Published:Updated:

பொங்கல் பண்டிகை: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

Vikatan Correspondent
பொங்கல் பண்டிகை: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!
பொங்கல் பண்டிகை: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் ஜெயலலிதா உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

முதல்வர் ஜெயலலிதா: உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழவுத் தொழிலைப் போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டினுள்ளும் வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புது பானைக்கு மஞ்சள் தழையினைக் காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.

"மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி"

என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாக்கிற்கிணங்க, பிறர்வாழ பாடுபடும் விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்கென "முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்"; வேளாண் கருவிகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கு; சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், ஏனைய விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையிலும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள்; உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் பயறு வகை, சிறுதளை, விதைப் பைகள் விநியோகம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலான கொள்முதல் விலை; வறட்சி ஏற்படின் உடனடி நிவாரணம் என பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையைத் தமிழர்கள் இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்திட எனது தலைமையிலான அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியுள்ள இந்த இனிய வேளையில், என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: தமிழர்களின் திருவிழாவான தமிழர் திருநாளும், தமிழ் புத்தாண்டும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என தமிழர் கலாச்சாரத்தை திரிக்க சிலர் முயன்றாலும், ‘தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு’ என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி தை முதல் நாளையே நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதேபோல் அறுவடைத் திருநாளான பொங்கலை இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும், அத்திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான். அதனால் தான் இந்த திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயரும் உருவானது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் அனைவரும் வீடுகளில் தோரணம் கட்டி,புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு படைத்து மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளாகவே இயற்கை சீற்றங்களாலும், ஆட்சியாளர்களின் செயற்கை சீற்றங்களாலும் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும், மாநில அளவில் மாற்றத்திற்கு வித்திடும் ஆண்டாகவும் இந்த தமிழ் புத்தாண்டு அமையும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இலாபம் தரும் உழவுத் தொழில், குடிசைகள் இல்லாத மாநிலம், ஏழ்மையில்லா தமிழகம், மதுவில்லா பூமி என உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாதான் தைப் பொங்கல் திருவிழாவாகும். பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகும்.

அண்மைக் காலமாக விவசாயிகள் வாழ்வு கண்ணீர்க் களமாகிவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதரங்களான நதிகளின் நீர் ஆதாரங்களுக்கு அண்டை மாநிலங்களால் ஆபத்து சூழ்ந்துள்ளது. ஏற்படும் கேடுகளைத் தடுக்க வேண்டிய கடமை செய்யாத மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு வஞ்சகம் புரிவதால், எதிர்வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ காங்கிரஸ் கட்சிக்கு தோள் கொடுக்க முற்படும் அரசியல் கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்வதே தமிழக மக்களின் தலையாய கடமை ஆகும்.

மனிதகுல வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனத்துக்கும் இழைக்கப்படாத கொடுமையும், படுகொலையும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் இனத்திற்குச் சிங்களப் பேரினவாத அரசால் இந்திய காங்கிரஸ் அரசின் துணையோடு நடத்தப்பட்டது.

##~~##
துன்ப இருளில் இன்னமும் தவிக்கும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க-விடியலின் வெளிச்சத்தை அவர்கள் காண-சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இப்பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம்.
வருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தாய்த் தமிழகத்திலும், தமிழ் ஈழத்திலும், தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கு நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.