ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு; எல்லாமே 7

மிஸ்டர் கழுகு; எல்லாமே 7

##~##

''சாப்பாடு போட்டு விட்டாரா?'' என்று கேட்டபடி அலுவலகத்துக்குள் வந்தார் கழுகார்! 

''ஸ்ரீரங்கம் கோயிலில் முழுநேர அன்ன தானத்தை ஜெயலலிதா ஆரம்பித்து வைத்திருக்கிறார். சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு மூன்றாவது முறையாக வந்த முதல்வருக்கு வரவேற்பு தடபுடலாக இருந்தது. விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மேடைக்கு அவர் வரும் முன், மக்கள் கலை இலக்கியக் கழகத்துக்காரர்கள் கறுப்புக்கொடி பிடித்துத் திடீரெனக் கோஷம் போடவே, விழிபிதுங்கி நின்றது போலீஸ். கறுப்புக்கொடி காட்டியவர்களை நோக்கி அ.தி.மு.க-வினர் கல் வீச... இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. கூடங்குளத்தில் போலீஸ் நடத்திய விபரீதங்களைக் கண்டித்தே இந்தக் கறுப்புக் கொடியாம்!''

''முதல்வர் கோபம் அடைந்திருப்பாரே?''

''கோபத்தின் விளைவு அப்புறம்தான் தெரியும். ரங்கநாதர் கோயிலில் நாள்முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், ஏழு பேருக்கு 16 வகையான பதார்த்தங்களுடன் உணவு பரிமாறித் துவக்கி வைத்தார். கூட்டுத் தொகையைக் கவனியும். எல்லாம் ஏழு. கோயில் வாசல் வரை சென்ற ஜெயலலிதா, ரெங்கநாதரைத் தரிசிக்காமல் சென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ரெங்கநாதருக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த அலங்காரத்தில் மூலவர் இருக்கும்போது முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ரெங்கநாதரைப் பொறுத்தவரை, பாதத்தை தரிசித்து விட்டுத்தான் முகதரிசனம் செய்ய வேண்டும் என்பது நடைமுறை. அதனாலேயே பாத தரிசனம் கிடைக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தில் தரிசனம் செய்துகொள்ளலாம் என்று திரும்பியதாகச் சொல்கிறார்கள் கோயில் பட்டர்கள். இந்த நிகழ்ச்சியின் போது, ஜெயலலிதாவுக்குப் பரிச்சயமான சுந்தர பட்டர் ஏனோ தென்படவில்லை!''

மிஸ்டர் கழுகு; எல்லாமே 7

''ஓஹோ!''

''திட்டமிட்டதை விட ஒரு மணி நேரம் தாமத மாகத்தான் முதல்வர் வந்தார். எனவே இலையைப் பரிதாபமாகப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தார்கள் பக்தர்கள். முதல்வரே எவர்சில்வர் பாத்திரத்தை கையில் பிடித்து... அதில் இருந்து சோற்றை பரிமாறியது மக்களை மனம் மகிழவைத்தது. அந்த மண்டபத்தில் 304 பேர் உட்கார்ந்து சாப்பிடும் விதமாக இருக்கைகள் இருந்தன. அதன் கூட்டுத் தொகையும் ஏழு!'' என்ற கழுகார், திருச்சியில் இருந்து மதுரைப் பக்கம் தாவினார்...

''மதுரையில் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்த ஆர்ப்பாட்டத்தில், அழகிரி- ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே மோதல் நடந்தே விட்டது. முதலில் ஸ்டாலின் ஆட்கள் கை வைத்ததால், அதிர்ந்து போய் இருக்கிறது அழகிரி வட்டாரம். அழகிரி அனுமதி இல்லாமல் ஸ்டாலின், மதுரையில் பொதுக் கூட்டம் நடத்திவிட்டுப் போன ஏப்ரல் 15-ம் தேதி முதல் மதுரையில் இடைவிடாத கோஷ்டி மோதல் நடக்கிறது. ஏற்கெனவே 17 பேர் தலைமைக் கழக நடவடிக்கைக்கு ஆளான பிறகும், குஷ்பு கூட்டத் தைப் புறக்கணித்தார்கள். இதுதொடர்பாக 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய தலைமை, 'இனிமேல் தலைமைக் கழகம் சார்பில் நடக்கிற எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிக்கக் கூடாது’ என்று எச்சரித்து அனுப்பியது.

மிஸ்டர் கழுகு; எல்லாமே 7

இந்த நிலையில்தான் மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்தும், பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்தும் மதுரையில் 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் என்றால் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்ற முறை யில் மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, இளை ஞர் அணி அமைப்பாளர் ஜெயராம், பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி போன்றவர்கள் ஆரம்பத்திலேயே மேடை ஏறிவிட்டார்கள். 9.45 மணி அளவில் வந்த அழகிரி ஆதரவாளர்கள், மேடையில் ஏறாவிட்டால் வராதவர் கணக்கில் சேர்த்து மறுபடியும் நோட்டீஸ் அனுப்பி விடுவார்கள் என்று பயந்து மேடை ஏற முயன்றார்கள். அப்போது, வி.கே.குருசாமியும், ஜெயராமனும் அவர்களைத் தடுக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. அழகிரி ஆதரவாளரான இசக்கிமுத்து, ஸ்டாலின் ஆதரவாளரான வி.கே.குருசாமி ஆகியோரின் சட்டைகள் கிழிந்தன. பலர் செருப்புகளைத் தவறவிட்டனர். லத்தியோடு புகுந்த போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். இதனால், அவசர அவசரமாகக் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தை முடித்த அழகிரி ஆதர வாளர்கள், கோபத்தோடு எதிர்திசையில் நடந்து கும்பலாக நின்றுகொண்டார்கள். போலீஸார் பதட்டத்தோடு காத்திருக்க,  நடந்த சம்பவம் பற்றி அழகிரி, ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் செல் போனில் தெரிவித்து விட்டு இடத்தைக் காலி செய்தனர்''

''மதுரையில் சண்டை நடக்காமல் இருந்தால்தான் நியூஸ்! கிரானைட் மேட்டரில் அடுத்து என்ன நடக் கிறது?''

''கிரானைட் விசாரணை 'சீஸன் டூ’-வில், அத்து மீறல்களுக்கு ஆதரவு வழங்கிய அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. கிரானைட் குவாரிகளில் புதிய இயந்திரங்களை இயக்கத் தொடங்கும் போதும் புதிதாகக் குவாரிகளுக்குப் பூமி பூஜை போடும் நேரங்களிலும் நரபலி கொடுக்கப்படுவதாக முன்பே ஒரு புகார் படபடத்தது. இது தொடர்பாக 'ராடு’ குமார் என்ற மந்திரவாதியை இப்போது தேடுகிறது போலீஸ். தேனி மாவட்டத்துக்காரரான இந்த 'ராடு’ குமார்,

மிஸ்டர் கழுகு; எல்லாமே 7

கேரளாவில் ஒரு வருடம் தங்கி இருந்து மலையாள மாந்திரீகம் படித்தவராம். இவரைவைத்தே குவாரிகளுக்குள் நரபலி பூஜைகள் நடத்தப்பட்டதாகத் துப்புக் கொடுத்தவர்கள், 'கீழவளவு குவாரியில் சில மாதங்களுக்கு முன், வடநாட்டுப் பையன் ஒருவனை, உயிரோடு நிற்கவைத்து அவனது வலது காலைத் துண்டாக நறுக்கித் துடிக்கக் துடிக்க நரபலி கொடுத்தார்கள். இன்னொரு குவாரியில் புதிதாக வந்திருந்த கிரேனை இயக்குவதற்கு முன், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பையனை கீழே குனிந்து பார்க்கச் சொல்லிவிட்டு, எலுமிச்சம் பழத்தில் ஏற்றுவதுபோல் அவன் மீது கிரேனை ஏற்றிப் பலி கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லும் தகவல்களை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை!''

''ஐயையோ!''

''கிரானைட் கற்களை வெட்டுவதற்கு மண்ணெண்ணெய் மூலம் எரியும் பவர்ஃபுல் பர்னர்களைப் பயன்படுத்துவார்கள். இந்த பர்னர்களில் இருந்து வரும் தீப்பிழம்புகள் மிகக் கடுமையான வெப்பத்துடன் இருக்கும். கீழவளவு குவாரியில் மண்ணெண்ணெயைத் திருடி விற்றான் என்ற குற்றத்துக்காக ஒரு பையனை அந்த பர்னரை வைத்தே பொசுக்கிக் கொன் றதாகச் சொல்கிறார்கள். 'வடமாநிலங்களில் இருந்து கூலிஆட்களை மாதேஷ் என்ற நபர்தான் அழைத்து வருவார். பெரும்பாலும் இங்கே நரபலி கொடுக்கப்படுவது அவர் அழைத்து வரும் நபர்களைத்தான். 'காரியம் முடிஞ்சதும் ஏதாவது காரணத்தைச் சொல்லி மாதேஷ் மூலமா எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுவாங்க. சில நேரங்களில், ரோட்டில் மனநிலை சரியில்லாமல் திரியும் அப்பாவிகளையும் குவாரிக்குள் கொண்டுபோய் நரபலி கொடுத்திருக்காங்க’ என்று சொல்லி போலீஸையே பதற வைத்தார்களாம்!''

''ம்!''

''பி.ஆர்.பி. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவிலும், துரைதயாநிதி டெல்லியிலும் பதுங்கி இருக்கலாம் என்று உமது நிருபர் எழுதி இருந்தார். போலீஸ் தேடும் பி.ஆர்.பி. உறவுகளில் சிலர் சர்வசுதந்திரமாக பாளையங்கோட்டைக்கு வந்து போகிறார்களாம். மானாமதுரை அருகில் உள்ள இடைக்காட்டூர் சிறுகுடியில் கிரானைட் அதிபர் ஒருவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு இருக்கிறது. கடந்த வாரம் துரைதயாநிதி இங்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்ததாக ஒரு தகவல் மதுரை போலீஸுக்குக் கிடைத்திருக்கிறது. தகவல் கிடைத்து, போலீஸ் அங்கே விரைவதற்குள் ஆள் பறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான ஆவணங்கள் 'ஸ்டாக் யார்டு’களில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததால் உதவி கலெக்டர் ஜெய்சிங் ஞானதுரை, கலால் துறை உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர், கடந்த நான்கு நாட்களாக கீழவளவு மற்றும் இ.மலம்பட்டி ஏரியா 'ஸ்டாக் யார்டு’களை சலித்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு குழு, குவாரிகளுக்குள் பதுக்கிவைத்திருப்பதாகச் சொல்லப்படும் கன்டெய்னர்களைத் தேடுவதில் தீவிரமாய் இருக்கிறது!''

''எப்போது தேடி முடிப்பார்கள்?''

''முதல்வர் நிறையவே அவகாசம் கொடுத்துள் ளாராம்!'' என்ற கழுகார், ''நெல்லையில் இருக்கும் அதிரடிப் பிரமுகரின் வீட்டு விழாவுக்கு கனிமொழியை அழைத்திருக்கிறார்கள். இது, மாவட்டச் செயலாளர் கருப்பசாமிப் பாண்டியனுக்கு தெரியவந்தது. 'எனக்குத் தெரியாமல் அவர் எப்படி வரலாம்?’ என்று ஸ்டாலினிடம் சீறினாராம். இந்தத் தகவலை அப்பாவிடம் எடுத்துச் சென்றாராம் ஸ்டாலின். விஷயம் கருணாநிதி மூலமாக, கனிமொழிக்குப் போய்ச் சேர்ந்தது. கருப்பசாமிப் பாண்டியனை போனில் அழைத்த கனிமொழி, 'இதை என்னிடமே நீங்கள் நேரில் சொல்லி இருக்கலாமே? இவ்வளவு சுத்தி வளைச்சு சொல்லணுமா?’ என்று கேட்டாராம் கனிமொழி. அதன்பிறகு இருவரும் எப்படியோ சமாதானம் ஆனார்களாம்!'' என்று சொல்லிக் கிளம்பினார் கழுகார்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, 'ப்ரீத்தி’ கார்த்திக்

மிஸ்டர் கழுகு; எல்லாமே 7