Published:Updated:

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''நீர் சொன்ன மாதிரியே பொன்முடியை வளைக்கப் போலீஸ் புறப்பட்டு விட்டதே!'' என்று, கழுகார் வந்ததும் புன்னகையுடன் ஒரு பூங்கொத்து நீட்டினோம்! 

''கிரானைட் மேகங்கள் எங்கே மையம்கொள்ளும் என்பதை யூகித்து, உமக்குச் சொன்னேன். இப்படி ஒரு கைது நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப் போகிறது என்பதை பொன்முடியும் யூகித்து விட்டார். போலீஸில் இருக்கும் சில கறுப்பு ஆடுகள், நியூஸை பாஸ் செய்து விட்டனர். தனக்கு நெருக்கமான ஜெயச்சந்திரனை அழைத்துப் போய் விழுப்புரத்தில் உட்கார வைத்துள்ளனர் என்றதுமே, பொன்முடியும் அவரது மகனும் சிட்டாகப் பறந்து விட்டனர்.''

''எங்கேயாம்?''

''ஸ்டாலினுக்கு நெருக்கமான திருவள்ளூர் கல்விப் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான காரில் அப்பாவும் மகனும் தனித்தனியாக வலம் வருவதாக போலீஸுக்குத் தகவல் போனது. அதைவைத்து எல்லை மாவட்டங்களில் போலீஸாரின் கவனம் திரும்பி உள்ளது.''

''மதுரை கிரானைட் வழக்குதானே வரும் என்று பலரும் நினைத்தார்கள்?''

''அதை வைத்துப் பிடித்தால், இப்போதே பி.ஆர்.பி. வழக்கை அரசியல் ரீதியாக சிலர் திசை திருப்பி லாபம் அடைந்து விடக்கூடும் என்று ஆட்சி மேலிடம் நினைக்கிறதாம். எனவே, செம்மண் மேட்டரில் கைது செய்து அப்புறமாக கிரானைட் வழக்கிலும் சேர்ப்பார்களாம்!''

''மதுரை விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது?''

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!

''கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாகக் கிண்டிக் கிழங்கெடுத்த கிரானைட் கணக்கெடுப்புப் பணியில் முதல் கட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. லைசென்ஸ் பெற்ற 175 குவாரிகளில் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை மட்டுமே ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிரானைட் கற்களாம். இதன் மொத்தஅளவு சுமார் 17 லட்சம் கன மீட்டர்கள் என்கிறார்கள். இவற்றைத் தரம் பிரித்து விலை மதிப்பீடு செய்யும் பணிகள் நடக்கின்றன. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களைத் தோண்டிப் பார்க்க வேண்டியது நெக்ஸ்ட் ஆபரேஷன்!''

''இன்னும் பலர் வெளியில் இருக்கிறார்களே?''

''துரை தயாநிதி, சிந்து கிரானைட்ஸ் உரிமையாளர் பி.கே.செல்வராஜ் உள்ளிட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் கடந்த 21-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை அரசுத் தரப்பு வாதத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர் ரஞ்சித் குமாரைக் அழைத்து வந்திருந்தனர். வழக்கு விவரங்களை இவருக்கு மொழிபெயர்த்துப் புரிய வைப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று டெல்லிக்கே போய் வந்தது. 21-ம் தேதி நடந்த விசாரணையின் முடிவில், தீர்ப்பை  ஒத்தி வைத்தார் நீதிபதி. அந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் கைது நடவடிக்கைகள் இருக்கும்!''

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!

''தலைமறைவாக இருப்பவர்களை இன்னுமா பிடிக்க முடியவில்லை என்று கிண்டல் செய்யப் படுவது போலீஸுக்குத் தெரியாதா?''

''தலைமறைவு பார்ட்டிகளை மடக்குவதற்காக மட்டுமே மூன்று ஸ்பெஷல் டீம்களைக் களம் இறக்கு கிறார் மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன். இது ஒருபுறம் இருக்க, குவாரிகளுக்குள் நடந்ததாகச் சொல்லப்படும் நரபலிகள் தொடர்பான விசாரணையும் இப்போது சூடுபிடித்திருக்கிறது.

2008 செப்டம்பரில் திருவாதவூர் அருகில் உள்ள புதுத்தாமரைப்பட்டியில் பி.ஆர்.பி. குவாரியில் டிரைவராக இருந்த ரவி என்பவரின் மூன்று வயது மகள் மர்மமான முறையில் கோரமாக இறந்து கிடந்தாள். குவாரி ஏரியாவில் பிரேதம் கிடந்ததால், 'பிள்ளையை நரபலி கொடுத்துக் கொன்று விட்டனர்’ என்று அப்போது மறியலில் குதித்தனர் மக்கள். அந்தக் கொலை தொடர்பாக கைதான இன்னொரு டிரைவரான ரவியிடம், 'குழந்தை நின்றது தெரியாமல் லாரியை ரிவர்ஸ் எடுத்தபோது குழந்தை மீது ஏறிவிட்டது’ என்று வாக்குமூலம் வாங்கி அப்போது கணக்கை முடித்தது போலீஸ். இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், இப்போது அந்த வழக்கை மீண்டும் தோண்ட ஆரம்பித்திருக்கிறது போலீஸ்.

இதனிடையே, 'திருவாதவூர் ஏரியாவில் உள்ள குவாரி ஒன்றில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர், 'எங்க குவாரிக்குள் இளைஞர் ஒருவரை உயிரோடு புதைத்து, அந்த இடத்தில் சுவர் எழுப்பியதை என் கண்ணால் பார்த்தேன்’ என்று போலீஸுக்கு ரகசியத் தகவல் கொடுத்திருக்கிறாராம். அந்தச் சுவரையும் இடிக்கக் கிளம்பியிருக்கிறது போலீஸ்.

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கலெக்டர் சகாயத்தின் கார் டிரைவர் முருகேசன், கள்ளந்திரி அருகே மர்மான முறையில் எரிந்து... இறந்து கிடந்தார். சகாயம் கிரானைட் முறைகேடுகளை உற்று நோக்க ஆரம்பித்ததின் தொடக்க காலம் அது என்பதால், சகாயத்தை மிரட்ட அவரது கார் டிரைவரைப் பொசுக்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் இப்போது விசாரணை போகிறது.''

''ஐயையோ...!''

''கிரானைட் விசாரணையில் இருக்கும் அதிகாரிகள் சாதிக் காரணங்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டத் திலேயே வருத்த ரேகைகள் படர் கின்றனவே? தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள்கூட இந்த மேட் டரில் சைலன்ட்டாக இருப்பதைக் கவனித்தீரா?''

''உண்மை! கீழவளவில் உள்ள 'சர்க்கரை பீர்’ மலையில் தர்ஹா ஒன்று இருக்கிறது. இந்த மலையின் ஒரு பகுதியில் பஞ்ச பாண்டவர்கள் தங்கி, பொக்கிஷங்களைப் பதுக்கிவைத்து விட்டுப் போனதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால், இந்துக்கள் இந்த மலையை 'பொக்கிஷ மலை’ என்றும்

'பஞ்சபாண்டவர் மலை’ என்றும் அழைக்கிறார்கள். இந்த மலையில் கிரானைட் குவாரிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று இந்துக்களை விட முஸ்லிம்கள்தான் நிறையப் போராட்டங்களை நடத்தினார்கள். அதையும் மீறி, குவாரிக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டது. மலையின் மேற்குப் பகுதியை பி.ஆர்.பி. நிறுவனமும் கிழக்குப் பகுதியை சிந்து கிரானைட்ஸ் நிறுவனமும் பங்கு போட்டுக்கொண்டு உடைத்துத் தகர்த்து இருக்கிறார்கள். சேதுராமச்சந்திரன் கலெக்டராக இருந்தபோதுதான், இங்கே குவாரிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகச் சொல்லும் முஸ்லிம்கள், 'புராதனச் சின்னங்கள் இருக்கும் இடத்தின் அருகே எப்படி குவாரிக்கு அனுமதி கொடுத்தார்கள்?’ என்று மதுரை கலெக்டரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். இதையடுத்து, பழைய ஃபைல்களைத் தோண்டச் சொல்லி இருக்கிறாராம் கலெக்டர் அன்சுல்.''

''அவரும் வருகிறாரா?''

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!

''2005-07 காலகட்டத்தில் கலெக்டராக இருந்த உதயச்சந்திரன், குவாரி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கைக்குக் குறிப்பு எழுதி இருக்கிறார். ஒரு கோடி ரூபாய் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு அபராதம் விதித்து இருக்கிறார்.  அவருக்குப் பின்னால் வந்த கலெக்டர் ஜவஹர், அந்த குறிப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஜவஹர் காலத்தில் இஷ்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட கிரானைட் குவாரிகளில் பெருவாரியானவை இப்போது விதிமுறை மீறல் வில்லங்கத்தில் உள்ளனவாம். இந்த விவகாரத்தையும் டி.ஆர்.ஓ. ஒருவர் பொறுப்பு கலெக்டராக இருந்த காலத்தில் நடந்த தில்லாலங்கடிகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை தூசுதட்டி எடுத்திருப்பதால், மேலும் சில ஐ.ஏ.எஸ்-களுக்கு கூடிய சீக்கிரமே கொக்கி வரலாம்!''

''ம்!''

''முன்னாள் கலெக்டர் காமராஜ், '11 மாதங்கள் மட்டுமே மதுரையில் இருந்த நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று பதறுகிறார். ஆனால், இவருக்கு எதிரான இன்னொரு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது விஜிலென்ஸ். மதுரை புறநகர் பகுதியில் உள்ள நாகனாகுளம், பரசுராம்பட்டி கண்மாய்களில் கிராவல் அள்ளுவதற்கு 'கோமதி சங்கர்’ என்ற நிறுவனத்துக்கு காமராஜ் கலெக்டராக இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்டது. மூன்று ஆடி ஆழத்துக்கு மேல் கிராவலை வெட்டி அள்ளக் கூடாது என்ற சுரங்க விதியை மீறி 40 அடிகளுக்கும் கூடுதலாக கண்மாய் மண்ணை வெட்டி எடுத்து விட்டதாம் அந்த நிறுவனம். இதை எதிர்த்து மேற்கு ஒன்றிய ஜெ. பேரவை முன்னாள் செயலாளரான அட்வகேட் கோபி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டார். அதில், எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்ட காமராஜும் கனிமவளத் துறை துணை இயக்குநர் ராஜாராமும் தங்களது பதில் மனுவில், கோமதி சங்கர் நிறுவனத்தால் அந்தக் கண்மாய்களில் விதிமுறையை மீறி மண் எதுவும் எடுக்கப்படவில்லை. 1993-ல் பெய்த கனமழையில் கண்மாய்களில் இருந்து ஐந்து மீட்டர் அளவுக்கு மண் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்று சொல்லி இருந்தார்களாம். இதுவும் காமராஜுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்!'' என்றபடி தனது சிறகுகளுக்குள் இருந்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.

பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக் கள் என்று போலீஸார் திரட்டி இருக்கும் முதல் பட்டியல் அது!

'பி.ஆர்.பி., மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்து விவரங்களை பக்காவாய்த் திரட்டி விட்டது போலீஸ். தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட பி.ஆர்.பி. மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிலங்கள் மட்டுமே 24 ஆயிரம் ஏக்கர்கள். பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மொத்தம் 4,723. மொத்த நிலத்தின் அளவு 6,680.68 ஏக்கர், இதுதவிர, பி.ஆர்.பி. பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 607; நிலத்தின் அளவு 5,579.27 ஏக்கர், பி.ஆர்.பி-யின் மனைவி செல்வி பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 4; நிலத்தின் அளவு 215.82 ஏக்கர், மகன் சுரேஷ்குமார் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 209; நிலத்தின் அளவு 2317.34 ஏக்கர், இன்னொரு மகன் செந்தில்குமார் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 18; நிலத்தின் அளவு 150.34 ஏக்கர், அக்காள் மகன் காந்தியின் பெயரில் உள்ள டாக்குமென்டுகள் 276; நிலத்தின் அளவு 5,477.79 ஏக்கர், அக்காள் மகன் முருகேசன் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 124; நிலத்தின் அளவு 915.51 ஏக்கர், அக்காள் மகன் அமரேசன் பெயரில் உள்ள டாக்கு மென்ட்கள் 66; நிலத்தின் அளவு 697.27 ஏக்கர், இன்னொரு அக்காள் மகன் தவச்செல்வன் பெயரில் உள்ள டாக்குமென்ட்கள் 11; நிலத்தின் அளவு 147.12 ஏக்கர், அக்காள் மகன் தெய்வேந்திரன் பெயரில் 2 டாக்குமென்ட்கள் நிலத்தின் அளவு 86,382 சதுர அடி, அக்காள் மகன் கணேசன் பெயரில் 67 டாக்குமென்ட்கள்; நிலத்தின் அளவு 536.46 ஏக்கர், அக்காள் மகன் ராஜா பெயரில் 32 டாக்குமென்ட்கள், நிலத்தின் அளவு 1261.29 ஏக்கர்’ என் கிறது அந்த அறிக்கை!

படித்து தலைசுற்றிப் போய், ''இந்த வழக்கின் முழுவடிவம் எப்போதாம்?'' என்று கேட்டோம்.

''முதல்வர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பி.ஆர்.பி. கம்பெனிகளின் வியாபாரத் தொடர்புகள் அனைத்தையும் வெப்சைட்டில் ஏற்றி இருந்தார்கள். இப்போது, அந்த வெப்சைட்டை முடக்கி விட் டார்களாம். ஆனால், விடாக்கண்டன் போலீஸ், வெப்சைட்டில் கம்பெனி விஷயங்களை அப்லோடு செய்து கொடுத்த கம்ப்யூட்டர் புலியைத் தங்களது கஸ்டடிக்குள் கொண்டுவந்து விட்டது! இவை அனைத்தையும் வைத்து முதல்வர் யோசிப்பதைப் பார்த்தால், தி.மு.க-வை மொத்தமாக வளைத்துப் போட இந்த வழக்கைத்தான் ஜெயலலிதா நம்பி இருக்கிறார் என்று தெரிகிறது'' என்றபடி பறந்தார் கழுகார்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 மீண்டும் ஐயப்பன்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சிக்கலில் சிக்கி அவஸ்தைப்பட்ட இருவர், சக்சேனா மற்றும் ஐயப்பன். இவர்கள் இருவரும் மீண்டும் திரை உலகத்துக்குள் நுழைந்து விட்டனர். ஜெயா டி.வி-யில் உயர் பொறுப்பில் இருப்பவரின் மகன் சூராஜ், 'சண்ட படம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழாவில், சக்சேனாவும் ஐயப்பனும்தான் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தனர். ஐயப்பன், அடிக்கடி ஜெயா டி.வி. அலுவலகம் பக்கம் தென்படுகிறாராம்!

மிஸ்டர் கழுகு: பி.ஆர்.பி. நில நிலவரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு