Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

அ.குணசேகர், புவனகிரி.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நரேந்திர மோடி - நிதிஷ்குமார் இருவரில் யார் சிறந்த பிரதமர் வேட்பாளர்?

மாநில அரசியலில் கொடி கட்டிப் பறந்தவர்கள் தேசிய அரசியலில் தாக்குப்பிடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிறந்த நிர்வாகிகள் மட்டுமே சிறந்த பிரதமர்களாகவும் ஆகிவிட முடியாது. நரேந்திர மோடியை ஒருவேளை பாரதிய ஜனதா முன்னிறுத்தலாம். ஆனால், நிதிஷ்குமாருக்கு அந்த வாய்ப்பும் இல்லை.

கழுகார் பதில்கள்

'காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத ஒருவர் பிரதமர் ஆகலாம்’ என்று அத்வானி சொல்வதை வைத்து நிதிஷ் பெயரைச் சேர்க்கிறீர்கள் போலும். ஆனால், அப்படி ஒரு போட்டிக்கான பரிசீலனைப் பட்டியலில்கூட நிதிஷ் வர மாட்டார்!

 புயல்.சிவக்குமார், பவித்திரமாணிக்கம்.

கழுகார் பதில்கள்

அரசு வேலைக்குப் போலியான சாதிச் சான்றிதழ்  கொடுத்து 1,832 பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளது பற்றி?

##~##

சாதியே போலிதான் என்று நினைத்திருக்கலாம். பணம் கொடுத்தால் போலி மரணச் சான்றிதழே வாங்கி விடலாம் எனும்போது, சாதிச் சான்றிதழ் எம்மாத்திரம்!

 என்.வி.சீனிவாசன், புதுப்பெருங்களத்தூர்.

கழுகார் பதில்கள்

காலரா நோய் பரவல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்கிறதே தமிழக பா.ஜ.க.?

காலரா பாதிப்பு இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்ளாதவர்கள் எப்படி வெள்ளை அறிக்கை வெளியிடுவார்கள்? காலராவை விட, 'காலரா பாதிப்பு இருக்கிறது, ஈக்கள் அதிகமாகி​விட்டன’ என்று சொல்வதற்குத்தானே பயப்பட வேண்டி இருக்கிறது.

 பேராண்மைச் செல்வன், சென்னை-16.

கழுகார் பதில்கள்

அமெரிக்காவில் ஆறு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது ஓர் இரங்கல் வார்த்தை கூடச் சொல்லவில்லையே?

சீக்கியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்றால், பஞ்சாப் பதறும். ஆனால், தமிழகம் என்ன கொதிக்கவா போகிறது என்று நினைத்திருப்பார் பிரதமர். இனப்பாசம் இருக்கும் அளவுக்கு இந்தியப் பாசம் இல்லாமல் போனதன் விளைவு அது!

 கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

கழுகார் பதில்கள்

தனது 70 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் டெசோ மாநாட்டுக்கு ஏற்பட்ட சோதனை போல தனது வாழ்க்கையில் கருணாநிதி அனுபவித்திருப்பாரா?

இல்லை! 30 ஆண்டுக்கு முன், கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டுக்கு அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் வந்தனர். இன்று எவரும் வரவில்லை. கருணாநிதி தனது பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தால் கூட டெல்லித் தலைவர்கள் ஓடோடி வந்த காலம் இருந்தது. ஆனால், அதுவும் மாறிவிட்டது. பாதிப்பேர் வரவே ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொண்டவர்களும் கடைசியில் வரவில்லை. ஈழத்தில் முரண்பட்டு நின்ற போராளி இயக்கங்கள்கூட கருணாநிதி அழைப்பை ஏற்று அப்போது வந்தனர். ஆனால் இப்போது, இலங்கையில் ஒன்றாகச் சுற்றிவரும் எம்.பி-க்கள்கூட வரவில்லை. தி.மு.க-விலேயே கூட, 'இதெல்​லாம் காலம் கடந்த முயற்சி’ என்று நினைக்கும் ஆட்கள்​தான் அதிகம். ஏன்... குடும்ப வாரிசுகளுக்கே, இப்படி ஒரு மாநாடு நடத்துவதில் விருப்பம் இல்லை.

டெல்லி, இலங்கை, தமிழகத் தமிழர்கள், தமிழ் ஈழத் தமிழர்கள், கட்சிக்காரர்கள், குடும்பம்... இப்படி யாருக்குமே பிடிக்காமல் ஒரு மாநாட்டை நடத்துவது சோதனைதானே? அவசியம் இல்லாத ஒரு தடையைப் போட்டு ஜெயலலிதா இதை சாதனை ஆக்கியது மட் டும்தான், கருணாநிதியின் சக்சஸ்!

 த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கழுகார் பதில்கள்

விமர்சனங்களை ஆட்சியாளர் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்கிறார் வள்ளுவர். அறிவுரையோ விமர்சனமோ யார் வேண்டுமானாலும் சொல் லலாம். அதில் உள்நோக்கம் அற்ற உண்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதே வள்ளுவர், விமர்சனம் செய்பவர்களுக்கும் ஓர் இலக்கணம் சொல்கிறார்.

நன்றாற்றலுள்ளும் தவறுண்டாம் அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.

அதாவது நீ நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் சொல்கிறாய். ஆனால், அது யாருக்குச் செய்கிறாய் என்பது முக்கியம். பண்பற்ற மனிதர்களுக்கு நல்லது செய்தாலும் அது தவறுதான் என்கிறார். ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமே இவை பொருந்தும்!

 சம்பத் குமாரி, திருச்சி பொன்மலை.

கழுகார் பதில்கள்

டெசோ மாநாட்டுக்கு வருபவர்கள் எந்தக் கட்சிக் கொடியையோ, எந்தத் தலைவரின் படத்தையோ கொண்டு வரக்கூடாது என்று கருணாநிதி உத்தரவு போட்டிருந்தது ஏன்?

யாராவது ஒரு தொண்டன் உணர்ச்சிவசப்​பட்டு பிரபாகரன் படத்தை எடுத்து​வந்து விட்டால் என்னாவது என்ற பயம்தான்!

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்

போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டின் கிரானைட் ஊழல், 2ஜி ஊழலை ஜூஜூபி ஆக்கிவிடும் போலிருக்கிறதே?

உண்மைதான்! தமிழ்​நாட்டின் இயற்கை வளம் கடந்த 20 ஆண்டு காலமாக இரண்டு பிரதானக் கட்சிகளின் ஆட்சி​யிலும் கேட்பார் இல்லாமல் சுரண்டி பட்டப்பகலில் நாடு கடத்தப்பட்டுள்ளது என்பதற்கு அப் பட்டமான சாட்சி இந்தச் சம்பவம். இதுவரை கொள்ளை அடிக்கப்பட்ட சொத்துக்கள், வெளிநாட்டில் பதுக்கப்பட்டவை, லஞ்சமாகத் தரப்பட்டவை, தானமாகத் தரப்பட்ட குவாரிகள்... இன்னும் மிச்சம் இருப்பவை என்று பார்த்தால் பல லட்சம் கோடி தேறும் என்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சென்ற கிரானைட் கற்களின் மதிப்பை முறைப்படி வாங்கும் பணிகளை இப்போதுதான் மதுரை மாவட்ட நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. அந்தத் தகவல்கள் கிடைத்தால், அதனுடைய உண்மையான மதிப்பை அளவிட முடியும்!

 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

கழுகார் பதில்கள்

'இலங்கைத் தமிழருக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க.’ என்கிறாரே ஸ்டாலின்?

இது தவறான தகவல். 1976, 1991 ஆகிய இரண்டு முறை தி.மு.க-வின் ஆட்சி தமிழகத்தில் கலைக்​கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை துணிச்சலாக கருணாநிதி எதிர்த்தார். அதனால்தான் அவரது ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது. இதுதான் உண்மை. அந்தக் கால கட்டத்தில் இலங்கைப் பிரச்னை எழவும் இல்லை. அதில் இந்திராவுக்கும் கருணாநிதிக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

1991-ம் ஆண்டு கலைப்புக்கு விடுதலைப் புலிகள் விவகாரம் ஒரு காரணமாக ஆக்கப்பட்டது உண்மை​தான். தன்னுடைய எதிரியான வி.பி.சிங்கை கருணாநிதி ஆதரிக்கிறார் என்பதால், ஜெயலலிதாவுடன் அதிக நெருக்கம் காட்டினார் ராஜீவ் காந்தி. அன்றைக்கு காங்கிரஸின் தயவில் ஆட்சியில் இருந்தார் பிரதமர் சந்திரசேகர். ராஜீவைத் திருப்திபடுத்துவதற்காக, 'தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விட்டனர். அதற்குக் கருணாநிதியும் உடந்தை’ என்று காரணம் சொல்லி ஆட்சியைக் கலைத்தார்கள்.

எனவே, ஸ்டாலின் சொன்னதில் பாதி உண்மைதான் இருக்கிறது!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

'டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைத் தலைவர்கள், எம்.பி-க்கள் மீது தனிக் கவனம் செலுத்தப்படும்’ என்று அந்த நாட்டு அரசு மிரட்டுகிறதே?  

எம்.பி-களுக்கே இவ்வளவு அச்சுறுத்தல் என்றால், அப்பாவித் தமிழர்கள் வாழ்க்கை அங்கே எப்படி இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism