரூட் போட்டுக் கொடுப்பாராம். சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ள இவரைப் பற்றி தமிழக உளவுத்துறை கொடுத்த விவரங்கள் ஆட்சி மேலிடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம்.

மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி
மிஸ்டர் கழுகு: சிக்கும் 'மாஜி' மந்திரி... காப்பாற்றும் மத்தியமந்திரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism