Published:Updated:

தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!

Vikatan Correspondent
தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!
தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!

-ஸ்ரீசண்முக சிவாச்சார்யர்

அனைவருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள். முதலில்... தைத்திருநாளில், பொங்கல் பண்டிகையின்போது, மதியம் 12 முதல் 1 மணி வரை அல்லது மாலை 5 முதல் 6 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

மாதப் பிறப்பு என்பதே முக்கியமான நாள். அதிலும் தை, சித்திரை, கார்த்திகை என பல மாதங்களின் முதல் நாள் மிகுந்த விசேஷமானதாகப் போற்றப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க மாதம்... தை! பிறக்கும்போதே கோலாகலமான

பண்டிகையுடன் பூமி சார்ந்த விழாவாக, உயிரினங்களைப் போற்றுகிற உன்னதத் திருவிழாவாகத் துவங்குகிறது.

தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

உத்தராயன புண்ய காலத்தின் துவக்கமும் இன்றைக்குத்தான்! பொங்கல் திருநாள், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் என மூன்று நாள் விமரிசையாகக் கொண்டாடி வணங்கவேண்டிய அற்புதமான நாட்கள். இந்தக் கொண்டாட்டத்தில் இன்னொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. 'நன்றி மறப்பது நன்றன்று’ என்கிற வள்ளுவரின் சொல்லுக்கு ஏற்ப, இந்தப் பண்டிகைகள், சூரிய பகவானை வணங்குவதற்கான விழாவாகவும் மாடு- கன்றுகளுக்கு நன்றி பாராட்டும் வைபவமாகவும் கொண்டாடப்படுகிறது.

பழையன கழிதல்!

போகி என்றால் இந்திரன் என்று அர்த்தம். எனவே, இந்திர பூஜையை பொங்கலில் இருந்து செய்வதால், முன்னதாக அதற்கு தயார் படுத்திக்கொள்வதற்காகவும் பழையன கழிதல் எனும் விழாவை வைத்திருக்கலாம். இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம்... இயற்கையை மாசுபடுத்தக்கூடியவை எது என்று பார்த்து அவற்றை விலக்கிவிடுவதே உத்தமம். இயற்கையுடன் இயைந்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பயன்படுத்துவதே நம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை. 'சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது சுத்தமே சிவம். எனவே, தூய்மையான மனதும், இடமுமே சிவபெருமானுக்கு உகந்தது என்பதை உணர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல்!

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த்தம். அதாவது, 'மகிழ்ச்சி பொங்குதல்’, 'பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற வாக்கியமானது சிறந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது.

தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!

மனிதன், பல நேரங்களில் பலவித குழப்பங்களால் சூழப்பட்டு, அவற்றிலிருந்து எப்படி வருவது எனத் தெரியாமல் தத்தளித்து, கலங்கிக் கிடக்கிறான்.  இது போன்று நாம் கஷ்டப்படுவதிலிருந்து காப்பதற்கு பலவிதமான பண்டிகைகளை, நம் இந்து சமயம் அமைத்துத் தந்திருக்கிறது. அவற்றில் மிக எளிமையானதும், மிகுந்த பயனளிப்பதும், அனைவராலும் போற்றக்கூடியதுமான பண்டிகை 'தைப்பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லலாம்!

சிறு வயதில் நானும் என் சகோதரிகளும் எங்கள் தாயார் பொங்கல் வைத்து, ஆதவனை வழிபட்டு பொங்கல் பொங்குகிற சமயத்தில் 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று கூவி, டமாரம் அடித்து மகிழ்ந்ததை மறக்கவே முடியாது.  வயது ஆக ஆக பழையபடி நம்மால் ஆடிப்பாடி கொண்டாட முடியவில்லை என்றாலும், இந்தப் பண்டிகைகளின் பின் இவ்வளவு பயன்கள் உள்ளதா என்பதைக் கண்டு வியந்து மகிழ்கிறேன். எவ்வளவு நல்ல காரியங்கள் நாம் செய்திருந்தால், நாம் மனிதப்பிறவி எடுத்து இது போன்ற உயர்ந்த தர்மங்களை போதிக்கும் சமயத்தில் பிறந்து, நாத்திகனாக இல்லாமல் நமது முன்னோர்கள் கொடுத்துள்ள இந்த அரிய பொக்கிஷங்களை அனுபவித்து வருகிறோம் என நெகிழ்கிறேன்.

வருடத்துக்கு 12 மாதங்கள். அதில் 10-வது மாதம் தை. இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் பண்டிகை என்று நாமும், ஆந்திரம், மேற்கு வங்காளம், கேரளா, பீகார், கோவா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்வதால் மகர சங்கராந்தி என்றும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்வதால் உத்தராயன புண்யகாலம் என்றும் ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் லோஹ்ரி என்றும் பலப்பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.

நன்றி சொல்லுவோம்!

சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத்தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரின் அசைவே காலம். அவர் எந்த ராசியில் அமர்கிறாரோ அதுவே மாதமாகவும், எந்த நேரத்தில் உதிக்கிறாரோ அதுவே நாளாகவும், தன்னுடைய ஒளியினால் மற்ற கிரஹங்களுக்கும் நக்ஷத்திர கூட்டங்களுக்கும் ஒளி பெறச் செய்து, உலகை திறம்பட வழி நடத்துபவரே சூரிய பகவான்!

நன்றி குறித்து நாளெல்லாம் பேசுகிறோம். 'நன்றி கெட்ட உலகம்’ என்று புலம்புகிறோம். உண்மையில், நம் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை ஆற்றலை அளித்துவரும் கதிரவனுக்கு நன்றி சொல்கிறோமா என யோசியுங்கள். நம் முன்னோர்கள், தேவர்களின் காலைப்பொழுதின் முதல் மாதமான இந்த தை மாதத்தில், அதாவது சூரியன் உதிக்கக்கூடிய வேளையில், சூரியனுக்கு நன்றி சொல்வது சிறப்பானது என்று சொல்லிச் சென்றுள்ளார்கள்.

அதேபோல், உழவர்களுக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படும் மாடுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி செலுத்துவோம். அதனால்தான் இந்த விழாவை உழவர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்.

எப்படிச் செய்யவேண்டும் பொங்கல்?

தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!

பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும். ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும். இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

மாட்டுப்பொங்கல்

'மாதர: ஸர்வ பூதானாம்

காவ: ஸர்வ சுக்ப்ரதா:’ என்று உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

தை பிறந்தால்...வழி பிறக்கும்! - பொங்கலோ பொங்கல்!

இன்று காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பச்சை சாதம் (வெற்றிலை பிழித்து கலந்தது), வெள்ளை சாதம், சிவப்பு சாதம் (குங்குமம் கலந்தது) மஞ்சள் சாதம்

(மஞ்சள் கலந்தது, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஐந்து விதமான அன்ன வகைகளை பிடிப்பிடியாக இலையில் வைத்துக் கடவுளை வேண்டுவது வழக்கம். இதுபோன்று சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்குத் தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்வது இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்!

காணும் பொங்கல்!

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அலைபேசியில் பேசி, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் மோசமான சூழல் இது!  எனினும், இது போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டு அன்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். அதற்கான நாள்தான் இன்று! இந்த நாளில் குடும்பத்தார் அவர்களின் நெருங்கிய உறவினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா மையங்களுக்குச் சென்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்!