Election bannerElection banner
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

காந்தி லெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்!

'மந்திரிகள் லஞ்சம் வாங்குவார்கள் என்பது முட்டாள்தனமான கருத்து’ என்கிறாரே ப.சிதம்பரம்?

உண்மைதானே! நேரடியாக யார் வாங்குகிறார்கள்?

 சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

கழுகார் பதில்கள்!

ராகுலுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

ரகசியம் நிறைந்த கேள்வி இது!

 கு.வின்சென்ட், மதுரை-16.

கழுகார் பதில்கள்!

கருணாநிதி நிரந்தரமாக கறுப்புச் சட்டை அணிவதாக முடிவெடுத்துள்ளாரே?

##~##

உங்களது அஞ்சலட்டை மதுரையில் இருந்து சென்னை வருவதற்குள், கறுப்புச் சட்டையைக் கழற்றி விட்டார் கருணாநிதி. அவரை யாராவது கருஞ்சட்டை அணியக் கட்டாயப்படுத்தினார்களா? அவராகவே போட்டுக்கொண்டார். 'இன்று ஒரு நாள் மட்டுமல்ல; இனி, இதையே தொடர்ந்து அணிவேன்’ என்று சொல்லிக்கொண்டார். 'பெரியார் கருஞ்சட்டைப் படை தொடங்கியபோது முதல் கையெழுத்துப் போட்டு அணிந்தவன் நான்தான்’ என்றும் பெருமைப்பட்டுக்கொண்டார். ஈ.வெ.கி.சம்பத்தும் கவிஞர் கருணானந்தமும் பொறுப்பாளர்களாக இருந்த அப்படை தொடங்கப்பட்டபோது கருணாநிதி ஈரோட்டில் இருந்தார். அப்போது, கருஞ்சட்டை எடுத்து அணிந்து கொண்டார் என்பதற்கு கருணானந்தம் எழுதிய புத்தகமே சாட்சி. ஆனால், இவை எல்லாம் பழைய கதை! 1987-ம் ஆண்டு கருணாநிதி தனது பிறந்த நாளுக்காக பெரியார் திடலில் மாலை வைக்க வரும்போது திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவருக்கு கறுப்பு சால்வை போட்டார். 'நல்ல நாள் அன்று கறுப்பு சால்வை போடலாமா?’ என்று தி.மு.க. முன்னணியினர் கொந்தளிப்பாகப் பேசி அந்த இடத்தில் பரபரப்பு கிளம்பியதும், 'திராவிடர் கழகத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று அன்றைய அமைப்புச் செயலாளர் நீலநாராயணன் அறிவித்ததும், 'நாத்திகக் கொள்கைக்காக எல்லாம் ஒரு இயக்கம் தேவையா?’ என்று கருணாநிதி பேசியதும் வரலாறு. கருணாநிதியும் வீரமணியும் அதை மறந்திருக்கலாம். ஆனால், அவர்கள் நடத்திவரும் பத்திரிகைகள், அவர்களது குறுவெளியீடுகள் சாட்சியங்களாக இருக்கின்றன!

 பஞ்சவண்ணமகன், கருப்பம்புலம்.

கழுகார் பதில்கள்!

  ஒருவேளை, ஜெயக்குமார் ராஜினாமா செய்ய மறுத்தால்..?

ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவிக்கும் அளவுக்கு ஜெயக்குமார் தைரியசாலியா என்ன? ஒருவேளை, அப்படிச் செய்தால் அவர் மீது நம்பிக் கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து நீக்குவதற்கு அ.தி.மு.க. முயற்சிக்கும். அதற்கான பெரும்பான்மை அந்தக் கட்சிக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் பழைய நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆர். விலகிய போது, சபாநாயகரை வைத்து சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது, தி.மு.க. சபாநாயகராக இருந்த மதியழகன், எம்.ஜி.ஆரின் ஆதரவாளராக மாறினார். சபையில் ஒருநாள் எம்.ஜி.ஆர். எழுந்து, 'இன்றைய அமைச்சரவை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் ஆட்சியில் நீடிக்கலாமா?’ என்று கேட்டார். சபாநாயகர் மதியழகன் உடனே, 'சட்டசபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தி மக்களைச் சந்தியுங்கள்’ என்று சொன்னதைக் கேட்டு, அன்றைய முதல்வர் கருணாநிதி ஆடிப்போனார். 185 உறுப்பினர்கள் ஆதரவுடன் இருந்த அசைக்க முடியாத ஆட்சி அது. உடனே, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது தி.மு.க.

வரலாற்றின் காமெடி நிகழ்வாக தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் இரண்டு சட்டசபை ஒரே நாளில் கூடிய நிகழ்வு 2.12.1972 அன்று நடந்தது. சபாநாயகர் நாற்காலியில் மதியழகனும் அவருக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு துணை சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசனும் உட்கார்ந்து தனித் தனியாக சபையை நடத்தினர். அன்றைய தினம் நடந்த ரசாபாசங்கள், தமிழக சட்டசபை அதற்கு முன் பார்க்காதவை. அன்று நடந்தவை அரசியல் கட்சிக்குள் ஏற்பட்ட கொந்தளிப்பின் வெளிப்பாடு. இன்று நடப்பது ஒரு தனிமனிதர் மீதான கோபம்!

 சி.கார்த்திகேயன், சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

  2011 சட்டமன்றத் தேர்தலின்போது, வாக்கு சேகரித்த ஜெயலலிதாவுக்கும் இப்போதைய ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்?

அப்போது மக்களைப் பார்த்துப் பயந்தார்.

 தேன்செல்வி பழனிச்சாமி, அ.காளாப்பூர்.

கழுகார் பதில்கள்!

  காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தை எட்டி இருப்பது பற்றி?

மகிழ்ச்சிக்குரிய செய்தி இது! அரசாங்கம் இதில் கூடுதல் அக்கறை செலுத்தினால், காற்றாலை மூலமான மின்உற்பத்தியை இன்னும் அதிகப் படுத்தலாம். அதேபோல், சூரிய மின்சக்தியிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். அணுமின் நிலையங்களின் ஆபத்து குறித்து பரவலாகப் பேசப் படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகமாகிறது. இந்தநிலையில், இயற்கை வளமான சூரியசக்தியும் காற்றும் நமக்கு நிச்சயம் கைகொடுக்கும். முதல்வர் இதுகுறித்து யோசிக்க வேண்டும்!

 செ.அ.ஷாதலி, தென்காசி.

கழுகார் பதில்கள்!

  காவிரிப் பிரச்னையில் தமிழக காங்கிரஸ் மௌனம் காப்பது ஏனோ?

  பொதுவாக, தேசியக் கட்சிகள் இதில் முடிவெடுக்கத் திணறுகின்றன. தமிழர்களிடமும் வாக்குகள் வாங்க வேண்டும் கன் னடர்களிடமும் வாக்குகள் வாங்க வேண்டும் என்பதுதான் காரணம். இதை, மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னையில் கேரளக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து நிற்பார்கள். காவிரி விவகாரத்தில் கர்நாடகக் கட்சிகள் ஒரே மேடைக்கு வருவார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தலைஎழுத்து... இதிலும் தனித்தனி ஆவர்த்தனங்கள். ஒரேசிந்தனை உள்ள கட்சிகள்கூட தனித்தனியாகப் போராட்டங்கள் நடத்துவதால்தான், தமிழகத்தின் ஒட்டுமொத்த எழுச்சி வெளியில் தெரியாமலேயே போகிறது!

 ப.லஷ்மி நரசிம்மன், கோவை.

கழுகார் பதில்கள்!

  'இலங்கையில் சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டவுடன் அதிகாரப் பகிர்வு சாத்தியமாகும்’ என்கிறாரே சரத்பொன்சேகா?

பொன்சேகாவுக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் இடையே பரஸ்பர நட்பு ஏற்பட்டு விட்டதைத்தான் இது காட்டுகிறது. மற்றபடி, இலங்கையில் இனி அதிகாரப்பகிர்வு, தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு, சுபிட்சமான எதிர்காலம் ஆகிய மூன்றும் ஏற்படுத்துவதற்கான எந்த சாத்தியமும் தென் படவில்லை. வீடு கட்டித் தருகிறோம் என்பதும், தமிழர்களைப் பற்றிப் பேசுவதற்காக இந்தியாவுக்கு வருகிறோம் என்பதும் உலகத்தை ஏமாற்றத்தான். இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாகக் கணக்குக்காட்டி கடன் வாங்கப்பார்க்கிறார்கள். மற்றபடி, எதுவும் ஏற்படாது. நம்பாதீர்கள்!

 என்.காளிதாஸ், சிதம்பரம்.

கழுகார் பதில்கள்!

  'கூடங்குளம் அணுஉலையில் ஏழு அடுக்குப் பாதுகாப்பு உள்ளது’ என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்கிறாரே?

  இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்பட்டு உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் இப்போது ஆய்வு செய்து வருகிறது. அவர்களது இறுதித்தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம். அதுவரை நாராயணசாமியும் அமைதியாக இருப்பது நல்லது.

 ஆர்.மோகன்தாஸ், சேலம்.

கழுகார் பதில்கள்!

  'தொலைபேசிக் கட்டணத்தை நான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது புரட்சிகரமாகக் குறைத்தேன்’ என்கிறாரே ஆ.ராசா?

  என்ன சொல்ல வருகிறார் ஆ.ராசா. 'மக்களுக்கும் பங்கு கொடுத்து விட்டேன்’ என்கிறாரா?

கழுகார் பதில்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு