Published:Updated:

ரேஷன் ஊழியர் பணி: பணம் கொடுத்து வேலையில் சேரும் ஆளும்கட்சியினர்!

Vikatan Correspondent
ரேஷன் ஊழியர் பணி: பணம் கொடுத்து வேலையில் சேரும் ஆளும்கட்சியினர்!
ரேஷன் ஊழியர் பணி: பணம் கொடுத்து வேலையில் சேரும் ஆளும்கட்சியினர்!
ரேஷன் ஊழியர் பணி: பணம் கொடுத்து வேலையில் சேரும் ஆளும்கட்சியினர்!

புதுக்கோட்டை: நியாய விலைக்கடைகளில் பொருட்கள் அளந்து போடும் பணிக்கு, ஆளும்கட்சியினரே பணம் கொடுத்து வேலையில் அமர்த்தப்படுவதால் அக்கட்சியினரே அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு பணியிடங்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு பணி வழங்குவது வாடிக்கைதான். ஆனால் சமீப காலமாக தேர்வு மூலம் பணியிடங்களை அரசு நிரப்பிவந்த நிலையில், சில குறிப்பிட்ட பணிகளுக்கு ஆளும் கட்சியினர் பணம் வாங்கிக் கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்த வேலையை வாங்கிக்கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே சத்துணவு அமைப்பானர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் ஆளும்கட்சியினர் பணம் வாங்கிக் கொண்டே பணியிடங்களை நிரப்பியதாக கூறப்பட்டது. அதற்கு அமுதம் அங்காடி பணி நியமனம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது.

அண்மையில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் ஓவிய ஆசிரியர், தையல் பயிற்சி ஆசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அரசு ஆணையிட்டிருந்தது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் ஒன்றரை லட்சம் என பேரம் பேசிய ஆளும் கட்சி நிர்வாகிகள், ஆளுக்கேற்ப பணத்தை கறந்து பணி கொடுத்தார்களாம். அப்போதே, இது தொடர்பாக சர்ச்சையும் கிளம்பியது.

இப்போது நியாய விலைக்கடைகளில் பொருட்கள் அளந்து போடும் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

##~~##
பெயருக்கு விண்ணப்பம் அனுப்பலாம் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாக, மாவட்டத்திற்கு ஐம்பது பணியிடங்களுக்கு சுமார் நான்காயிரம் பேர் மனு  கொடுத்திருந்தனர். இதைப்பார்த்த  ஆளும்கட்சியினருக்கு ஏக குஷி. காரணம்  தம்மால்  முடிந்த அளவு  பணம்  கறக்கலாம் என்பதுதான். கட்சி புள்ளிகளே  இந்த  பணியிடங்களுக்கு  போட்டிபோட,  "என்ன செய்ய...?  தலைமைக்கு பணம் கொடுக்க  வேண்டும்!" என கையை விரிக்கிறார்களாம் மாவட்ட நிர்வாகிகள்.
ஒரு பணியிடத்திற்கு குறைந்த விலை ஒரு லட்சம் என நிர்ணயம் செய்திருக்கிறார்களாம். நாடாளுமன்ற தேர்தல் வரும் இந்த நேரத்தில் ஆளும்கட்சியினருக்கே பணம் வாங்கிக்கொண்டு பணி வழங்குவது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள் அந்த கட்சி நிர்வாகிகள்.
வீ.மாணிக்கவாசகம்