ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!
##~##

ழுகார் உள்ளே நுழைந்ததும், ஒரு செய்தியை ஞாபகப்படுத்தினோம்! 

மதுரை மாவட்ட கனிமவளத் துறையின் உதவி இயக்குநராக இருந்த ராஜாராம் பற்றி கழுகார் சில வாரங்களுக்கு முன் சொல்லி இருந்தார். 'தொழில்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா ராமுக்கு, வேலுமணி பதவி விலகியதும் மீண்டும் பதவி கொடுத்து விட்டனர்’ என்று கழுகார் சொல்லி இருந்தார்.

''நீர் சொன்ன ராஜாராமுக்கு மறுபடியும் சிக்கல் வந்து விட்டதே!'' என்றோம். தலையை சிலுப்பியபடி ஆரம்பித்தார் கழுகார்.

''மதுரை மாவட்ட கனிமவளத் துறை அதிகாரியாக இருந்த ராஜாராம், அதிகப்படியாக பி.ஆர்.பி. மற்றும் அழகிரி வட்டாரத்துடன் நெருக் கம் காட்டியவர். அதைத் தெரிந்து கொண்டுதான் அவரை சஸ்பெண்ட் செய்தனர். ஆனால், கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து கன்னியாகுமரி மாவட்ட உதவி இயக்குநராக பணிஒதுக்கீடு பெற்று செட்டில் ஆகிவிட்டார். இப்போதைய விசாரணையில் அவரைப் பற்றித்தான் அதிகப் புகார்கள் கலெக்டர் கவனத்துக்கு வந்ததாம். மேலிடத்தில் அனுமதி வாங்கி உடனடியாக அவரைக் கைது செய்து விட்டனர். நாகர்கோவிலுக்குச் சென்று அவரைக் கைது செய்து, மதுரைக்கு அழைத்து வந்து விட்டனர். '2005 முதல் 2011 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இவர் மதுரையில் இருந்துள்ளார். உதவி இயக்குநராகவும் அதன்பிறகு, பதவிஉயர்வு பெற்று துணை இயக்குநராகவும் இங்கேயே தொடர்ந்துள்ளார். இவர் காலத்தில்தான் அதிகளவு முறைகேடு நடந்துள்ளது’ என்றும் சொல்கிறார்கள். அவரிடம் ஏ.டி.எஸ்.பி. மயில் வாகனன் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார். அநேகமாக, பலரையும் மாட்டிவிடும் அஸ்திரமாக ராஜாராம் இருப்பார் என்றே சொல்லப்படுகிறது!''

''காத்திருப்போம்!''

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!

''அதற்கு முன்னதாக நான் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தருகிறேன். கேளும்! வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் சந்தி சிரித்தது ஞாபகம் இருக்கும். நிலம் வாங்கிய ஒரு முக்கிய புள்ளிக்கு கிரானைட் நிறுவனம் ஒன்று பகிரங்கமாக பணம் செலுத்தி இருக்கிறது.  கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடைய செயலாளராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவராஜ். ராஜமாணிக்கம் மற்றும் ராஜரெத்தினம் ஆகிய இருவருக்கு அடுத்து பவர்ஃபுல்லாக இருந்தவர் இந்த தேவராஜ். இவரது மகள் தீபா பெயருக்கு ஒதுக்கப்பட்ட மனைக்கான பணத்தை யார் கொடுத்தது என்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.''

''இதுபற்றி,  'அரசை உலுக்கும் நிலநடுக்கம்’ என்ற தலைப்பில் எமது நிருபர்கள் தொடர்ந்து எழுதினார்களே!''

''இந்த விவகாரத்தை அப்போது கவனத்துக்குக் கொண்டு வந்தவர் தகவல் அறியும் உரிமைப் போராளியான கோபால கிருஷ்ணன். அதில் ஒரு மனை தேவராஜ் மகள் தீபாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆகும். வீட்டுவசதி வாரியத்தில் சென்னை திருவான்மியூர் புறநகர்த் திட்டத்தின் அடிப்படையில் தீபாவுக்கு காமராஜர் நகர் ஏரியாவில் 543 எண் கொண்ட மனை ஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணையை 23.4.2008 அன்று வீட்டுவசதித் துறை செயலாளராக இருந்த செல்லமுத்து பிறப்பித்தார். 'சமூக சேவகர்’ பிரிவில் ஒதுக்கப்பட்ட அந்த மனையின் அளவு 4,466 சதுர அடி. இதன் மதிப்பு ஒரு கோடியே 8 லட்சத்து 7 ஆயிரத்து 720 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தது வீட்டுவசதி வாரியம். வீட்டுமனை கேட்டு தீபா அளித்த விண்ணப்பத்தில் பிறப்புச் சான்றிதழ், தேவராஜின் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை இணைத்திருந்தார். அவருக்கு 'சமூக சேகவர்’ பிரிவில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கான விற்பனை ஒப்பந்தம் 11.2.09 அன்று போடப்பட்ட போது அதில் தீபா புகைப்படம் ஒட்டி கையெழுத்தும் போட்டிருந்தார்.''

''ஓகே... மெயின் மேட்டருக்கு வாரும்!''

''வீட்டு மனைக்கான தொகையை ஐந்து தவணைகளில் வீட்டுவசதி வாரியத்துக்குச் செலுத்தி இருந்தார் தீபா. வீட்டு மனையின் மதிப்பு 1.08 கோடி ரூபாய் என்றாலும் தவணை முறையில் செலுத்தியதால் வட்டியும் சேர்த்து தீபா செலுத்திய மொத்தத் தொகை 1.30 கோடி ரூபாய்க்கும் மேல். இந்தத் தொகையில் முதல்தவணையாக  43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தி உள்ளார். அந்தப் பணத்தை  'ஸ்ரீ முருகன் என்டர்பிரைசஸ்’ என்ற கிரானைட் ஏற்றுமதி நிறு வனம்தான் செலுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கப்பட்ட ஆவணத்தைப் புரட்டிய போது வீட்டுவசதி வாரிய பெசன்ட் நகர் கோட்டத்தின் நிர்வாக அதிகாரி முருகையனுக்கு 'ஸ்ரீ முருகன் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் தனது லெட்டர் பேடிலேயே கடிதம் எழுதி இருக்கிறது.

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!

'முதல்தவணைத் தொகையைத் தீபாவுக்காகச் செலுத்திய ஸ்ரீ முருகன் என்டர்பிரைசஸ் கொடுத்த கடிதம் 12.7.08 அன்று எழுதப்பட்டிருக்கிறது. அதில் '43 லட்சத்து 50 ஆயிரத்துக்கான செக் இணைக்கப்​பட்டிருக்கிறது’ எனச்சொல்லி செக் நம்பரையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட வீட்டுவசதி வாரியம் 15.7.08 அன்று ரசீதும் கொடுத்திருக்கிறது. முதல்வரிடம் செயலாளராக இருந்த தேவராஜ் மகளுக்கு 'சமூகசேவகர்’ பிரிவில் வீட்டு மனை ஒதுக்கியதே தவறு. அதோடு அந்த மனைக்கான ஒரு குறிப்பிட்ட தொகையை 'ஸ்ரீ முருகன் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் செலுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கும் தீபாவுக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் செயலாளராக இருந்த தேவராஜுக்கும் இந்த நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டா? எதற்காக தீபாவுக்கு இந்தத் தொகையை ஸ்ரீமுருகன் நிறுவனம் செலுத்த வேண்டும்? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன’ என்று, தகவல் உரிமைப் போராளியான கோபால கிருஷ்ணன் சொல்கிறார்!''

''அப்படியா?''

''வீட்டுவசதி வாரியத்தில் தீபாவுக்கு மனை ஒதுக்கிய அரசாணை வெளியிட்ட போதுஅதை உடனடியாக 25670611 என்ற எண்ணுக்குப் ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார்கள். இது, வீட்டு வசதி வாரிய செயலாளர் அலுவலக ஃபேக்ஸ் எண். அதாவது, தீபாவுக்கு மனை ஒதுக்கியதுமே அதை தேவராஜிடம் தெரிவிப்பதற்காக இந்த ஃபேக்ஸ் அங்கே அனுப்பி இருக்கிறார்கள். ஸ்ரீ முருகன் என்டர்பிரைசஸ் லெட்டர்பேடை ஆராய்ந்த போது, 'எண் 1015. திருச்சி மெயின் ரோடு, பி.ஆர்.சி. பஸ் ஸ்டாப் அருகில் மேலூர், மதுரை’ என முகவரி கொடுக்கப்பட்டு இருந்தது. இரண்டு தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த எண்கள் எதுவும் உபயோகத்தில் இல்லை.  முகவரியைத் தேடிய போதும் அப்படியரு அட்ரஸ் இல்லை. சிந்து கிரானைட் அலுவலகம் இப்போது மதுரை கே.கே.நகரில் இருக்கிறது. 2003-ல், மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு எதிரே உள்ள சந்தில் 'ஸ்ரீ முருகன் என்டர்பிரைசஸ் - குவாலிட்டி கிரானைட் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்ட இந்த அலுவலகம் 2006-க்குப் பிறகு திருச்சி ரோட்டில் பி.ஆர்.பி. பஸ் டெப்போவுக்கு அருகில் மாறியதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்கான தடயம் எதுவுமே இப்போது அங்கு இல்லை. அந்த லெட்டர் பேடில் sindugraanite@rediffmail.com என்ற இமெயில் முகவரியும் தரப்பட்டிருக்கிறது.  இந்த நிறுவனத்தின் பதிவு அலுவலகம் எனச் சொல்லி தர்மபுரி முகவரி ஒன்றும் தரப்பட்டிருந்தது. 39-சி நெடுமாறன் நகர் என்ற முகவரியில் விசாரித்தால்... சிந்து நிலையம் என்ற பெயரில் வீடு இருந்தது. சிந்து கிரானைட்ஸ் உரிமையாளரின் உறவினர்கள்தான் இங்கு வசிக்கிறார்கள்''

''விசாரணை சூடுபிடிக்கப் போகிறது என்று சொல்லும்!''

''கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரின் செயலாளராக இருந்த ராஜரெத்தினத்தின் சம்பந்திதான் சிந்து கிரானைட் செல்வராஜ். இன்னொரு செய லாளரான தேவராஜுக்கு கிரானைட் நிறுவனம் ஒன்று பணம் செலுத்தி உள்ளது என்றால் இந்த வழக்கின் மைய மர்மம் வெகுவிரைவில் அவிழும்!'' என்ற கழுகார், அடுத்த மேட்டரை அவிழ்த்தார்!

''ஆறே கால் லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே பாஸ். இது தொடர்பாக 'கல்வித்தரம் சூப்பரப்பு’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார். பெரும்பாலான ஆசிரியர்கள் ஃபெயிலானது பற்றிய விஷயம் ரிசல்ட் வெளியாவதற்கு முன் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டதாம். உடனே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதி, செயலாளர் சபீதா, ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்திரி ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி னாராம். அதிகாரிகள் தரப்பில், 10 மார்க் போனஸாக வழங்கினால் இத்தனை ஆயிரம் பேர் பாஸ் ஆவார் கள். 20 மார்க் வழங்கினால் இவ்வளவு பேர் பாஸ் ஆவார்கள் என்று ஐடியா கொடுத்தார்களாம். இதைக் கேட்டு, ஜெயலலிதா கடுப்பாகி விட்டாராம். 'இதுக்குத்தான் வரச்சொன்னேனா? தகுதியான ஆசிரியர்கள் இருந்தால்தான் கல்வித்தரம் நன்றாக இருக்கும்.  போனஸ் மார்க் எல்லாம் வேண்டாம். உள்ளபடி ரிசல்ட் வெளியிடுங்கள். வேண்டும் என்றால் மீண்டும் தேர்வு அவர்களுக்கு எழுத வாய்ப்பு கொடுங் கள். தேர்வு நேரத்தை அதிகப்படுத்துங்கள்’ என்றாராம். இதையடுத்துதான் முடிவுகள் வெளியானதாம்.''

''ம்... நம்ம ஆட்கள் எப்படிப்பட்ட உன்னதமான ஆலோசனை சொல்கிறார்கள் பாருங்கள்!'' என்றோம்.

சிரித்தபடி பறந்தார் கழுகார்!

கருணாநிதியைப் போலவே ஜெயலலிதா!

 தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலிப் பணியிடங்கள் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக சி.ஆர்.பாஸ்கரன் என்பவர் போட்ட வழக்குத் தொடர்பாக, தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதையும் தகவல் ஆணையத்தில் நடக்கும் அரசியலையும் உள்ளடக்கி 'ஆணையர்களை நியமிக்க விஜயகாந்த் தடை. பரிதாபத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையம்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இந்தநிலையில், ஆணையர்கள் நியமனம் தொடர்பாக ஆகஸ்ட் 31-ம் தேதி கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டினார் ஜெயலலிதா. அதில், அமைச்சர் பன்னீர்செல்வம் மட்டும் கலந்து கொண்டார். 'விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. ஐந்து ஆணையர்களைத் தேர்வு செய்து ஆளுனருக்கு அனுப்பி விட்டோம்’ என்று கூட்டத்துக்குப் பிறகு அறிவித்தார்கள். டாக்டர் சரோஜா, கிறிஸ்டோபர் நெல்சன், பி.தமிழ்ச்செல்வன், பி.நீலாம்பிகை, எஸ்.எப். அக்பர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டது.

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!

'நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்’ என்பதற்காக அவசரம் அவசரமாக இவர்களை நியமித்து இருக்கிறார்கள். புதிய ஆணையர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சரோஜா, எம்.எல்.ஏ-வாகவும் எம்.பி-யாகவும் இருந்தவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ-வாக ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுத்து வந்தார். சட்டசபை நடக்கும் போதெல்லாம் அம்மாவின் பார்வையில் படும்படி சட்டசபை மாடத்திலேயே உட்கார்ந்து இருப்பார்.

அதேபோல, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்த அன்றைய திருவல்லிக்கேணி துணைக் கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சனை ஆணையர் ஆக்கியிருக்கிறார்கள். இந்த நியமனத்தில் சசிகலாவின் கையும் ஓங்கியிருக்கிறது. சசிகலாவுக்கு நெருக்கமான நீலாம்பிகை என்ற வழக்கறிஞரும்ஆணையர் ஆகியிருக்​கிறார். இந்த நியமனத்திலேயே இவருக்குக்குத்தான் பெரிய அதிர்ஷ்டம். இவருடைய கணவர் பாலசுப்ரமணியம் டி.என்.பி.எஸ்.சி-யில் உறுப்பினராக இருக்கிறார். நீலாம்பிகையும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பி​னராகப் பதவி வகித்தவர். இப்படித் தொடர்ந்து நீலாம்பி​கைக்கு சான்ஸ் அடிப்பதற்கு காரணமே சசிகலாவின் செல்வாக்கு​தானாம்.

'அரசியல் தலையீடு இருக்கிறது. தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என்று தி.மு.க. ஆட்சியில் அறிக்கை விட்ட எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா, ஆளும் கட்சியான பிறகு கருணாநிதியை போலவே செயல்பட்டு இருக்கிறார் என்கிறார்கள், தகவல் அறியும் உரிமைப் போராளிகள்.

மிஸ்டர் கழுகு: கிரானைட் பணம்!