ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

''இப்போதும் ஆரம்பம் கிரானைட்டில் இருந்துதான்'' என்றபடி

நுழைந்த கழுகார், மளமளவெனத் தொடங்கினார்.

''தி.மு.க. புள்ளிகள் மத்தியில் கிரானைட் விவகாரம் பலத்த பீதியைக் கிளப்பி உள்ளது என்று சொல்லி இருந்தேன். தி.மு.க-வின் மிக மூத்த பிரமுகர் ஒருவர் பெயரிலேயே கிரானைட் இருக்கும் விஷயத்தையும் உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த மூத்த பிரமுகர் வருத்தமாய்ச் சொன்ன விஷயங்கள் இப்போது கிடைத்துள்ளன. 'என் மகனுக்குக் கிரானைட் குவாரி ஒதுக்கியது உண்மை. ஆனால், அவனை நிம்மதியாகத் தொழில் நடத்தவிடாமல் விரட்டியது அதைவிட உண்மை. மதுரைக்கு அருகில் கிரானைட் தொழில் நடத்த அவனுக்கு அனுமதி கிடைத்ததும், அந்த அதிபரின் ஆட்கள் நம் கட்சிக்காரர்களையே தூதுவிட்டார். உங்களால் இங்கே வந்து தொழில் பண்ண முடியாது. எவ்வளவு லாபம் வருமோ... அதை விட அதிகமாகவே நாங்கள் தர்றோம்னு சொன்னாங்க. ஆனால் என் மகன், இந்தத் தொழிலை நேரடியாவும் சட்டபூர்வமாகவும் செய்ய ஆசைப்பட்டான். பெரிய குடும்பத்தோட தம்பி  இது சம்பந்தமாப் பேசியது. இலக்கியகர்த்தா ஒருத்தர் பேசினார். இது என்னடா வம்பாப்போச்சுன்னு நாங்க சும்மா இருந்துட்டோம். அதுதான் உண்மை’ என்றாராம் அந்தப் பிரமுகர்''

''அவருக்கே இந்தக் கதியா?''

''இதைச் சொல்லிவிட்டு, 'என்னையே இந்த அளவுக்கு நோகடிச்சவங்க... மத்தவங்களை என்னவெல்லாம் பண்ணி இருப்பாங்க?’ என்றும் நொந்துபோய்ச் சொன்னாராம். 'தலைவர் இந்த விஷயத்தில் மௌனமா இருக்கக் கூடாது’ என்றும் சொன்னாராம்!''

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

''ஏராளமான ஆட்களுக்குச் சிக்கலாகும்போது கருணாநிதியால் எப்படி மாட்டிக்கொள்ள முடியும்?''

''பி.ஆர்.பி-யின் சரண்டருக்கு முன்பு ஏகப்பட்ட திகில் திருப்பங்கள் நடந்துள்ளன. 'டெல்லிக்குச் சென்ற பி.ஆர்.பி. மத்திய ஆட்சியில் மிகச் செல்வாக்கான பிரமுகர்  வீட்டுக்குச் செல்ல முயற்சித்துள்ளார். உஷாரான பிரமுகர், தனது மகனுடைய நண்பரின் வீட்டுக்குப் போகச் சொல்லி இருக்கிறார். மகனின்

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

நண்பரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அவரது செல்போனில் இருந்து பி.ஆர்.பி-க்குப் பேசியதாகச் சொல்கிறார்கள் டெல்லியில். 'நீங்கள் தமிழகத் தலைவரிடம் பேசுங்கள்’ என்று அந்த காங்கிரஸ் பிரமுகர் சொன்னாராம். அங்கிருந்து தமிழகத் தலைவரிடம் பேசி இருக்கிறார் பி.ஆர்.பி. அவர், ஒரு முன்னாள் அமைச்சரை  தொடர்புகொள்ளச் சொல்லி இருக்கிறார். அவருடனும் பேசினாராம். அதன் பிறகு தலைவரிடம் பேசிய முன்னாள் அமைச்சர், 'நிச்சயம் நாம் அவருக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’ என்று வலியுறுத்தினாராம்!''

''எப்படி உதவுவார்களாம்?''

''உடனே, மத்தியப் பொறுப்பில் இருக்கும் ஒரு பிரமுகருக்குத்  தகவல் தரப்பட்டது. அவர், 'பெங்களூருல விஜயமல்லையாவிடம் பேசுறேன்’ என்றாராம். 'ஜெயலலிதாவிடம் நேரடியாகப் பேசக்கூடியவர் அவர்தான்’ என்றும் அந்தப் பிரமுகர் சொன்​னாராம். இவர் சொன்னாரா, அவர் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் பி.ஆர்.பி-க்கு ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டன. 'அதுக்கு முன்னால் நீங்கள் லீகலாக சரண்டர் ஆகிவிடுங்கள்’ என்றும் சொல்லப்பட்டதாம். 'என்னை எப்படியாவது காப்பாத்துங்க.... வர்ற எம்.பி. தேர்தல்ல மொத்தச் செலவையும் நான் பார்த்துக்கிறேன்’ என்று அப்போது வாக்குறுதியும் கிரானைட் தரப்பில் சொல்லப்பட்டதாம்!''

''ஓஹோ... அதன் பிறகுதான் சரண்டர் ஆனாரா?''

''இந்தப் பக்கம் போலவே அந்தப் பக்கமும் கிரானைட் தரப்பு தகவலை விதைத்ததாம். சரண்டர் ஆன பி.ஆர்.பி-யை நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்கு முன்னால் நெடுநேரம் போலீஸார் தங்கள் வசம் வைத்திருந்தார்கள் அல்லவா? அப்போது, தன்னைப் பரிசோதிக்க டாக்டர் ஒருவர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம் பி.ஆர்.பி. போலீஸார், ஒரு டாக்டரை அழைத்து வந்துள்ளார்கள். 'நான் சொல்லும் டாக்டர்தான் வரவேண்டும்’ என்று அடம் பிடித்திருக்கிறார். போலீஸார் வேறு வழியின்றி சம்மதித்துள்ளார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சரின் தம்பி மகனாம் அந்த டாக்டர். டாக்டர் சோதனை செய்த நேரத்தில், போலீஸார் அருகிலேயே நின்றார்களாம். உடனே, 'தள்ளி நில்லுங்கள்’ என்று பி.ஆர்.பி. சொல்ல... இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பிறகு போலீஸ், தள்ளி நிற்க... அந்த மருத்துவரின் காதில் ஏதோ கிசுகிசுத்தாராம் பி.ஆர்.பி.

மன்னார்குடி வட்டாரத்தில் உள்ள மூன்றெழுத்துப் பெரியவர்  ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, 'அவரிடம் நான் சொன்னதாச் சொல்லுங்க. என்ன வேணும்னாலும் தரத் தயாரா இருக்கேன். எம்.பி. தேர்தல் செலவு மொத்தத்தையும் நான் பார்த்துக்கத் தயாரா இருக்கேன்’ என்று சொல்லச் சொன்னாராம். 'எல்லாப் பக்கமும் வலை வீசியதும் பணத்தை வைத்துத்தான்’ என்கிறார்கள்''

''ம்!''

''அந்த மருத்துவரும் மன்னார்குடி வட்டாரத்தில் முக்கியமான மருத்துவர் ஒருவரும் வகுப்புத் தோழர்களாம்.  இந்தக் குடும்பத்தில் மேலும் சிலரை அறிந்தவராம் அவர்.  எனவே அவர் நிச்சயம் உதவி செய்வார் என்று கிரானைட் தரப்பு நினைக்கிறதாம்!''

''அவர்களுக்கு வேறு என்ன நம்பிக்கை?''

''டெல்லித் தரப்பை அதிகமாக நம்புகிறார்கள். 'பொதுவாக இதுபோன்ற மாபெரும் கொள்ளை வெளிச்சத்துக்கு வந்தால், உடனடியாக மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் உள்ளே நுழைந்து தங்கள் பங்குக்குக் குடைச்சலைக் கொடுக்கும்.

கிரானைட் குவாரி வெட்டி எடுத்து ஏற்றுமதி விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு மற்றும் அந்நியச் செலவாணி முறைகேடு என்கிற குற்றச்சாட்டு எங்கே எழுந்தாலும், அங்கே மத்திய அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மனே இல்லாமல் ஆஜராகிவிடுவது வழக்கம். 100% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு வருமான வரி மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான டீசல், வாகனங்கள், எந்திரங்கள்... போன்றவற்றை வாங்குவதற்கு முழு வரிவிலக்கு அளிப்பது உண்டு. இந்தவகையில் வரும் வரிச்சலுகைகளை முழுவதுமாக ருசி கண்டவர் பி.ஆர்.பி. உதாரணத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்ற இடத்தில் இருந்து கிரானைட் வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்ய மத்திய தீர்வை வரி, விற்பனை வரி, இறக்குமதி வரி என்று பல்வேறு வகையில் வரிச்சலுகை காட்டப்படுகிறது. ஒருசில இடங்களுக்கு இந்தவகையில் மத்திய அரசின் அனுமதி வாங்கிவிட்டு, சட்டவிரோதமான முறையில் நடந்த எல்லா குவாரிகளிலும்  வரிவிலக்குகளை அனுபவித்திருக்கிறார்களாம்.   இதனால், கடந்த பல ஆண்டுகளில் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தவகையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்பது இது தொடர்பான கணக்கீடுகளில் கில்லாடியான சிலரது கணிப்பு. ஆனால் இந்த தரப்பு அமைதியாக இருக்கிறதே!''

''வெளிநாட்டு ஏற்றுமதி விவகாரத்தில் மோசடி என்றாலே பெர்ஃரா சட்டம் பாயுமே?''

''அதையும் நிதித்துறைத்தான் கவனிக்கிறது. வரிச்சலுகை அனுமதி பெற்ற இடத்தில் உள்ள கருவிகள், டிரக்குகள், லாரிகள்...இப்படி எதுவானாலும் அனுமதி பெறாத இடத்தில் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பி.ஆர்.பி. நிறுவனத்தினர் ஒருமுறை வாகனங்களுக்கு சலுகை விலையில் வாங்கிய பெட்ரோல் விஷயத்தில் ஏதோ மோசடி செய்ய... அந்த கம்பெனியை மூட வேண்டியாகிவிட்டதாம். அதன் பிறகு, புதுப்பெயரில் வேறு ஒரு கம்பெனியை துவக்கி அதே தவறுகளை திரும்ப செய்துவந்தார்களாம்.  நாக்பூரில் வெடிமருந்து பொருள் அலுவலகம் இருக்கிறதாம். குவாரி வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து விவகாரங்களை இவர்கள்தான் கவனிக்கிறார்கள். அவர்கள் தரப்பும் இதுவரை சைலண்ட்.  பல்லாயிரம் கோடி பணம் சம்பந்தப்பட்ட இந்த கிரானைட் மேட்டரை மதுரை மாவட்ட நிர்வாகம், போலீஸ், வருவாய்த் துறை ஆகிய மூன்றும் குடைந்துகொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் துறைகள் மௌனமாக இருக்கிறது.  'இதற்குக் காரணம் கிரானைட் அதிபருக்கு இருக்கும் லாபிதான்’ என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!''

''அப்படியா?''

''இத்தனை ஆண்டுகளும் மத்திய அரசுத்துறைகள்  மௌனமாக இருந்தது ஏன்? இப்போதும் மௌனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்து அநேகமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வரலாம். 'இந்த வழக்கை நாம் விசாரித்தால், முறைப்படி செய்ய முடியும். சி.பி.ஐ. வசம் போனால் பலரும் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று ஆட்சி மேலிடத்தில் உலவுபவர்கள் சொல்ல

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

ஆரம்பித்திருப்பதும் இதனால்​தான்.  'ஸ்பெக்ட்ரம் வழக்கு தி.மு.க-வுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருப்பதைப்​போலவே, இந்த கிரானைட் வழக்கும் மாறப்போவதற்கான சூழ்நிலை நெருங்கிக்​கொண்டு இருக்கிறது'' என்ற கழுகார் வேறு டிராக் மாறினார்.

''மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஊரில் இல்லாத நேரத்தில் மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளர் பதவிக்கு கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இது மதுரை தி.மு.க-வையே இரண்டுபடுத்திவிட்டது. இந்தக் குழப்பங்களுக்குக் காரணமான மாநகரச் செயலாளர் தளபதியை ராஜினாமா செய்யச் சொல்லி அழகிரி பிரஷர் கொடுத்ததால், அவரும் கடிதம் கொடுத்தார். அதை ஏற்காமல் ஒதுக்கிவைத்தது தலைமை. அதே நேரத்தில் ஸ்டாலின் வருகையைப் புறக்கணித்தார்கள் என்று அழகிரி விசுவாசிகள் 17 பேருக்கு தி.மு.க. தலைமை நோட்டீஸ் அனுப்பியது. அதற்குப் பதில் கொடுத்தவர்கள், 'அண்ணன் ஊரில் இருக்கும் நாளில் மதுரை மாவட்டத்தில் மறுபடியும் இளைஞர் அணிக்கு நேர்காணல் நடத்த வேண்டும். தளபதியைப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று தலைமைக்கே போய் முழங்கிவிட்டு வந்தார்கள்.''

''இதை ஏற்கெனவே நீர் சொல்லி இருக்கிறீர்!''

''அப்போது, 'டெசோ மாநாடு முடிந்ததும் பார்க்கலாம்’ என்று சொல்லி அவர்களை தட்டிவைத்திருந்தது தலைமை. இந்த நிலையில், 'மதுரை மாவட்ட இளைஞர் அணிக்கான நேர்காணல் ஆகஸ்ட் 26-ம் தேதி பாளையங்கோட்டையில் நடக்கும்’ என அறிவித்தார் ஸ்டாலின். 'முரசொலி’யில் இந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு கொந்தளித்த அழகிரி, 'பிரச்னையைத் தீர்க்க வழியைச் சொல்லுங்கய்யான்னா... புதுசு புதுசா பிரச்னையை உருவாக்கிட்டே போறாங்க. கட்சியில் இருக்கிற சாதாரணத் தொண்டன் பணம் காசை செலவழிச்சிக்கிட்டு நெல்லைக்குப் போக முடியுமாய்யா..? தளபதியை நீக்கணும்னு சொல்லிருக்கோம்ல... அந்த நடவடிக்கையை எடுக்காத வரைக்கும் நாம எந்த நிகழ்ச்சியிலேயும் கலந்துக்க வேண்டாம். அவங்களாவே நேர்காணல் நடத்திக்​கிறாங்க... என்னமோ பண்ணிக்கிறாங்க. நீங்க யாரும் பாளையங்​கோட்டைக்கும் போக​வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம். மதுரையில் 'டெசோ’ விளக்கப் பொதுக் கூட்டம் நடக்க இருக்கிறது. நடிகை குஷ்பு கலந்துகொள்ள இருக்கிறார். அதிலும் அழகிரி ஆட்கள் கலந்துகொள்ள மாட்டார்களாம்!''  

''குஷ்புவைப் பார்க்கத்தான் புதுப்புது ஆட்கள் திரண்டு இருப்பார்களே!''

செல்லமாக முறைத்த கழுகார், ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு நெருக்​கடிகள் அதிகமானபோது குடும்பத்தோடு கோயில் கோயிலாகப் போய் சாமி கும்பிட்டார் அமைச்சர் ப.சிதம்பரம். இப்போது மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளப்பப்படுவதை அடுத்து அவரது குடும்பத்தினர் கோயில், சிறப்பு

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!

யாகம் என மீண்டும் கிளம்பிவிட்டார்கள். காரைக்குடி அருகில் உள்ள மானகிரியில் ப.சிதம்பரத்தின் பண்ணை வீடு இருக்கிறது. இங்கு ஆகஸ்ட் 22-ம் தேதி மாலை தொடங்கிய யாகம் மறுநாள் மதியம் வரை தொடர்ந்தது. 'செப்டம்பரில் மத்திய அமைச்சரவை மாற்றம் வரப்போகிறது. மன்மோகன் சிங் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக சோனியாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தனக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கணக்குப் போடுகிறார் சிதம்பரம். அந்தக் கணக்கு கைகூடி வருவதற்காகவே மானகிரியில் சிறப்பு யாகம் நடக்கிறது’ என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கார்த்தி சிதம்பரம் தரப்பிடம் விசாரித்தால், 'அப்படி எல்லாம் எதுவும் இல்லை. மானகிரி தோட்டத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டார்கள்’ என்று மழுப்புகிறார்கள்'' என்று சொல்லிப் பறந்தார் கழுகார்!

படம்: பா.காளிமுத்து

களை கட்டும் ஸ்ரீரங்கம்!

முதல்வர் வருகையால் களை கட்டி உள்ளது ஸ்ரீரங்கம். பதவியேற்றதில் இருந்து மூன்றாவது முறையாக செப்டம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர். ஆட்சியரும், எம்.எல்.ஏ-க்களும் மட்டும் இருக்கும்படி சித்திரை வீதியில் மேடை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. சென்ற முறை ஜென்ம நட்சத்திரப்படி பிறந்த நாளுக்காக வந்த முதல்வர், கோயிலைச் சுற்றி பொட்டல் காடாகக்கிடந்த நந்தவனத்தைப் பார்த்து தனது அதிருப்தியை வெளியிட்டாராம். எனவே இந்த முறை தோட்டக் கலைத் துறை மூலம் பல லட்ச ரூபாய் செலவில் நந்தவனம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கழன்றுகொண்ட ராசா!

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை பிரதமரிடம் ஒப்படைக்கச் சென்ற தி.மு.க. எம்.பி-க்கள், ஆ.ராசாவையும் அழைத்தார்களாம். 'நான் அங்கே வந்து என்ன பண்ணப்போறேன்? நீங்களே கொடுத்துட்டு வாங்க’ என்று சலிப்புடன் சொல்லிய ராசா, நாசூக்காக ஒதுங்கிக்கொண்டாராம். பிரதமரிடம் மனு கொடுத்தவர்கள், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும் சொன்னார்கள்.

மனு கொடுத்த பிறகு வெளியே வந்தவர்கள், 'நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை முன்பு அடுத்த நாள் மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றும் அறிவித்தார்கள். இடையில் என்ன நடந்ததோ, திடீரென ஆர்ப்பாட்டம் ரத்தானது. ஆனால், போராட்டம் ரத்தான விஷயமே தெரியாமல் தி.மு.க. எம்.பி-க்கள் பலர் கறுப்புச் சட்டையுடன் நாடாளுமன்றத்துக்குக் கிளம்பினார்கள். ஆர்ப்பாட்டம் ரத்தான செய்தி கனிமொழிக்கும் கடைசி நிமிடத்தில்தான் தெரியவந்ததாம்.

குழப்பத்தில் அதிகாரிகள்!

அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்று செய்திகள் வருவதால் அரசு அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளனராம். அடுத்த மாதம் சில அரசுத் துறைகளில் விழாக்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகை அடிக்கும் பணிகளை இப்போதே தொடங்கினால்தான் சரியாக இருக்கும். 'அமைச்சர் துறை மாறினாலோ, கல்தா கொடுக்கப்பட்டாலோ அடித்த பத்திரிகைகள் வீணாகிவிடும் அதே நேரத்தில் பெயரே போடாமல் அச்சடித்தால், அமைச்சர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும்’ என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. கடைசி நேர பேரம்!