ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

குமரகுரு, திருத்தங்கல்.

வ.உ.சி. என்றதும் நினைவுக்கு வருவது?

தியாகம் என்றே அனைவரும் நினைப்பர். ஆனால், வ.உ.சி. செய்நன்றி அறிதலின் சின்னம். வாழ்ந்த காலத்தில், அளவுக்கு அதிகமாக அவர் உதாசீனப்படுத்தப்பட்டவர். இந்தியாவின் விடுதலைக்காக தன்னையும் சுகதுக்கங்களையும் இழந்து போராடிய அவருக்காக வழக்கு மன்றத்தில் வாதாட யாரும் அந்தக் காலத்தில் முன்வரவில்லை. ஆன்மிகவாதியாக இருந்த 'சிவக்கவிமணி’ சி.க.சுப்பிரமணிய முதலியார் மட்டுமே வந்தார். அதனால், சுப்பிரமணிய முதலியாரைக் கைது செய்து, அவர் வசம் இருந்த வ.உ.சி. பற்றிய ஆவணங்களைக் கைப்பற்ற பிரிட்டிஷ் போலீஸார் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர்.

கழுகார் பதில்கள்

அப்போது, சுப்பிரமணிய முதலியார் வீட்டில் இல்லை. அவரது மனைவி மீனாட்சி, போலீஸைப் பார்த்ததுமே ஆபத்தை உணர்ந்து அனைத்து ஆவணங்களையும் அடுப்பில் போட்டு எரித்து​ விட்டார். போலீஸால் எதையும் கைப்பற்ற முடியவில்லை. அதனால், ஆவணங்களே இல்லாமல் வழக்கை நடத்தினார்களாம். நன்றி மறவாத நல்ல தமிழரான வ.உ.சி., இந்த நிகழ்வின் நினைவாக தனது மகனுக்கு சுப்பிரமணியன் என்றும் மகளுக்கு மீனாட்சி என்றும் பெயரிட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வ.உ.சி-யின் வழக்கறிஞர் உரிமை பறிக்கப்பட்டது. வறுமையில் வாடிய அவர் அந்த உரிமையைக் கேட்டு விண்ணப்பித்தார். நீதிபதி வாலேஸ் என்ற வெள்ளைக்​காரர் அனுமதி தந்தார். அவரின் நினைவாக தனது இன்னொரு மகனுக்கு 'வாலேஸ்வரன்’ என்று பெயரிட்டார். வ.உ.சி-யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் இது!

 செ.அ.ஷாதிலி, கோனுழாம்பள்ளம்.

முரண்பாடான கொள்கைகள் கொண்ட இரண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வது ஏனோ?

பொது எதிரியை வீழ்த்துவதற்காக என்று தத்துவார்த்தமாகச் சொல்லலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற யதார்த்தமாகவும் கருதலாம்!

 எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

க.அன்பழகன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் உள்ள வித்தியாசம்?

##~##

இருவருக்கும் எந்த ஒற்றுமையுமே கிடையாது. நம்பர் டூ என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள். பன்னீரை அ.தி.மு.க-வின் நம்பர் டூ என்றால், அது அவருக்குத்தான் ஆபத்து.

அன்பழகன், பெரியாரின் பாராட்டைப் பெற்றவர். பாரதி​தாச​னால் பாடப்பட்டவர். அண்ணாவுக்கு அறி​வுரை சொல்லக்​கூடியவர். கருணாநிதி இவரைப் பார்த்து இன்னமும் பயப்​படுவார். இந்தப் பாரம்பர்ய வரிசை எதுவும் பன்னீருக்குக் கிடையாது.

அறிவாளி என்பதால் அன்​பழகன் இந்த இடத்​தையும், பணி​வானவர்(?) என்பதால், பன்னீர் இந்தப் பொறுப்பையும் அடைந்தார்கள்!

 பா.ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியிடம், 'விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள்?’ என்று ஒருவர் கேட்க, அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்களே?

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பார்த்துக் கேள்வி கேட்கும் உரிமையாவது மேற்கு வங்கத்தில் இருக்கிறதே... பரவாயில்லையே!

 புவனேஸ், சேலம்.

  'இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்களிடையே பீதியைக் கிளப்பும் எஸ்.எம்.எஸ்-கள் பாகிஸ்தானில் இருந்து பரப்பப்படவில்லை. இந்தியா ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கைக்குத் தயார்’ என்கிறாரே பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலீக்?

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் இறங்கிய 20 பேர் கொண்ட ஆதாரப் பட்டியல், பாகிஸ்​தானுக்குத் தரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன செய்தார்கள்?

சொந்த நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல், இந்தியாவை எரிச்சல்​படுத்து​வதே பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்து வருகிறது. இதுபற்றி வருத்தமும் வேதனையும்பட வேண்டியவர்கள் முதலில் பாகிஸ்தானியர்களே!

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பதவியில் இருந்தபோது வந்த அன்பளிப்புகளை ஜனாதிபதி மாளிகையில் வைக்காமல் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றது சரியா?

தவறு! அந்தப் பரிசுப் பொருட்கள் தனிப்பட்ட பிரதிபா பாட்டீலுக்குத் தரப்​பட்டவை அல்ல. குடியரசுத் தலைவர் என்​பதற்காகத் தரப் பட்டவை. அதை ஒருவர் எடுத்துச் செல்கிறார் என்​றால், எப்படிப்பட்டவரை இந்தி​யாவின் முதல் குடிமக​னாகப் பெற்றிருக்கிறோம் என்று பாருங்கள்!

மேற்கு வங்க கவர்னராக இருந்த ராஜாஜிக்கு ஏராளமான பொருட்கள் வந்தன. அங்கிருந்து விடைபெற்றுத் தமிழகம் திரும்பியபோது, அவை அனைத்தையும் எடுத்துப் போகச் சொன்னார்கள். 'இது ராஜகோபாலாச்சாரிக்கு வந்தவை அல்ல... கவர்னருக்கு வந்தது’ என்று சொன்னார். அவரால் அந்தப் பதவி தகுதி பெற்றது!

 பாரதி கண்ணன், கோபி.

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அனைத்து ஊர்களிலும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பயன் உண்டா?

நீண்ட காலமாக எதை மறந்து இருந்தார்களோ... அதை நினைக்க ஆரம்பித்துள்ளனர். தி.மு.க-வில் லட்சியவாதிகள் குறைந்து சுயநல​வாதிகள் அதிகமானதற்குக் காரணம், சமூக நீதி, மொழிப் போர், திராவிட இயக்க வரலாற்றைப் பயிற்றுவிக்காததுதான். இந்த வகுப்புகளை எடுப்பதற்கே ஆட்கள் குறைந்துபோன அவலம் அதைவிடக் கொடுமையானது. மூத்தவர்களில் பேராசிரியர் நன்னனும் திருச்சி செல்வேந்திரனும்... கொஞ்சம் இளையவர்களில் திருச்சி சிவாவும், கம்பம் செல்வேந்திரனும் இல்லாவிட்டால் பயிற்சி யாளர்களே இல்லாமல் போயிருக்கும்.

ஸ்டாலின் செய்யும் நல்ல காரியம் இது!

 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

'தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன்’ என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்னாரே. இப்போது தமிழ் ஈழம் குறித்து அவர் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

அடுத்த தேர்தல் வந்தால்தான் தெரியும். இடையில் அதைப்பற்றி எதற்குப் பேச வேண்டும் என்று நினைப்பார்.

 ரேவதி ப்ரியன், ஈரோடு.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு என்ன ஆகும்?

செப்டம்பர் முதல் வாரம் வரை காத்திருங்கள்!

 ராஜாராம், கிருஷ்ணகிரி.

'வழக்கு, சிறை எதற்கும் பயப்பட மாட்டேன்’ என்கிறாரே விஜயகாந்த்?

சட்டசபைக்கு மட்டும்தான் பயப்படுவாரோ?

கழுகார் பதில்கள்