Published:Updated:

மழைக்கால தொடரில் லோக்பால் தாக்கல்: பிரணாப்

கொல்கத்தா, ஜூன்.13-2011: லோக்பால் மசோதா, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லோக்பால் மசோதாவை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். சட்டம் இயற்றும் அதிகாரம், பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் மட்டுமே உள்ளது. ஆனால், பாராளுமன்றம் என்ன செய்ய வேண்டும் என்று 5 ஆயிரம், 6 ஆயிரம் பேர் வெளியே இருந்து கொண்டு உத்தரவிடுவது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி விடும்.

இருப்பினும், லோக்பால் மசோதா, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். அது எப்போது நிறைவேற்றப்படும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது சாத்தியம் அல்ல.

இந்த விஷயத்தில், சமூக பிரதிநிதிகளின் பிரசாரத்துக்கு பதிலடியாக, காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும். விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகள் என்ற வகையில் இந்த பிரசாரம் நடைபெறும்.

லோக்பால் மசோதா வரைவு குழு கூட்ட ஆலோசனைகளை வீடியோ படமாக எடுக்க வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால், குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிப்பார்கள். இருப்பினும், கூட்ட நிகழ்ச்சிகள் ஆடியோ பதிவு செய்யப்படும். அதை மத்திய அரசின் இணைய தளத்தில் கேட்கலாம்.

மத்திய அரசு ஆணவமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதால்தான், பாபா ராம்தேவ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தியவுடன், மத்திய அரசு பலவீனமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

ராம்தேவ் ஆதரவாளர்கள் மீதான போலீஸ் நடவடிக்கையை நெருக்கடி நிலையுடன் ஒப்பிடுவது சரியல்ல. நெருக்கடி நிலை போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.