ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு!

மிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு!

##~##

ழுகார் வந்ததும் அட்டைப் படக் கட்டுரையைப் படித்தபடி பேச்சைத் தொடங்கினார்.

 ''கிரானைட் கொள்ளை குறித்த விசாரணை ரெய்டில் சிக்கி இருக்கிறார் மதுரையின் முன்னாள் கலெக்டர் காமராஜ். இவர் தி.மு.க. ஆட்சியின் செல்லப் பிள்ளை ஐ.ஏ.எஸ்-களில் ஒருவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்துக்கு மிக மிக நெருங்கிய நண்பர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது செய்தித் துறை இயக்குநராக இருந்த இவரை மதுரை மாவட்டத்துக்கு கலெக்டராக அனுப்பிவைத்ததே கருணாநிதியிடம் உதவியாளராக இருக்கும் ஓர் இளைஞர்தானாம். சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க-வுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகப் புகார் கிளம்பவே, மதுரையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு காமராஜை மாற்றியது தேர்தல் கமிஷன். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, காமராஜ் தி.மு.க. அனுதாபி என்பதால் அவரை ஈரோட்டில் இருந்து மாற்றினார். ஆனால், 30 நாட்களுக்குள் மீண்டும் ஈரோடு கலெக்டராக வந்து உட்கார்ந்துவிட்டார். அப்போது முதல்வரின் செயலாளர் ஒருவரை காமராஜ் போய்ப் பார்த்துள்ளார். அதன் பிறகுதான் இவர் மீது கருணை பிறந்து உள்ளது. அ.தி.மு.க-வுடன் நெருக்கமாக இருந்த காமராஜ் மீது இப்போது அதிரடி பாய்ந்திருக்கிறது. இவ்வளவு காலம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டதும் முதல்வரின் அருகில் இருக்கும் அந்தச் செயலாளர்தானாம்.''  

''சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பினர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?''

மிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு!

''ஆமாம்! பெங்களூரு நீதிமன்றத்தில் இதுவரை சுமார் 500 கேள்விகளுக்கு சசிகலா பதில் சொல்லிவிட்டார். மேற்கொண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமானால், கூடுதலாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு வசதியாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் கைப்பற்றி பெங்களூரு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களில் 'அன்-மார்க்டு டாக்மென்ட்கள்' வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சசிகலா. என்னவெல்லாம் வேண்டும் என்ற தலைப்பில் பெரிய லிஸ்ட்டே போட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நடந்தது. சசிகலாவின் வக்கீல் ஷேகர் நப்ஹாடு மற்றும் வி.கிரி ஆகியோர் ஆவணங்கள் வேண்டும் என்று வாதாடினார்கள்.''

''இதே வழக்கில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், தன்னையும் இணைக்கச் சொல்லி மனுப் போட்டிருக்கிறார் போலிருக்கிறதே?''

''ம்! 'வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். வேண்டுமென்றே வழக்கைக் காலம் கடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இதுமாதிரி கோரிக்கைகளை சசிகலா எழுப்பி வருகிறார். இந்த வழக்கு விசாரணையில்  ஆச்சார்யாவின் கருத்தையும் கேட்க வேண்டும். ஏனென்றால், தமிழக அரசு இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வாய்ப்புகள் உண்டு’ என்பதை வலியுறுத்தவே அன்பழகனும் களம் இறங்கினார். அவர் சார்பாக, அந்த்யார்ஜினா வக்கீல் வாதாடினார்.''

''அப்புறம்..?''

''தமிழக அரசு சார்பில் ராகேஷ் திவேதி வாதாடியபோது ஒரு அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போட்டார். அதுதான் முக்கியமானது. இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில், 'எங்களுக்கு ஒன்றுமில்லை. கோர்ட் பார்த்து என்ன முடிவு செய்தாலும் சரி' என்று சொல்லி நழுவுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், 'சசிகலாவுக்கு ஆவணங்கள் தருவதை எதிர்க்கிறோம்' என்று கூற, ஏக அதிர்ச்சி. சசிகலாவுக்கு எதிராக இப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை எடுத்தது பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.''

''என்னதான் ஆகும்?''

''ஆவணங்களைக் கேட்பது சசிகலாவின் அடிப்படை உரிமை. இனி இந்த விஷயத்தில் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்பதுதான் சஸ்பென்ஸ்.''

''அது சரி... ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கோர்ட்டில் பதிவு செய்திருப்பார்கள்?''

''அதெல்லாம் எனக்குத் தெரியாது. அன்பழகனை உள்ளே வரவிடக் கூடாது என்கிற ஒரு விஷயத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெளிவாக இருந்திருக்கிறது. இவரைவிட்டால், வேறு ஏதாவது குட்டிக் கலாட்டா செய்துகொண்டே இருப்பார். லஞ்ச ஒழிப்புத் துறையே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு இந்த வழக்கில் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை. நடுநிலையாகத்தான் செயல்படுகிறது என்கிற இமேஜ் ஏற்பட்டுவிடும் அல்லவா? இதைத்தான் கணக்குப்போட்டு நாசூக்காக அப்படிப் பேசியிருக்கிறார்கள்.''

''நல்ல பாலிடிக்ஸ்'' என்று சொல்லிச் சிரித்த கழுகார்...

''தி.மு.க. முப்பெரும் விழா வெகுவிமரிசையாக விழுப்புரத்தில் நடந்தது. அதில் இரண்டு வருத்தங்களாம்'' என்றார்.

''அதையும் சொல்லும்!''

''கருணாநிதி முக்கிய விழாக்களுக்குச் செல் லும் போது நிழலாய் இருக்கக் கூடியவர் ராஜாத்தி அம்மாள். இம்முறை விழுப்புரம் மாநாட்டுக்கு அவரை யாரும் அழைக்கவில்லையாம். பொன்முடி வந்து தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தமாம் அவருக்கு. 'அமைச்சராக இருக்கும் போதெல்லாம் காக்கா பிடிக்க வர்றவங்க.. பதவி போனபிறகு அம்மாவை உதாசீனப்படுத்துறாங்க’ என்று ராஜாத்தி ஆட்கள் புலம்ப ஆரம்பித்து உள்ளார்கள்!''

''அடுத்த வருத்தம் சொல்லும்!''

''விழுப்புரம் மாநாட்டு மேடையில் கருணாநிதி பேசும் போது கவனித்தீரா? பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, அவரது மனைவி, பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளைக் கவனிக்கும் ஒரு பெண், பொன்முடியின் பழைய ஓ.ஏ. சங்கரநாராயணன், டிரைவர் சங்கர், இன்னொரு டிரைவர் ரமேஷ், பி.ஏ-க்களாக இருக்கும் ரவிகார்த்திக், ரவி சங்கர்... என்று மொத்தமும் பொன்முடியின் வீட்டு போர்ட்டிகோ மாதிரி இருந்ததாம் மேடை. 'மாவட்டக் கழகத்தை வளர்த்த பெரிய மனிதர்கள் பலரும் மேடையில் இடம் கிடைக்காமல் கீழே உட்கார்ந்து இருக்க... இவர்களுக்கு மட்டும் முக்கிய மரியாதையா?’ என்ற வருத்தக் குரல்கள் கேட்டதாம்!''

''எல்லா இடத்திலும் குடும்ப ஆதிக்கம் தானா?'' என்ற நம் குரலுக்கு பதில் சொல்லாமல் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், 'ப்ரீத்தி’ கார்த்திக்

 புதிய அலுவலகம்... புயலாகக் கிளம்புகிறார் நேரு..!

மிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு!

அண்ணா பிறந்தநாளும் அமாவாசையும் நிறைந்த நன்நாளில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தில்லைநகரில் 5-வது குறுக்குச் சாலையில் செயல்பட்டு வந்த திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. மறைந்த தனது சகோதரர் ராமஜெயம் அலுவலகமாகவும் ஷெட்டில்காக் விளையாடப் பயன்படுத்தி வந்த மைதானமும் இணைந்த இடத்துக்கு அது மாற்றப்பட்டு உள்ளது. ராமஜெயம் புழங்கிவந்த அந்த இடத்தில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்துக்கு வந்த உடன்பிறப்புக்கள் பழைய நினைவு களால் கண்ணீர்விட்டனர். குத்துவிளக்கு ஏற்றி நேரு சிம்பிளாக தொடங்கிவைத்த இந்த விழாவில் அனைவருக்கும் டிபன், காபி வழங்கப்பட்டது. பின்னர் திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த நேரு கலங்கிய கண்களுடன் விழுப்புரம் மாநாட்டுக்குப் புறப்பட்டுச்சென்றார்!

 'பொட்டுன்னு சுட்டுப்புடுவேன்!’

மிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு!

'பவர் ஸ்டார்’ சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். குரோம்பேட்டையைச் சேர்ந்த தோல் கம்பெனித் தொழில் அதிபர் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில்தான் இவர் கைதாகி இருக்கிறார். தோல் தொழிற்சாலையை விரிவுபடுத்த பாலசுப்ர மணியனுக்கு 10 கோடி ரூபாய் தேவைப்பட்டதாம். அதற்கு நண்பர் ஒருவர் மூலமாக சீனிவாசனை அணுகி இருக்கிறார் பாலசுப்ரமணியன். 'எனக்குத் தெரிந்த இடத்தில் 10 கோடி வாங்கித் தருகிறேன். அதற்கு சர்வீஸ் சார்ஜ் 65 லட்சம் தரணும்’ என்று டீல் பேசி, 65 லட்சத்தை வாங்கி இருக்கிறார் சீனிவாசன். ஆனால் கடன் தொகையான 10 கோடி பாலசுப்ரமணியனுக்கு வரவே இல்லையாம். பல முறை சீனிவாசனிடம் கேட்டும், அவர் இழுத்தடித்து வந்திருக்கிறார். '10 கோடி தர வேண்டாம். நான் கொடுத்த 65 லட்சத்தையாவது திருப்பிக் கொடு’ என்று கேட்டிருக்கிறார். 'பணத்தைக் கேட்டா பொட்டுன்னு சுட்டுப்புடுவேன்’ என்று துப்பாக்கியைக் காட்டி பாலசுப்ரமணியனை மிரட்டி இருக்கிறார். அதனால் பாலசுப்ரமணியன், போலீஸுக்குப் போக பட்டென்று கைது செய்துவிட்டது போலீஸ்.

'ஏதோ பழிவாங்கும் நோக்கத்தில் அவர் புகார் கொடுத்திருக்கிறார். சீனிவாசன்கிட்ட துப்பாக்கியே கிடையாது’ என்று சொல்கிறார்கள் பவரின் ஆட்கள்!

மிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு!