Published:Updated:

கபில் சிபல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பிஜேபி அறிவிப்பு

Vikatan Correspondent
கபில் சிபல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பிஜேபி அறிவிப்பு

புதுடெல்லி, டிச.11, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்போவதாக பிஜேபி அறிவித்துள்ளது. ##~~##

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி டெல்லியில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, கொள்கை அறிவிப்புகளை வெளியே வெளியிடுவது பொதுவாக வழக்கத்தில் இல்லாதது. ஆனால், மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்ட அறிவிப்பு மிகவும் ஆட்சேபகரமானது, இதற்காக அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரலாம்.

இந்த ஒரு நபர் விசாரணை கமிஷனை பிஜேபி ஏற்கவில்லை. இருந்தபோதிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி விசாரிப்பதில் கவலை இல்லை," என்றார் முரளி மனோகர் ஜோஷி

இதேபோல் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், "அமைச்சர் கபில் சிபல் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பற்றி பிஜேபி தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியுள்ள நிலையில், பிரதமர் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பதும், வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதும் சரி அல்ல. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் கூடுமானவரை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை பிரதமர் தவிர்க்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை முன்பு வருகிற திங்கட்கிழமை தர்ணா போராட்டம் நடத்த தீர்மானித்து இருக்கிறோம்," என்றாஅர் அருண் ஜெட்லி.