Published:Updated:

மீலாதுன் நபி: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

Vikatan Correspondent
மீலாதுன் நபி: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!
மீலாதுன் நபி: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!
மீலாதுன் நபி: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

சென்னை: மீலாதுன் நபியையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் "மீலாதுன் நபி" என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும்

இத்திருநாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையை பேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

இப்புனித மிக்க பொன்னாளில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய "மிலாதுன் நபி" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மீலாதுன் நபி: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பு, அமைதி,சமயநல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர்.சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள்.

##~~##
எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்-; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார்.
அவரது பிறந்தநாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் நாம், அவரது போதனைகளை உண்மையாக பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே,அவர் போதித்த அன்பு, அமைதி, சமாதானம், சமய நல்லிணக்கம், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றை கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.
மீலாதுன் நபி: ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ வாழ்த்து!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: அரபு மொழியில் ‘மீலாது’ எனும் சொல் ‘பிறந்தநாள்’ எனும் பொருளைத் தருவது ஆகும். ஹீரா மலைக்குகையில் திருவருளால் கிடைக்கப் பெற்ற இறைச் செய்தியை, மனிதகுலம் போற்றும் ஒரு மார்க்கமாக நிறுவி, கல்லடியும் சொல்லடியும் எதிர்கொண்டு, துன்பங்கள் நிறைந்த பயணத்தை நடத்தி, தங்களை விட எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகம் உள்ள ஆயுதம் ஏந்திய படைகளை எதிர்த்து வீரச்சமர் புரிந்து வெற்றியும் கண்டு இஸ்லாம் மார்க்கத்துக்கு மகுடம் சூட்டிய பெருமகனாரின் பிறந்தநாளைத்தான் இன்று உவகையுடன் இஸ்லாமிய உலகம் கொண்டாடுகிறது.

இறைவனை வணங்கி வாழ்வோம்; பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம்; எளியோர்க்கு வழங்கி வாழ்வோம் என்று சமூக ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் பாதை அமைத்த நபிகள் (ஸல்) பெருமானாரின் சாதனைகள் இன்றைய மனிதகுலத்திற்கு ஒளியூட்டுகின்றன. இறை நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடன் உத்தமத் திரு நபிகள் (ஸல்) நடத்திய சத்தியப் போராட்டங்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரியாய் அண்ணலை முன் நிறுத்தின. நேர்மையுடனும், தூய்மையுடனும் பெருமானார் வாழ்ந்த எளிய வாழ்க்கைக்கு இணை சொல்ல முடியாது.

அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் மீலாதுன் விழாக்களில் பங்கேற்று நபிகள் பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து மத நல்லிணக்கத்துக்கு வலுவூட்டும் வகையில் சொற்பொழிவு ஆற்றினர். தமிழ்நாட்டில் அன்பையும், பரிவையும், விருந்தோம்பும் உன்னதப் பண்பையும் போற்றி வரும் இஸ்லாமியப் பெருமக்கள், மீலாதுன் விழாவினைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ இனிய மீலாது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.