Published:Updated:

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

ப.திருமாவேலன்படம் : வி.செந்தில்குமார்

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

ப.திருமாவேலன்படம் : வி.செந்தில்குமார்

Published:Updated:
##~##

னைத்து அமைச்சர்களும் தமிழக முதல்வருக்குப் பயப்படுகிறார்கள். ஆனால், பயன்படுகிறார்களா?

 இந்தக் கேள்விக்கு ஜெயலலிதாவே நெடுநேரம் யோசித்துத்தான் பதில் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இப்போதைய மந்திரிகள் மர்மமாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு 15 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் தத்தமது துறையைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள்தான் நிறைய. 'ஏதாச்சும் கேட்டா பிரச்னை ஆகிடுமோ’ என்ற பயம் பாதி. 'அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க’ என்ற அலட்சியம் மீதி. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாகப் பல அமைச்சர்கள் இருப்பது இந்த அமைச்சரவையின் பிரத்யேகக் குணம்போல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், வெள்ளாவியில் வைத்து வெளுத்த ஆடைகளுடன் பளிச்சென உலாவுகிறார்கள். கார்களில் படாடோபமாக வலம் வருகிறார்கள். லோக்கல் பந்தா காட்டுகிறார்கள். சக கட்சிக்காரர்களை உதாசீனம் செய்வ தில் போட்டி போடுகிறார்கள். கோஷ்டி சேர்ப்பதில் அலாதி ஆர்வம் இருக்கிறது. இவை அனைத்தும் அவர்களைக் கட்சியில் வளர்த்துக்கொள்ளும் வழியாக இருக்கலாம். ஆனால், அமைச்சராக எப்படிச் செயல்படுகிறார்கள்? கோட்டைக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன்!

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

துறையில் தேர்ந்த துரைகள்!

கையில் கொடுக்கப்பட்ட துறை யைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதிலும் அதிகமாகத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வமான அமைச் சர்களாக ஐந்து பேரைக் கோட்டை வட்டாரம் சொல்கிறது. ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், பழனியப்பன், செந்தில் பாலாஜி.

நிதித் துறையில் அனைத்தும் ஃபார்முலாபடி நடப்பவை. விதிகளை மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனால், தனது அனுபவம் காரணமாக அதிகாரிகளிடம் லாஜிக்கான கேள்விகளைக் கேட்டு துறையைக் கவனிக்கிறார் பன்னீர். இந்த ஆட்சிக்கே மிகப் பெரிய சவாலாக இருந்தது மின் வெட்டு. மின் பற்றாக்குறையை ஒரு ராத்திரியில் சரிசெய்துவிட முடியாது என்றாலும் சமாளிப்பதற்கு நத்தம் விஸ்வநாதனின் அனுபவம் பயன்பட்டது. மேலும், சட்டசபையில் தனது குரலால், உயரத்தால், புள்ளிவிவரங்களால் அதனை விஸ்வநாதன் வென்றார். ஏற்கெனவே அமைச்சராக இருந்த அனுபவம் சி.வி.சண்முகத்துக்குக் கை கொடுக்க, எந்த விவகாரத் திலும் உடனடி முடிவுகள் எடுக்கக் கூடியவராக இருந்திருக்கிறார். அதனால்தான் இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அதிகப்படியான துறைகள் கூடுதலாக அவர் தோளில் விழுந்தன. உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், துறையைக்

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

கவனிப்பதிலேயே கவனம் செலுத்தி இருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு இது முதல் வாய்ப்பு. பேச்சாளராக இருந்த தால் போக்குவரத்துத் துறைகுறித்த தரவுகளை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டு சபையில் கலக்கினார். அதனாலேயே, அம்மாவின் பாராட்டும் கிடைத்தது. முதல்வரின் எண்ணங்களை ஓரளவு செயல்படுத்திக் காட்டியவர்களாக இவர்களைச் சொல்லலாம்!

சொந்தங்களின் பிடியில்!

குடும்ப அரசியல் நாம் பார்த் துச் சலித்த விஷயம்தான். இந்த அமைச்சரவையிலும் சொந்தங்களின் பிடியில் சிக்கி இருப்பவர் கள் இருக்கிறார்கள். பதவிப் பிரமாணத்தைக் குடும்பத் தலைவர் ஏற்றுக்கொண்டாலும் குடும்ப உறுப் பினர்கள் மூலம் ஃபைல்களை க்ளியர் செய்வது நடக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதியின் இரண்டு தம்பிகள் அடுத்தடுத்த இரண்டு ஹோட்டல்களில் உட்கார்ந்துகொண்டு துறை விஷயங்களை டீல் செய்கிறார்கள்.

வனத் துறை பச்சைமாலுக்கு அவரது மனைவியும் கோகுல இந்திராவுக்கு அவரது கணவரும்தான் சேனல்கள். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் அரசியல்ரீதியாகவும் ஆட்சியியல்ரீதியாகவும் முன்னேறிக்கொண்டு இருக்கிறார் கள். தம்பியும் தன் பங்குக்கு ஆக்டிவ் ஆக இருக்கிறார். சி.த.செல்லப் பாண்டியனின் மகன்களுடைய ஆட்சி தூத்துக்குடியைத் தாண்டி சென்னை வரைக்கும் வந்துவிட்டது. நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணனைப் பார்த்தால் தான் காரியம் நடக்கும் என்பது திண்டுக்கல்லைக் கடந்துவிட்ட உண்மை. சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், தம்பி யின் துறையைக் கடந்தும் பல சங்கதிகளில் தலையிடுபவராக இருக்கிறார்.

பி.ஏக்களின் மடியில்!

மைச்சர்களுக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் பி.ஏ-க்களால்தான். ஜெயலலிதா வின் முதல் ஆட்சியின்போது அமைச்சர்களைவிட அதிகம் சம்பாதித்த கோடீஸ்வர பி.ஏ-க்கள் இருந்தார்கள். அந்த ஜாக்கிரதை உணர்வு இன்றைய அமைச்சர்கள் பலருக்கும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு பி.ஏ-வாக இருந்தவர்தான் தமிழகத்தை அதிரவைத்த பள்ளி மாணவி ஸ்ருதி மரணத்துக்குக் காரணமான பேருந்துக்கு எக்ஸ்பிரஸ் எஃப்.சி. வழங்கியவர். இவரது தகுதியைப் பார்த்து தாம்பரம் ஏரியாவைக் கவனிக்க அனுப்பி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் தொடர்ந்து இருந்தால், அமைச்சரையே கோட்டையில் இருந்து ஓட்டைக்குள் தள்ளிவிடு வார்கள். வீட்டுவசதி வைத்தியலிங்கத்திடம் பொலிடிக்கல் பி.ஏ-வாக இருக்கும் காந்திதான் அங்கு எல்லாம். அதைவிட காந்தியின் மச்சான் முத்துக்குமார் ஆலோசனைப்படிதான் அனைத்தும் நடக்கிறது. சிவபதிக்கு அவரது தம்பிகள் தயவு போதாது என்று அவரது பி.ஏ. செல்வம், எல்லாவற்றையும் தீர்மானிப்பவராக இருக்கிறார். கோகுல இந்திராவைப் பத்திரப் பதிவுத் துறையில் இருந்து மாற்றக் காரணமான பி.ஏ-வே இன்னமும் தொடர்கிறார். ராஜேந்திர பாலாஜியின் பி.ஏ-க்கள் மந்திரியிடம் அளவுக்கு அதிகமாக அந்நியோன்யம் காட்டுகிறார்கள். 'அனைத்தையும் தாண்டிய நட்பாக’ இது இருக்கிறது. கே.பி.முனுசாமியின் பி.ஏ. ஒருவர் கண்காணிக்க வேண்டியவராகத் தெரிகிறார்.

நாற்காலிக்குப் பின்னால் வேட்டுவைக்கும் பி.ஏ-க்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இவர்கள்!

காசேதான் கடவுளடா!

ள்ளாட்சித் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை... இந்த மூன்றும் இந்தக் காலத்தில் மட்டுமல்ல... எந்தக் காலத்திலும் கமிஷன் கொடி கட்டிப் பறக்கும் துறைகள். பண ஒதுக்கீடு இங்குதான் தாராளமாக இருக்கும். எனவே, கட்டிங்குகளும் ஏராளம், தாராளம். இந்த விமர்சனங்களைத் தாண்டியதாக இப்போதும் இந்த மூன்று துறைகளும் இல்லை. கட்சியின் பொதுக் குழுவில் ஓர் அமைச்சர் பேச எழுந்ததுமே, 'அவர் எட்டு பெர்சென்ட் கேட்கிறாரும்மா’ என்று தொண்டர்கள் குரல் கொடுத்த அவலம் நடந்தது. ஆனாலும், அவர் மாறவில்லை. 'பொதுவாக 5 1 என்பதுதான் முந்தைய ஆட்சியில் இருந்தது. இப்ப சிலர் 12 1 கேட்கிறாங்க’ என்று பெரும்புள்ளி கான்ட்ராக்டர்களே புலம்புகிறார்கள். பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் பெயரை, ஈரோட்டைச் சேர்ந்த மூன்றெழுத்து நிறுவனமும் பெண் பெயரில் இருக்கும் கட்டுமான நிறுவனமும் சேர்ந்து காலி செய்துவிடும் என்று கட்சிக்காரர்கள் புலம்புகிறார்கள். கட்சிரீதியான முக்கிய இடத்தைப் பெற்றது தனக்குக் கிடைத்த லைசென்ஸ் என்று நினைக்காமல் உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி செயல்பட்டால் மட்டுமே, கட்சியில் கிடைத்த முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியும். மின் ஊழியர் நியமனமும் சர்ச்சைக்கு உரியதாக மாற ஆரம்பித்துள்ளது.

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

கரையோரப் பகுதி அமைச்சர் ஒருவரிடம் மூத்த அமைச்சர் ஒருவர் ஒரு டிரான்ஸ்ஃபர் கேட்டார். 'இந்த ஆளு என்னோட பங்காளி. இதை நான் செய்துகொடுக்கலேன்னா, ஊருக்குள் தலைகாட்ட முடியாது’ என்று சொல்லி, குறிப்பிட்ட அளவு பசையும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகும் அதிக விலைக்கு அந்த டிரான்ஸ்ஃபரை வேறு ஒருவருக்குப் போட்டார் அந்த முதல் முறை மந்திரி.  'டிரான்ஸ்பஃர்களில் மட்டுமே பலரும் ஆதாயம் அடைகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கூட்டுறவு, இந்து சமய அறநிலையம், சமூக நலன், சுகாதாரம் ஆகிய துறைகளும் இதில் தப்பவில்லை. வேளாண் அமைச்சர் தாமோதரன் வீட்டில் உட்கார்ந்து சில டீலிங்குகளைப் பேசும் ஒருவர்... திருவாளர் கான்ட்ராக்டர்தான்!

கடமையில் மட்டும் கண்ணாக!

துறையை ஒழுங்காகக் கவனித்துவிட்டு சும்மா இருந் தால் போதும் என்று நினைப்பவர்களாக ஊரகத் துறை எம்.சி.சம்பத், உயர் கல்வித் துறை பழனியப்பன், உணவுத் துறை காமராஜ் ஆகிய மூவர் பெயர்களும் சொல்லப்படுகிறது. 'சாதாரணக் கட்சிக்காரன் வந்தாலும் காசு உள்ளவன் வந்தாலும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட் சிலரிடம் மட்டும்தான் பார்க்க முடிகிறது. சம்பத் ஏற்கெனவே மந்திரியாக இருந்தவர். 'வேறு சிந்தனைகள்’ இல்லாமல் செயல்படுகிறார். பழனியப்பன், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஏழை மாணவ, மாணவியர்களைப் பணம் இல்லாமல் பல கல்லூரிகளில் சேர்க்கிறார்’ என்றும் சொல்லப்படுகிறது. பெரும் ஆபத்தான வளைவுகள்கொண்ட மன்னார்குடி வட்டாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் காமராஜ், அதிக ஜாக்கிரதையாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. டாக்டர் என்ற அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டார் விஜய். அவர் இன்னமும் டாக்டராகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார். மருந்துச் சீட்டு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கிழித்துக் கொடுப்பது மாதிரி தினமும் கையெழுத்துப் போட்டு பரிந்துரைக் கடிதங்களாகக் கொடுத்துத் தள்ளுகிறார்.  

வம்பே வேண்டாம் சாமீ!

மைச்சர் எடுத்த முடிவை அதிகாரி ஒருவர் மாற்றினார். அப்போது அந்த அமைச்சருக்குக் கோபம் வந்தது. 'அண்ணே! அமைதியா இருங்கண்ணே. எதையாவது போயி சி.எம். ஆபீஸ்ல சொல்லிடுவாங்க. சைரன் கார் அஞ்சு வருஷம் இருந்தாப் போதும்னு நிம்மதியா இருங்க’ என்று அருகில் இருந்தவர்

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

அட்வைஸ் செய்தார். அப்படிப்பட்ட மனோபாவத்துடன் பல அமைச்சர்கள் இருக்கிறார் கள். தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டு வளாகத்துக் குள் நடைப் பயிற்சி எடுத்துக்கொண்டு... வந்திருக்கும் ஆட்களைப் பார்த்துப் பேசிவிட்டு... 11 மணிக்கு தலைமைச் செயலகம் வந்து... அங்கும் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு... வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் 'அமைச்சர் பந்தா’ மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். எந்த ஃபைல் வந்தாலும் 'முதல்வர் அவர்களின் பரிசீலனைக்கு...’ என்று எழுதிக் கையெழுத்து போடுவது மட்டுமே பலரின் வேலை. முதல்வர் அலுவலகத்தில் அவசியமே இல்லாமல் ஃபைல்கள் சேர்வது இவர்களால்தான். ஏதாவது ஒரு சிபாரி சுக் கடிதம் கேட்டால்கூட பயந்து போய் கையெழுத்துப் போடாத மந்திரிகள் இன்னமும் இருக்கிறார்கள். அறநிலையத் துறையில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் அமைச்சரிடம் சென்று தங்களது கோரிக்கையை வைக்கச் சென்றார்கள். 'அப்படியா தம்பி! எனக்கு இந்த விஷயமே நீங்க சொல்லித்தான் தெரியும்’ என்றாராம் மந்திரி. நம்ம நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றபடி திரும்பினார்களாம்!  

அதிகாரிகள் கையில் அதிகாரம்!

து அதிகாரிகள் ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். தலைமைச் செயலாளர் சாரங்கி, முதல்வரின் செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராம்மோகன் ராவ், வெங்கட்ரமணன் ஆகிய நான்கு பேர் சகல அதிகாரங்களும் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் போலவே இன்னும் சில அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. செய்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறை ராஜாராம் இதில் குறிப்பிடத்தக்கவர். தொழில் துறையில் அமைச்சர் தங்கமணி பல நேரங்களில் பார்வையாளர்தான். சுகாதாரத் துறை யைப் பொறுத்தவரை மூத்த செயலா ளர்களில் ஒருவரே பர்ச்சேஸ் அனைத் தையும் பார்த்துக்கொள்கிறார். துறை ரீதியான முக்கியமான விஷயங்கள் அனைத்தும் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலாளர் மூலமாக துறைச் செய லாளர்களுக்குச் சென்றுவிடுவதால், அமைச்சர்களுக்கு கையெழுத்துக்கு மட்டுமே ஃபைல்கள் வருகின்றன. இதனால் நொந்து போய் உட்கார்ந்திருக்கும் மந்திரிகளும் உண்டு. இதை வைத்துத் தப்பாட்டம் ஆடும் அதிகாரிகளும் உண்டு!  

கெட்ட பெயரைக் கேட்டுக் கேட்டு வாங்குறாங்க!

சி.த.செல்லப்பாண்டியன், பச்சைமால், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது புகார்கள் குவிந்தாலும் சளைக்காமல், தங்கள் பாதையில் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். சி.த.செல்லப்பாண்டியனின் மூத்த மகன் மீது காதல் சர்ச்சை கிளம்பியது. புகார் கொடுத்தவர் மீது தாக்குதல் தொடுத்து... அதற்கு போலீஸும் உடந்தையாகிக்கிடந்தது. அது லேசாக அமுங்குவதற்குள் இரண்டாவது மகனின் நீலப் படம் ஓடியது. படம் எடுத்தவர் எங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறார். ராஜேந்திர பாலாஜியின் ஒரே வேலை, லோக்கல் அ.தி.மு.க. புள்ளிகளை மாட்டிவிட்டு, அம்மாவிடம் கெட்ட பெயர் வாங்கவைப்பது மட்டும்தான். சதா இந்த யோசனையிலேயே இருப்பதால் சென்னையைவிட விருதுநகரில்தான் சாருக்கு அதிக வேலை. கொலை வழக்கில் கைதாகும் அளவுக்கு பச்சை மாலின் பி.ஏ. போனார். தினமும் தலைமைக் கழகத்துக்கு வரும் புகார்களில் ஒன்றாவது பச்சைமாலைப் பற்றி இருக்கிறது. மற்றவர்கள் எப்போதாவது கெட்ட பெயர் வாங்குகிறார்கள். இவர்கள் கேட்டுக் கேட்டு வாங்குகிறார்கள்.

அப்பாவியா... அடப்பாவியா?

சிலரது முகத்தைப் பார்த்தால் 'இவ்வளவு நல்லவர்களா?’ என்று யோசிக்கும் அளவுக்கு இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் முக்கூர் சுப்பிரமணியம். தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர். ஆறாம் வகுப்பு ஃபெயில். ஆனால், பி.ஏ. பாஸ் செய்ததாகத் தகவல் தந்தார். கட்சிக்காக உழைத்தவராக இருக்கலாம். அதற்காக கம்ப்யூட்டர், லேப்டாப், ஆப்பிள், பிளாக்பெரி தெரிந்திருக்க வேண்டாமா? 'எத்தனையோ துறை இருந்தாலும் அம்மாவுக்குப் பிடித்த துறை இதுதான். கால்நடைகளுக்கும் அம்மா என்று அழைப்பதைத் தவிர வேறு தெரியாது. எனக்கும் அப்படித்தான்’ என்ற

பஞ்ச் டயலாக் மட்டும்தான் சின்னய்யாவிடம் இருந்து இதுவரை சிதறுகிறது. விஜயகாந்திடம் வம்பு இழுத்து அவரைச் சபைக்கு வரவிடாமல் செய்தது மட்டும்தான் பால்வளம் மூர்த்தியின் ஒரே சாதனை. டாக்டர் சுந்தராஜின் காமெடிக் காட்சிகள் தேனி வட்டாரத்தில் கதைப் பாடல்களாக உலவுகின்றன. ரமணாவுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் மீது மாசு அதிக மாகப் படிந்திருப்பதே இன்னமும் புரியவில்லை. மீன் வளத் துறை ஜெயபாலுக்கு, லோக்கல் முக்கியஸ்தரான ஓ.எஸ்.மணியத்தின் குடைச்சல்களைச் சமாளிக்கவே நேரம் போதவில்லை. பூ.செந்தூர்பாண்டியன், என்.சுப்பிரமணியன் முஹம்மத் ஜான் ஆகியோர் ஓரமாக இருக்கிறார் கள். தோப்பு வெங்கடாசலம் இப்போதுதான் வந்திருக்கிறார். இவர்கள் எல்லாம் வரிசையில் நின்று வணக்கம் வைக்கும்போது மட்டுமே முதல்வரின் ஞாபகத்துக்கு வருகிறார்கள்!

அம்மா என்றால் பயம்!

முதல்வர் நிஜமாக நின்றாலும் நிழலாய்த் தெரிந்தாலும் பயம்... பயம்... பயம்! முதல் முறை ஆட்சியின்போது ஜெயலலிதாவே இதனை ரசித்தார். அது சகிக்க முடியாத அளவுக்குப்போனதால் இப்போது அதனை முதல்வரே விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், இவர்கள் திருந்தவில்லை. நமக்கு ஒரு பொறுப்பு தரப்பட்டுள்ளது என்று இவர்கள் நினைக்கவில்லை. ஏதோ அதிர்ஷ்டம் அடித்ததாக நினைக்கிறார்கள். அதன் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும்!

அம்மா ஸ்கூல்... ஆள் பாஸா?

இதற்கு ஜெயலலிதாவும் ஒரு முக்கியமான காரணம். ஒவ்வொருவரையும் தனித்துச் செயல்பட அவர் அனுமதித்திருக்க வேண்டும். முக்கியமான அறிவிப்புகளைச் சபையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சொல்லாமல் முதல்வரே சொல்வார். அதுகூடப் பரவாயில்லை. அமைச்சர்களின் சட்டமன்றப் பேச்சுக்கள் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வப் பத்திரிகையான 'நமது எம்.ஜி.ஆர்’ இதழில் இரண்டு பக்கங்களுக்கு வெளிவரும். அதில் அமைச்சரின் படத்தை வைக்காமல் முதல்வரின் படத்தையே வைப்பார் கள். அதாவது, அமைச்சர்களின் அடையாளங்கள், தனித்தன்மைகள் எதுவும் தெரியாமல்போகின்றன. முக்கியமானதை முதல்வர் பார்த்துக்கொள்வார் என்று மந்திரிகள் நினைப்பதும் மந்திரிகளுக்கு அந்த அளவுக்கு விவரம் இல்லை என்று அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதும்தான் இன்றைய அமைச்சர்கள் பலரின் பலவீனம்.

தங்களது ஆலோசனைகளை நேரடியாகவோ உடனடியாகவோ முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் சூழ்நிலை இல்லை என்ற வருத்தமும் அமைச்சர்களுக்கு இருக்கிறது. முதல்வரின் செயலாளர்களையே 'முதல்வர் களாகப் பாவித்து’ப் பேச, கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நிலைமை.

'தினமும் ஒரு அமைச்சரை அரை மணி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலே அவர்கள் சிறப்பாகச் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்’ என்ற ஆலோசனையில் அர்த்தம் இருக்கவே செய்கிறது. இதெல்லாம் நடந்தால் நல்லதுதான்... ஆனால், நடக்க வேண்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism