Published:Updated:

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!
##~##

ழுகார் நுழைந்ததும் ஒரு புகைப்படத்தைக் காட்டினோம். கிரானைட் கொள்ளையைத் தடுப்பதற்காக முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் படம் அது. அதைப் பார்த்துவிட்டு நம்மிடமே திருப்பிக் கொடுத்தார்! 

''அதைப் பற்றித்தான் சொல்ல வந்தேன். மதுரையைக் குடைந்து மலைகளை வெட்டிக் கடத்திய விவகாரத்தை மிகவும் சீரியஸாக நினைக்கிறார் முதல்வர். அவர் யாரையும் நம்பவில்லை என்பதற்கு உதாரணம், மதுரைக் கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு முதல்வரே நேரடியாகப் பேசி இருக்கிறார். 'அரசாங்கத்தின் சொத்தை யார் எடுத்திருந்தாலும் தயக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. எனவே தைரியமாக நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும்  முழுமையாக எனக்குக் கொடுங்கள். இந்த விஷயத்தில் யார் உங்களுக்கு நெருக்கடி கொடுத்தாலும் என்னிடம் சொல்லலாம்’ என்ற அர்த்தத்தில் இருந்ததாம் முதல்வரின் பேச்சு. 'அனேகமாக இரண்டு வாரங் கள்கூட ஆகலாம் முழுமையான தகவல்களை அறிய’ என்று கலெக் டரும் சொன்னாராம். அதன் பிறகுதான் அமைச்சர்கள், அதிகாரி கள் குழாமுடன் முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை!''

''முதல்வரின் முடிவு என்னவாக இருக்கும்?''

''அனேகமாக, கிரானைட் குவாரிகள் அனைத்தையும் இனி அரசின் டாமின் நிறுவனமே செயல்முறைப்படுத்தும் என்பது முதல்வரின் முடிவாக இருக்கலாம். அதை நோக்கித்தான் அவருடைய நடவடிக்கைகள், பேச்சு அமைந்திருப்பதாக கோட்டை வட்டாரம் சொல்கிறது!''

''யாரையும் நம்பத் தயார் இல்லை முதல்வர் என்றீரே! அதற்கு ஏதாவது உள்அர்த்தம் உண்டா?''

''சகாயம் அனுப்பிய கடிதம், மீடியாக்களில் லீக் ஆன பிறகுதானே இந்த மேட்டர் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் நடந்த ஏராளமான கடிதப் பரிவர்த்தனைகள், வழக்குகள் எதையுமே முதல்வர் கவனத்துக்குக் கொண்டு போகாமல் தடுத்து விட்டனர். 'இதில் சில அதிகாரிகளுக்கும் முக்கிய அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது’ என்று சொல்கிறார்கள். 2006-ம் ஆண்டு மதுரை கலெக்டராக இருந்த உதயசந்திரன், ஒரு குவாரி மீது நடவடிக்கை எடுத்து ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இதற்குத் தடை வாங்கியது கிரானைட் தரப்பு. அதன்பிறகு, குவாரி கேட்டு வந்த பல கோரிக்கைகளுக்கு அவரும் தடை போட்டார். அவரது மாறுதலுக்குப் பிறகு, குவாரிகளின் ஆட்டம் அடங்காமல் தொடர்ந்தது. அடுத்து ஆட்சிமாறி சகாயம் வந்த பிறகு பல முட்டுக்கட்டைகளைப் போட்டார். கிரானைட் அதிபர்கள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்த வழக்குகளைத் துரிதப்படுத்த முயற்சித்தார். அதற்கு, அ.தி.மு.க. தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் சிலரே முட்டுக்கட்டை போட்டு சகாயத்தைச் செயல்பட விடாமல் தடுத்துள்ளார்கள். நீதியரசர் சந்துரு கொடுத்த தீர்ப்பை வைத்து இப்போதைய நடவடிக் கைகளை அப்போதே எடுத்திருக்க முடியும். அதற்குக் காரணம், பி.ஆர்.பி-க்குச் சாதகமாக மதுரை வட்டாரத்தில் இன்னமும் பல அ.தி.மு.க. வக்கீல்கள் உலவுகிறார்கள். 'அரசுத் தரப்பு எடுக்கும் நடவடிக்கைகளை அவர்கள்தான் பி.ஆர்.பி. தரப்புக்குச் சொல்லுகிறார்கள்’ என்று கூறப்படுகிறது!''

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!

''அப்படியா?''

''மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை போலீஸ் நடத்திவரும் விசாரணைகளின்போது,  அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பி.ஆர்.பி-க்கும் நெருக்கமான நட்பு நெடுநாளாக இருந்து வருவது தெரிய வந்ததாம். இது ஆட்சி மேலிடத்துக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் கூப்பிட்டு விளக்கம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. 'போலீஸார் கையில் சிக்கிய முன்னாள் அதிகாரி ஒருவர், பி.ஆர்.பி-க்கு பல வி.வி.ஐ.பி-க்களிடம் உள்ள நெருக்கத்தைச் சொல்லி விட்டார்’ என்கிறார்கள். 'பல இடங்களில் பன்னீர் பெயரை பி.ஆர்.பி. பயன்படுத்தினார்’ என்றும் சொல்கிறார்கள். இவை முதல்வர் கவனத்துக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.''

''பி.ஆர்.பி. எங்கே?''

''பி.ஆர்.பி.யும் அவரது குடும்பத்தினரும் தமிழகத்தை விட்டு எஸ்கேப். கடைசியாக இவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் பக்கம் தென்பட்டதாக உளவுத் துறைக்குத் தகவல். இடையில், ரகசியமாக டெல்லிக்குச் சென்ற பி.ஆர்.பி. அங்கு தனது தொடர்புகளை வைத்து, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகிய துறை அதிகாரிகளைச் சந்திக்க முயற்சித்தாராம்.  இல்லாவிட்டால், இந்தப் படையினர் ரெய்டு என்ற பெயரில் துவம்சம் செய்திருப்பார்கள். ஏற்கெனவே, இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கை சந்தித்த பி.ஆர்.பி-யைப் பொத்திப்பொத்திப் பாதுகாக்கிறார்களாம் அவர்கள் குடும்பத்தினர். எந்த ஓர் அதிர்ச்சியும் அவருக்குப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்!''

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!

''கிரானைட் குவாரிகள் அனைத்தையுமே இனி அரசே ஏற்று நடத்தினால் லாபமா?''

''மீனைத் தின்று விட்டார்கள். இப்போது இருப்பது முள் மட்டும்தான் என்கிறார்கள். ஆரம்பத்தில், புறம்போக்கில் வரும் பல குவாரிகளை டாமின் நிறுவனமே நடத்தப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், சரிப்பட்டு வரவில்லை. இப்போது, டாமின் தரப்பில் இரண்டே இரண்டு குவாரிகளைத்தான் நடத்தி வருகிறார்கள். சேலம், தர்மபுரியில்... மீதி எல்லாம் தனியார் வசம்தான்!

வெளிநாட்டில் மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறக்கும் கற்களைக் கடந்த காலங்களில் வெட்டி எடுத்து விட்டார்கள். எஞ்சி இருப்பது சாதாரண கற்கள்தான். புறம்போக்கு நிலத்தில் இருந்து தனியார்கள் நேரடியாக கிரானைட் குவாரி எடுக்க 56 லைசென்ஸ்கள்தான் அரசு கொடுத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் புதியதாக யாருக்கும் லைசென்ஸ் தரவில்லை. இவைதவிர, டாமின் பொறுப்பில் சுமார் 200 சைசென்ஸ்கள் இருக்கின்றன. அங்கிருந்துதான் தனியார்கள் குத்தகை பெற்று நடத்தி வருகின்றனர். இவற்றில் சுமார் 80-ல்தான் தற்சமயம் செயல்பாடு நடக்கிறதாம்'' என்ற கழுகாரிடம், ''அமைச்சரவை மாற்றம் எப்போது?'' என்றோம்!

''15-ம் தேதி சுதந்திர தினக் கொடியேற்று விழா. அது முடிந்த பின் 18-ம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று தகவல். '11 அமைச்சர்கள் மாற்றம்’ என்று ஒரு குரூப்பும், '17 பேர் மாற்றம்’ என்று இன்னொரு குரூப்பும் சொல்கிறது. முதல்வரின் மனதில் உள்ள சில விஷயங்களை மட்டும் நான் சொல்கிறேன். 'சிறப்பாகச் செயல்படவில்லை என்று அவர் மனதில் நினைக்கும் அனைவருக்கும் கல்தா கொடுக்க நினைக்கிறார். அவர்கள் எத்தனை பேர் என்பது அப்போதுதான் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது தகுதியான அமைச்சர்களும் தகுதியான மாவட்டச் செயலாளர்களும் இருந் தால்தான் வெற்றி வாய்ப்பு சாத்தியம் ஆகும் என்று நினைக்கிறார். அதற்கு ஏற்ற ஆட்களை மந்திரியாக நியமிக்கவும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கவும் நினைக்கிறார். இன்னொரு சிந்தனையும் அவருக்கு இருக்கிறது. இத்தனை மந்திரிகள் வேண்டுமா என்பதுதான் அது. பள்ளிக் கல்வியையும் உயர் கல்வியையும் இணைப்பது, பால் வளத்தையும் கால்நடையையும் இணைப்பது என்பது மாதிரியான சில சேர்ப்புகளைச் செய்துகாட்டி எண்ணிக்கையைக் குறைக்கப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.''

''அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறது என்பது அமாவாசை அன்றோ அதற்கு மறுநாளோ தெரியுமோ!'' என்றோம்.

சிரித்தவர்... சிலிர்த்தபடி பறந்தார்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!

மிகவும் நேர்மையானவராகவும் கறாரானவராகவும் அறியப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் இப்போது இந்து இயக்கங்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். இப்போது, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயலாளர் மற்றும் ஆணையராக இருக்கும் அவர் சமீப காலமாக கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி இருப்பதே காரணம். கடந்த மாதம், சீர்காழி அருகே உள்ள வாணகிரி கிராமத்துக்கு சிவப்பு விளக்கு (சுழலாமல்) காரில் வந்து இறங்கிய உமாசங்கர், அங்கு கிறிஸ்தவ மீனவர்களின் வீடுகளில் ஜெபம் செய்து விட்டுப் போனார். அங்கு, மீனவர்களிடையே இரு பிரிவாக மோதல் உள்ள நிலையில், அவர் ஒரு தரப்புக்கு ஆதரவாக வந்து சென்றது அப்போதே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி சீர்காழி மற்றும் மயிலாடுதுறை நகரங்களில் உள்அரங்கத்தில் நடைபெற்ற கிறிஸ்தவப் பிரசார கூட்டங்களில் அவர் வந்து கலந்துகொண்டதை நாகை மாவட்ட பி.ஜே.பி-யினர் கடுமையாக எதிர்த்துக் கைதாகியுள்ளனர். ''அரசு பதவி வகிக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மதப் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்யவேண்டும்'' என்பதுதான் பி.ஜே.பி-காரர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதற்காக தொடர் நடவடிக்கைகளில் இறங்கப் போகிறார்களாம்.

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நட்பு... ஓ.பி.எஸ். நடுக்கம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு