Published:Updated:

ஒரே இடத்தில் வரி, கட்டணங்களை செலுத்த பொது இ–சேவை மையம்!

Vikatan Correspondent
ஒரே இடத்தில் வரி, கட்டணங்களை செலுத்த பொது இ–சேவை மையம்!
ஒரே இடத்தில் வரி, கட்டணங்களை செலுத்த பொது இ–சேவை மையம்!

சென்னை: தகவல் தொழில் நுட்பவியல் துறையின் மூலம் சென்னை மாநகரில் முன்னோடி திட்டமாக 14 நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள், தமிழ்நாடு அரசு பொது இ-சேவை வலைதளம், சென்னை மற்றும் இதர 25 மாவட்டங்களில் மின் மாவட்ட திட்டம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஒரே இடத்தில் வரி, கட்டணங்களை செலுத்த பொது இ–சேவை மையம்!

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புறங்களில் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் பொது மக்கள் ஒரே இடத்தில் செலுத்திட வசதியாக, சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் துவக்கி வைக்கப்படும் என்று 2014-2015ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக, சென்னை மாவட்ட நிர்வாகத்திலுள்ள மூன்று வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியில் மூன்று மண்டல அலுவலகங்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் இரண்டு அலுவலகங்கள் மற்றும் ஆறு நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள் ஆகிய 14 இடங்களில் முன்னோடி திட்டமாக நகர்ப்புற பொது இ-சேவை மையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இம்மையங்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நிர்வகிக்கப்படும். இம்மையங்களின் மூலம் முதற்கட்டமாக குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய வருவாய்த்துறையின் சேவைகளும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், அன்னை தெரேசா நினைவு ஆதரவற்ற பெண்கள்
திருமண உதவித் திட்டம் ஆகிய சமூக நலத் துறையின் சேவைகளும் வழங்கப்படும்.

மேலும், இரண்டம் கட்டமாக மின் கட்டணம் செலுத்துதல், சென்னை மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல் ஆகிய சேவைகளைக் கையாளவும் பெற வழிவகை செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் சிரமத்தை குறைக்க முடியும். எதிர்காலத்தில் இம்மையங்கள் மூலம் பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகளை இணையம் மூலமாகவே பொதுமக்கள் பெற்றிட இயலும்.

பொதுமக்களுக்கு வருவாய் மற்றும் சமூக நலத் துறையின் சேவைகளை வழங்கும் மின் மாவட்ட திட்டத்தை சென்னை மற்றும் இதர 25 மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்து, 4 பேருக்கு சாதிச் சான்றிதழ்களையும், 3 பேருக்கு வருமானச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அரசுத் துறைகளின் இணைய தள வாயிலான சேவைகளை பொதுமக்கள் ஒருங்கிணைந்த முறையில் பெறுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு பொது இ-சேவை வலைதளத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது.