Published:Updated:

டி.வி. ஊடகங்கள் நசுக்கப்படும் என ஷிண்டே எச்சரிக்கை: எதிர்ப்பை தொடர்ந்து மறுப்பு!

Vikatan Correspondent
டி.வி. ஊடகங்கள் நசுக்கப்படும் என ஷிண்டே எச்சரிக்கை: எதிர்ப்பை தொடர்ந்து மறுப்பு!
டி.வி. ஊடகங்கள் நசுக்கப்படும் என ஷிண்டே எச்சரிக்கை: எதிர்ப்பை தொடர்ந்து மறுப்பு!
டி.வி. ஊடகங்கள் நசுக்கப்படும் என ஷிண்டே எச்சரிக்கை: எதிர்ப்பை தொடர்ந்து மறுப்பு!

மகாராஷ்டிரா: "காங்கிரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்யும் மின்னணு ( தொலைக்காட்சி) ஊடகங்கள் நசுக்கப்படும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து  வரும் சில மின்னணு ஊடகங்கள், அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தன்னுடைய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு துறையின் தகவல் படி எந்த எந்த ஊடகங்கள் காங்கிரசுக்கு எதிராக செயல்படுகின்றன என்பது குறித்தும்,  அதற்கு பின்னால் இயங்கும் சக்திகள் குறித்தும் அறிந்து வைத்துள்ளதாகவும் ஷிண்டே கூறினார்.

இதனிடையே, உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஷிண்டே விளக்கம்

இந்நிலையில் தாம் மின்னணு ஊடகங்களை நசுக்க வேண்டும் எனக்கூறவில்லை என்றும், சமூக வலைத்தளங்களையே அவ்வாறு கூறியதாக ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

பா.ஜனதா கண்டனம்

இதனிடையே ஷிண்டேவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், "நீங்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சராக உள்ளீர்கள். ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்திருக்கும்போது இதுபோன்று நீங்கள் எப்படி பேச முடியும்? உங்களது ஊழலால், மோசமான நிர்வாகத்தால், நாளுக்கு நாள் மக்கள் ஆதரவை இழந்து வருகிறீர்கள்.இதற்காக ஊடகங்களை குற்றம் சாட்ட வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சில தொலைக்காட்சிகளில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என கூறப்பட்டதே ஷிண்டேவின் கோபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.