Published:Updated:

2ஜி வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: திமுக அவசர கூட்டத்தில் தீர்மானம்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஜூன் 10,2011

2ஜி வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: திமுக அவசர கூட்டத்தில் தீர்மானம்!

2ஜி முறைகேடு தொடர்பாக கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. ##~~##

கருணாநிதி தலைமையில் உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

* சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்.

* இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்பு.

* தமிழக சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்.

* சிபிஐ தொடர்ந்த வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

இந்தத் தீர்மானங்கள் குறித்து ஜூன் 20 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், ஜூலையில் திமுக பொதுக்குழுவை கூட்டுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி.க்கு டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியேறுவது என முடிவு எடுக்கக்கூடும் என்கிற ரீதியில் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.