
கொன்றால் பாவம் தின்றால் போகுமா? மாநாடு நடத்துவதே மௌனத்துக்குப் பரிகாரம் ஆகுமா? தி.மு.க. தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதிதான் சொல்ல வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் இருந்த சமயத்தில்தான், இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை அடைந்து, லட்சக்கணக்கான உயிர்களை ராஜபக்ஷே அரசு பொசுக்கிக் கொன்றது. இறப்பின் துயரத்தையும் மிஞ்சியது இன்னும் உயிரோடு இருப்பவர்களின் துன்பம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்திய அரசில் செல்வாக்கு வாய்ந்த கூட்டணியாக இருந்தபோதும், அன்றைய முதல்வராக அவர் காட்டிய அதிகபட்ச எதிர்ப்பு அரை நாள் உண்ணாவிரதம். அதோடு, வேளை தவறாமல் பிரதமருக்குக் கடிதங்கள் தீட்டி, தன் கடமையைச் 'செவ்வனே' முடித்துக்கொண்டார்.
இப்போது, 'டெசோ' மாநாட்டை நடத்திவிட்டு, அதையும் ஒரு சாதனையாகத் தன் வரலாற்றுப் புத்தகத்தில் பதித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார் கருணாநிதி. 'இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு தேடித் தரும் விஷயத்தில் மத்திய அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது' என்பது இன்று கருணாநிதியின் 'காலத்துக்கு ஏற்ற கண்டுபிடிப்பு’!
'ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரச் சொல்லி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதைத் தவிர, வேறு என்ன அழுத்தம் வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை' என்று கருணாநிதி கூறி இருப்பதிலும் ஓர் உண்மை உண்டு. ஆம், இலங்கை அரசின் அரக்கத்தனத்தால் புதையுண்ட பல லட்சம் தமிழர்களோடு சேர்த்து... அன்று நேரடியாக தமிழகத்தையும் மறைமுகமாக டெல்லியையும் ஆண்டுகொண்டு இருந்த தி.மு.க-வின் மறக்கவொண்ணாத மௌனத்தையும் சேர்த்துப் புதைக்கப் பார்த்திருக்கிறாரே... இதைவிட வேறு என்ன 'அழுத்தம்' வேண்டும்?