Published:Updated:

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1
##~##

''வியாழன் முழுக்கவே சந்தோஷக் களையில் இருந்தார் முதல்வர்!'' என்ற செய்தியுடன் ஆஜரானார் கழுகார்! 

''ஜெயா டி.வி-யின் 14-வது ஆண்டு விழா புதன் கிழமை வெகுபிரம்மாண்ட மாகக் கொண்டாடப்பட்டது. அதில் ரஜினி அடித்த நெருடலான கமென்ட் தவிர, மற்றபடி உற்சாகமாக இருந்தார் ஜெயலலிதா. ஆனால், சினிமா பிரபலங்களுக்குத்தான் வருத்தம். சினிமா சம்பந்தமான அமைப்பின் தலைவர்களை ஏனோ மேடை ஏற்றவே இல்லை. நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஃபெப்ஸி தலைவர் இயக்குனர் அமீர் ஆகியோருக்கு மேடையில் இடம் இல்லை. தேர்தல் நேரத்தில் தோள் கொடுத்த நடிகர் விஜய், ஓரமாய் உட்கார்ந்து இல்லாத தாடியை நீவிக்கொண்டு இருந்தார்.''

''ஏதோ சந்தோஷக் களை என்றீரே..?''

''அன்றைய விழாவுக்கு வந்த பழைய நடிகர்களைப் பார்த்துப் பூரித்துப்போனாராம். 'பார்த்து நாளாச்சே’ என்பது மாதிரியான குசல விசாரிப்புகள்தான் அதிகம். விழா முடிவதற்குள் முதல்வர் முடிவு எடுத்துவிட்டார். முக்கியமான பழைய நடிகைகள் அனைவருக்கும் போயஸ் கார்டனில் மதிய விருந்துக்கு அழைப்பு வந்தது. சில மணி நேரங்கள் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு, நண்பர்களோடு ஐக்கியமாகிச் சிரித்தாராம் முதல்வர்!''

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

''அப்படியா?''

''பழைய பாடல்கள் பற்றிப் பேசினார்களாம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களில் உள்ள பாடல்களில் சிறப்பானவற்றை ஜெயலலிதாவே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். அதைத்தான் அந்த விழாவில் பாடினார்கள். பொதுவாகவே, ஜெயா டி.வி-யில் வரும் பழைய பாடல்களில் சிலவற்றை அவ்வப்போது ஞாபகப்படுத்திச் சொல்வதும், அதை அவர்கள் ஒளிபரப்புவதும் உண்டு. எல்லோரும் ஒன்றாக மலரும் நினைவுகளுக்குப் போயிருக் கிறார்கள்'' என்ற கழுகார் சப்ஜெக்ட் மாறினார்.

''கிரானைட் கிடுக்கிப்பிடி இன்னமும் தொடர் கிறது. அதற்கு இணையாக அந்த குரூப் பரப்பும் வதந்திகளும் கூடிக்கொண்டே போகின்றன. 'காம்ப்ர மைஸ் பேசியாச்சு’ என்பதுதான் அவர்களது வதந்தியின் சாராம்சம்!''

''உண்மை என்ன?''

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

''முதல்வர் இந்த விஷயத்தில் கறாராகவே இருக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். அ.தி.மு.க. செயற்குழு கடந்த திங்கள் அன்று நடந்தது. அதில் கிரானைட் சம்பந்தமாக ஒரு தீர்மானம் போட வேண்டும் என்று முதல்வர்தான் குறித்துக் கொடுத்துள்ளார். 'மணல் மற்றும் கிரானைட் கற்களைச் சூறையாடி அதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்த மணல் மற்றும் கிரானைட் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, நாட்டின் கனிம வளத்தைக் காப்பாற்றிய புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்தச் செயற்குழு மனதாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது’ என்பது அந்த தீர்மானத்தின் வாசகம். இது, அன்று நிறைவேற்றப்பட்ட 11-வது தீர்மானம். அன்று மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எதை ஹைலைட் செய் யலாம் என்று 'நமது எம்.ஜி.ஆரில்’ இருந்து கேட்க... கிரானைட் தீர்மானத்தைத் தலைப்புச் செய்தியாக்கச் சொன்னாராம் முதல்வர். இதில் இருந்தே அவர் அந்த மேட்டரில் சீரியஸாகத்தான் இருக்கிறார் என்பது தெரிகிறது!''

''ம்!''

''ஜெயலலிதா அவரது சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு செப்டம்பர் 3-ம் தேதி வருவதாக இருந்தது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவது, ஸ்ரீரங்கம் கோயிலில் சீரமைக்கப்பட்ட நந்தவனத்தைத் திறந்து வைப் பது, திருப்பதியில் இருப்பதைப் போல, காலை முதல் இரவு வரை அன்னதானத் திட்டத்தை விரிவு​படுத்துதல் என்று ஏகப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஆனால், திடீரென அந்த விசிட் 7-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்​பட்டு இருக்கிறதாம். புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜி 7-ம் தேதி சென்னை வருகிறார்''

''ஜனாதிபதியை, முதல்வர் வரவேற்க வேண்டாமா?''

''அன்று ஸ்ரீரங்கத்தில் இருந்தால் எப்படி வரவேற்க முடியும்?''

''ஓஹோ... அப்படியா சங்கதி?''

''ம். ஒவ்வொரு வருடமும் மாமன்னன் பூலித் தேவன் நினைவு தினத்தை, நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் விமரிசையாகக் கொண்டாடுவார் எம்.நடராஜன். திரைப்படப் பிரபலங்கள், வரலாற்று ஆய்வாளர்கள், இலக்கிய வாதிகள் எனப் பலரையும் அழைத்து வந்து அந்தச் சிறிய கிராமத்தைத் திக்குமுக்காடச் செய்வார். இப்போது வழக்குகள், கைது போன்றவற்றைச் சந்தித்துக் களைத்துப் போயிருப்பதால், இந்த வருடமும் வழக்கம்போல விழா நடத்துவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்படியே விழா நடத்தினாலும் பிரபலங்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், 'எந்தச் சந்தேகமும் வேண்டாம். விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிங்க. ஆட்களைக் கூட்டிட்டு வர்றது என்னோட பொறுப்பு’ என்று ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம். அதனால், ஓரிரு நாட்களில் பூலித்தேவன் விழா வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக நடராஜன் அறிவிப்பாராம்.''

''அவரைப் பார்த்தாலே பலரும் பதுங்குவார் களே?''

''சும்மாவே பதுங்குவார்கள். வழக்கு, கைதுக்குப் பிறகு வருவதால் நிறையப் பேர் தலைமறைவு ஆகிவிடுவார்கள். இதனிடையே, இந்த வருடம் அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் கலந்துகொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் துவாராம். பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கொடுக்கும் மரியாதையைக்கூட மத்திய, மாநில அரசுகள் பூலித்தேவனுக்குத் தருவது இல்லை என்ற மக்களின் வருத்தம் போக்கும்வண்ணம் அரசு விழாவை சிறப்பாகக் கொண்டாட இருக் கிறார்களாம்!''

''தி.மு.க. பக்கம் வாரும்...''

''தி.மு.க. என்றாலே மதுரை மேட்டர்கள்தான். முன்பு மதுரைக்கு வந்த ஸ்டாலினை வரவேற்கப் போகவில்லை என்பதற்காக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மன்னன் உள்ளிட்ட 17 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தி.மு.க. தலைமை. அதற்கு 17 பேரும் பதில் கொடுத்தனர். அந்தப் பதிலை சற்றே காரமாகக் கொடுத்திருந்த மதுரை மாநகர் தி.மு.க. அவைத்தலைவர் இசக்கிமுத்துவை மட்டும் கட்சியில் இருந்து கட்டம் கட்டிய தலைமை, மற்றவர்கள் விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இசக்கிமுத்துவை மீண்டும் கட்சியில் சேர்க்கச் சொல்லி தலைமையிடம் கடிதம் கொடுத்திருக்கிறார் அழகிரி. இந்தநிலையில், 23-ம் தேதி மதுரையில் நடந்த குஷ்பு கலந்துகொண்ட, டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்ததற்கு விளக்கம் கேட்டு மன்னன் உள்ளிட்டவர்களுக்கு தலைமையில் இருந்து 30-ம் தேதி நோட்டீஸ் வந்திருக்கிறதாம். இதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளாத அழகிரியின் விசுவாசிகள், 'அப்படிப் பார்த்தா அண்ணனும் தானப்பா குஷ்பு கூட்டத்துக்கு வரல... மொதல்ல அவருக்கும் நோட்டீஸ் அனுப்பச் சொல்லு’ என்று கிண்டலடிக்கிறார்கள். அழகிரி என்ன ரியாக்ஷன் காட்டப்போகிறாரோ!''

''அவர்தான் கிரானைட் சிக்கலில் இருக் கிறாரே!''

''எப்படியாவது மகன் தயாநிதியைக் கைது செய்யவிடாமல் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார் அழகிரி. அதற்காக ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமான தனக்கும் அறிமுகமான பெங்களூரு பிரமுகரிடம் சோகத்தைச் சொல்லியதாகச் செய்தி!''

''தென் மாநிலங்களுக்கான மத்திய அரசு வழக்கறிஞர்களாக எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளார்களே?''

''அரசியல்தான் காரணம் என்று சொல்லப் படுகிறது. தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் வழக்கறிஞர் பொறுப்பை மூத்த வழக்கறிஞர் வில்சனுக்குப் பெற்றுத்தர டி.ஆர்.பாலு முயற்சித்தார். நிதிஅமைச்சர் சிதம்பரம் தனக்கு நெருக்கமான மாசிலாமணியை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவர முயற்சித்தார். மூன்று மாதங்களாக நடந்த இந்த பனிப்போரில் இப்போது இருவருமே வெற்றி அடைந்துள்ளனர். மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி கடந்த 48 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் உள்ளார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவராக நான்கு முறையும், சொலிசிட்டர் ஜெனரலாக இரண்டு முறையும் இருந்தவர். கடந்த 2007 முதல் 2009 வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தார். அதேபோல், வழக்கறிஞர் வில்சன் கடந்த 23 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பயிற்சி செய்கிறார். மாநில அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும், கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் போட்டி வந்தது. இரண்டு கட்சி களுமே ஜெயித்து விட்டன’ என்கிறார்கள் கோர்ட் வட்டாரத்தில்!'' என்று சொல்லி எழுந்த கழுகார்,

''கிரானைட் ஊழல் தொடர்பான அறிக்கையைக் கொடுத்து அதன்மூலம் நடவடிக்கை எடுக்கத் தூண்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு இப்போது கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்து விட்டனவாம். இதனால், போலீஸ் பாதுகாப்பு கோரும் முடிவில் இருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்!'' என்றபடி கிளம்பினார் கழுகார்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.நாகமணி

மாலை நேரத்தில் மட்டும் மதுக் கடையா?

டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில் மூடு விழா நடத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கடந்த 1.8.2012 ஜூ.வி. இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு, தமிழக அரசின் ஆலோசனையை வேறு திசைக்கு திருப்பி இருக்கிறதாம்.

கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கலான பொதுநல வழக்கு ஒன்று, 'மதுபானக் கடையை மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்’ என்று உத்தரவிடக் கேட்டது.  இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற டிவிசன் பென்ச், 'இந்த யோசனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பியதுடன்   செப்டம்பர் 10-ம் தேதிக்குள் கேரள அரசை பதில்  சமர்ப்பிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்து உள்ளது.  

இந்தக் கேள்வி தமிழக அரசையும் மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகளை ஒரேயடியாக மூடுவதற்குப் பதிலாக நேரத்தை குறைக்கலாமா என்று ஆலோசிக்கப்படுகிறதாம். 'இப்போது நேரத்தைக் குறைத்து விட்டு பிறகு, முழுமையாக மூடலாம்’ என்ற யோசனை துளிர்த்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

 'தமிழ்நாட்டுக்குத்தான்!’

மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. மத்திய அரசு, மனசு வைத்தால்தான் இதைத் தவிர்க்க முடியும் என்று நினைக்கிறாராம் முதல்வர். மேட்டூர் மின்நிலையம் தமிழ்நாட்டின் சொந்தத் திட்டம் என்பதால், அதில் கிடைக்கும் மின்சாரம் எல்லாமே தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். ஆனால், வல்லூர் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 500 மெகா வாட்டில் 250 மெகா வாட்தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்குமாம். இந்த 500 மெகா வாட்டையும் முழுமையாக ஒதுக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. கூடங்குளம் உற்பத்தியில் 1000 மெகா வாட் தமிழகத்திற்க்கு வழங்கவேண்டும் என்று ஜெயலலிதா கடந்த வாரம் எழுதிய கடிதத்திற்கு பதில் இல்லை. மின்சாரம் கிடைக்காவிட்டால், 'மத்திய அரசுதான் இந்த மின்வெட்டுக்கு காரணம்’ என்று அறிக்கை வரலாமாம்!

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

 ஐ.நா. செல்லும் ஸ்டாலின்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பிரதமரிடம் கொடுத்தது தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் குழு. அடுத்து, இந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் கருணாநிதி. மாநாட்டுத் தீர்மானங்களை மு.க.ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் விரைவில் எடுத்துச் செல்ல இருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

தோப்புக்கு வீடு இல்லை!

அமைச்சரவையில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் புதிதாக பதவியேற்று உள்ள வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு மந்திரிகள் பங்களாவில் இடம் இல்லையாம். 'பரவாயில்லை எம்.எல்.ஏ ஹாஸ்டலிலேயே இருக்கிறேன்’ என்றவரை,  'அம்மா எங்களைத்தான் திட்டுவாங்க’ என்று, வலுக்கட்டாயமாக விருந்தினர் மாளிகையில் தங்கவைத்து இருக்கிறார்களாம்!

 கார்டன் டு திருத்தணி!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர் குழுத் தலைவர்களை நியமிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. சில கோயில்களுக்கு, முதல்வரே நேரடியாக நியமனம் செய்கிறாராம். திருத்தணி கோயிலுக்கு நியமிக்கப்பட இருக்கும் ஜெய்சங்கர், போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களாக்களுக்குக் கட்டடப் பணி செய்தவர்.

 உயர் நீதிமன்ற விழாவுக்கு ஜெ-வை அழைப்பதா?

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, வரும் 8-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் என்ற முறையில் கலந்து கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் தலைமை நீதிபதி இக்பால். இதைக்கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தி.மு.க. வழக்கறிஞர்கள் திடீரெனப் போராட்டம் நடத்தினர். இதில், தி.மு.க. சாராத வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டதுதான் விசேஷம்.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கிய வழக்கறிஞர் உதயநிதி, 'இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல்வர் ஒருவரை, தலைமை நீதிபதி நேரில் போய் அழைத்த சம்பவம் எதுவும் நிகழ்ந்தது இல்லை. ஆனால், டான்சி வழக்கில் நீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்கு உள்ளானவரை, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகிக் கொண்டிருக்கிற ஒருவரை நீதித்துறை விழாவுக்கு அழைப்பது நல்ல முன்னுதாரணம் கிடையாது'' என்று சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக, உயர் நீதிமன்றப் பதிவாளருக்கும், தலைமை நீதிபதிக்கும் மதுரையில் இருந்து ஏராளமான தந்திகள் பறக்கிறதாம். கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் இதுபோன்ற சிக்கல் வந்தது. உயர் நீதிமன்ற விழாக்கள் என்றாலே தமிழக முதல்வர்களுக்குச் சிக்கல்தான்.

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு