ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: போட்டுக் கொடுக்கும் தி.மு.க. புள்ளி?

மிஸ்டர் கழுகு: போட்டுக் கொடுக்கும் தி.மு.க. புள்ளி?

மிஸ்டர் கழுகு: போட்டுக் கொடுக்கும் தி.மு.க. புள்ளி?

''துரை தயாநிதியை இன்னுமா கைது செய்ய முடியவில்லை?'' - வந்து நின்ற கழுகார் முன் முதல் கேள்வியை வீசினோம். 

''கிரானைட் வழக்கில் துரை தயாநிதியைத் தேடும் போலீஸார், அவர் மும்பைப் பக்கம் இருந்ததற்கான தடயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதுதொடர்பாக, முதலில் மதுரை முன்னாள் துணைமேயர் மன்னனைக் கிண்டிய போலீஸ், அடுத்து பொட்டு சுரேஷ§க்கு வாரன்ட் அனுப்பியது. விசாரணைக்குப் பயந்து பதுங்கிக்கொண்டார் பொட்டு. உடனே, அவருக்கு நெருக்கமான வட்டத்தை நெருக்க ஆரம்பித்தது போலீஸ். இதைஅடுத்து, போலீஸை அணுகிய பொட்டுவின் வழக்கறிஞர்கள், 'அவர் இன்னும் 15 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகி விடுவார்’ என்று வாய்தா கேட்டார்களாம். 'அதெல்லாம் முடியாது’ என்று போலீஸ் மறுக்கவே, 12-ம் தேதி காலை 11 மணிக்கு மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் வந்து பவ்யமானார் பலே பொட்டு. அவரிடம், துரைதயாநிதியின் வியாபாரத் தொடர்புகள், முதலீடுகள் என்று கேட்டுக்கொண்டே வந்த போலீஸார், கடைசியில் அவரது இருப்பிடம் குறித்துத் துளாவினார்களாம். 'திருமணத்துக்குப் பிறகு, துரை சினிமா ஃபீல்டுக்குப் போயிட்டார். அதனால், நான் அவரோட பேசி மாசக்கணக்குல ஆச்சு’ என்று சொன்னவர், 'அரசியல் தொடர்பு இல்லாமல் இப்ப நான் கான்ட்ராக்ட் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கேன் சார்’ என்று சாந்த சொரூபமாய் சொன் னாராம். மொத்தமே மூன்றுமணி நேரம்தான் விசாரணை நடந்ததாம். 'மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும், மதுரையைவிட்டு எங்கும் போகக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் அவரை அனுப்பியது போலீஸ்.''

''அவ்வளவு அமைதியாக முடிந்து விட்டதோ?''

##~##

''இதையே போலீஸிடம் கேட்டால், 'மேலும் சில விஷயங்களைத் திரட்ட வேண்டி இருப்பதால் பொட்டுவை இப்போதைக்கு வெளியில் விட்டிருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பொடி வைக்கிறார்கள். கிரானைட் பிசினஸில் கோலோச்சிய கிரானைட் கிங் ஒருவர் அடுத்த கட்டமாக பால் பண்ணை பிசினஸில் கால் பதிக்க நினைத்தார். அதன் முதல்கட்டமாக மதுரை - நத்தம் ரோட்டில் உள்ள கோயில்பட்டி என்ற இடத்தில் 50 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டார். இதனிடையே மேலூர் ஏரியாவில் உள்ள கண்மாய் ஒன்றின் மீது கண்வைத்த கிரானைட் கிங், அதைத் துளைப்பதற்கான சிக்னலைப் பெறுவதற்காக மதுரை தி.மு.க-வின் பவர்ஃபுல் புள்ளியை அணுகி இருக்கிறார். பால் பண்ணைக்காக கிரானைட் கிங் வாங்கிப் போட்டிருந்த இடத்தையும் போடி ஏரியாவில் 32 ஏக்கர் தென்னந்தோப்பையும் தன் கைக்கு மாற்றிக்கொண்டு, கண்மாயைக் கூறு போட சிக்னல் கொடுத்தாராம் தி.மு.க. புள்ளி. இதையெல்லாம் தோண்டித் துருவி இருக்கும் போலீஸார், தி.மு.க. புள்ளி சம்பந்தப்பட்ட டாம்பீகத் தகவல்களைக் கேட்டு வெலவெலத்துக் கிடக்கிறார்கள். இதுகுறித்த முழுதகவல் கிடைத்த பிறகு பொட்டுவை மீண்டும் விசாரிப்பார்களாம்.''

''துரைதயாநிதியைப் பற்றி என்ன சொல் கிறார்கள்?''

''மகனை போலீஸ் கையில் சிக்கவைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அழகிரி, செல்போனில் பேசுவதையே தவிர்த்து வருகிறார். அப்படியே யாருடனாவது பேசுவதாக இருந்தாலும் தனக்கு அருகில் இருப்பவர்களின் செல் போனை வாங்கித்தான் பேசுகிறார். துரை தயாநிதி பயன்படுத்துவதற்காக நாமக்கல் ஏரியாவில் ஐந்து சிம் கார்டுகளை வாங்கி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். அதில் ஒரு நம்பரை இரண்டு நாட்கள் மட்டும் துரை பயன்படுத்தினாராம். அடுத்த நாளே, அந்த நம்பர் போலீஸுக்குத் தெரிந்து விட்டதாம். அழகிரி, காந்திஅழகிரி, துரைக்கு நெருக்கமான பேராசிரியர் ஒருவர், பவர்ஃபுல் தி.மு.க. புள்ளி  என்று நால்வருக்கு மட்டும்தான் அந்த நம்பரில் இருந்து பேசி இருந்தாராம் துரை. தனது மனைவியிடம்கூட பேசவில்லையாம். அப்படி இருக்க அந்த நம்பர் எப்படி போலீஸ் கைக்குப் போனது? என்று அழகிரியிடமே கேள்வி எழுப்பிய அவரது விசுவாசிகள், 'அஞ்சா நெஞ்சனுக்கே அஞ்சாம்படை வேலையா?’ என்று கொந்தளித்தார்களாம். சில நாட்கள் குலுமணாலியில் தங்கி இருந்த துரை, அங்கே வெந்நீர் ஊற்றில் குளித்த விஷயத்தை மூன்று பேரிடம் பகிர்ந்து கொண்டாராம். விசாரணையில் குலுமணாலி விஷயத்தை போலீஸ் கேட்டதும் திடுக்கிட்ட அந்தப் பேராசிரியர், அவர்கள் அடுக்கிய இன்னும் சில விஷயங்களைக் கேட்டதும், 'இதெல்லாம் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது’ என்று மிரண்டுபோனாராம்.''

''ம்!''

''இந்த விஷயங்களைக் கேட்டு அழகிரியும் அதிர்ந்தாராம். 'துரைக்கு கிரானைட் பிசினஸ் எல்லாம் சரிவராதுன்னு எவ்வளவோ சொன்னேன். கேக்கல. அவனைக் கொண்டுபோய் சிக்கல்ல மாட்டிவிட்டதும் இல்லாம இப்ப முதுகுலயும் குத்துறாய்ங்களா? இவனுகளை நம்பி நடு வீடு வரைக்கும் விட்டது தப்பாப் போச்சு’ என்று வார்த்தைகளைக் கொட்டினாராம். அழகிரியைச் சுற்றி இருப்பவர்களால் எட்டப்பன் வேஷம் கட்டப்படும் தி.மு.க. 'பவர்கிங்’கிடம் சில முக்கியமான ஆவணங்கள் சிக்கி இருக்கின்றனவாம். 'அதனால்தான் அண்ணன் பொறுமையாக இருக்கிறார். ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு’ என்கிறார்கள் அழகிரி விசுவாசிகள். இதனிடையே, ஏற்கெனவே கிரானைட் முறைகேட்டில் சம்பாதித்ததாக பி.ஆர்.பி-யின் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், 17 பஸ்கள் உள்ளிட்டவற்றைப்பறிமுதல் செய்து முடக்கி வைத்திருக்கும் போலீஸார், சென்னையில் உள்ள துரை தயாநிதிக்கு சொந்தமான க்ளவுடு நைன் மூவீஸ் சினிமா கம்பெனி அலுவலகம், அடையாறில் உள்ள மோகா காபி ஷாப் கட்டடம் உள்ளிட்டவற்றையும் கிரானைட் வழக்கில் அட்டாச்மென்ட் போட்டுவிட்டார்களாம்.''

''அப்படியா?''

''கிரானைட் வழக்குகள் பிசுபிசுத்து விட்டன என்று பேச ஆரம்பித் துள்ளார்களே?''

''அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் சிலர் இப்படிப் பொய்ச் செய்தி பரப்பி வருகிறார்கள். 'பேரம் படிந்து விட்டதா... நாடகம் முடிந்து விட்டதா?’ என காம்ரேட்கள் போஸ்டர்கள் ஒட்டி பீதியைக் கிளப்புகிறார்கள். ஆனால், 'சந்தேகம் வேண்டாம், வழக்கு விசாரணைகள் முழுவீச்சில் போய்க்கொண்டு இருக்கின்றன. அனேகமாக இன்னும் ஒரு வாரத்தில் ஏழெட்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கலாகிவிடும்’ என்று நம்பிக்கை ஊட்டுகிறது போலீஸ். ஆனால், லோக்கல் போலீஸில் இருக்கும் சிலர் இங்கு நடக்கும் செய்திகளை பி.ஆர்.பி. தரப்புக்கு உடனுக்குடன் பாஸ் பண்ணுவதை உயர் அதிகாரிகளால் இன்னமும் தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. துரை தயாநிதி மற்றும் பி.ஆர்.பி. குடும்பத்தினருக்கு கோர்ட் பிடிவாரன்ட் போட்டுவிட்டதால், இனி நடவடிக்கை சூடாகும்'' என்ற கழுகார் நிறுத்திவிட்டு மறுபடி தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: போட்டுக் கொடுக்கும் தி.மு.க. புள்ளி?

''ஜெயக்குமாரின் சபாநாயகர் பதவி ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், அதை ஏற்காமல் இருக்கிறது செய்தித்துறை'' என்று சொல்லி ஷாக் கொடுத்தார் கழுகார்.''அரசின் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சிப் பிரிவினர் ஆகியோர் தங்கள் ஊடகங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைப்பதற்காக தலைமைச் செயலகத்தில் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊடக மையத்தை அமைத்திருக்கிறது செய்தித்துறை. இந்த மையத்தையும் செய்தித் துறைக்கென புதிய வெப்சைட்டையும் கடந்த 12-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறார். இந்த வெப்சைட்டில் 'தமிழ்நாடு அரசு’ என்ற பட்டனில் உள்ள சபாநாயகர் பகுதியை கிளிக் செய்தால் சபாநாயகர் பெயருக்கு நேராக ஜெயக்குமாரின் பெயரும் துணை சபாநாயகர் பெயருக்கு எதிரே தனபாலின் பெயரும்தான் இருக்கிறது. அதோடு, தமிழில் எழுத்துப் பிழைகளும் இருக்கின்றன. இப்படித் தவறுகள் நிறைந்த இந்த இணையதளத்தை ஜெயலலிதா திறந்துவைத்த போதுகூட, தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.''

''ம்...''

''ஊடக மையத்தைத் திறந்து வைத்த போது, செய்தித் துறை செயலாளர் ராஜாராம், 'இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன வசதிகளுடன் இந்த மையம் திறக்கப்பட்டிருக்கிறது’ என்றார். 'டெல்லியில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகைத் தகவல் அலுவலகமான பி.ஐ.பி. அலுவலகத்தில் ஊடக மையம் இதைவிட சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில்கூட ஊடக மையத்தில் இதே வசதிகள் எல்லாம் உண்டு. அப்படி இருக்கும்போது இந்தியாவிலேயே முதன் முறையாக என்று எப்படிச் சொல்ல முடியும். முதல்வரிடம் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களைச் சொல்லலாமா?’ என்ற விமர்சனமும் எழுந்து இருக்கிறது. முதல்வரின் செயலாளர்கள் மூன்றுபேரும் 'இது உண்மையா?’ என்று கேட்டார்களாம். கடைசியில், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ற வார்த்தையைச் சேர்ப்பதாக இருந்தால் ராஜாராமின் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும் என்று சொன்னார்களாம். வேறுவழி இல்லாமல் கையெழுத்துப் போட்டு தந்த பிறகுதான் செய்திக் குறிப்பே வெளியானதாம்.''

''அவரவர்க்கு அவரவர் செய்வது முதலாவது!''

''மணல் அள்ளுதல், விற்பதில் பெரும் முதலையாக வலம் வந்த கோவை ஆறுமுகச்சாமி இனி அந்தத் தொழிலில் இருந்து படிப்படியாக விலகிக்கொள்ள முடிவு எடுத்துள்ளாராம். ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு தொடர்ச்சியாக நீதிமன்றம் தடை விதித்து வருகிறது. பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் கிளப்பி வருகிறார்கள். எனவே, தனது கவனத்தை வேறு தொழில்களில் திருப்புவதற்குத் திட்டமிட்டு உள்ளாராம். அவருக்கு அதைவிட லாபம் தரக்கூடிய ஒரு தொழில் கொடுக்கப்படலாம்!'' என்றபடி பறந்தார் கழுகார்!

அட்டை படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சரண்டர் பெரியசாமி!

மிஸ்டர் கழுகு: போட்டுக் கொடுக்கும் தி.மு.க. புள்ளி?

தூத்துக்குடியைச் சேர்ந்த முகமது ஃபாத்திமா என்பவர் கொடுத்த நிலஅபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரிய சாமி, கடந்த 15-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். வழக்குப் பதியப்பட்டதும் தலைமறைவான பெரியசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீனுக்கு முயற்சித்தார். இந்த நிலையில், கீதாஜீவன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை போலீஸார் அழைத்து விசாரிக்கத் தொடங்கினர். மூன்றாவது முறையாக அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆகவே, சரண்டர் ஆகிவிட்டார்.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கீதாஜீவனைத் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின், ''நம்ம வக்கீல்கள் இருக்காங்க. அவங்க பாத்துக்குவாங்க. அப்பாவைக் கவலைப்படாம இருக்கச் சொல்லும்மா'' என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். போனை பெரியசாமியிடம் கொடுக்கச் சொல்லி, அவரிடமும் பேசி இருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக கூடி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கொந்தளித்து கோஷம் போடவே, ''இந்தக் கேஸோட போகணும்னு நினைக்கிறீங்களா... இதுக்கு மேலேயும் போடணுமா..?'' என்று தொண்டர்களை அடக் கினார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெரியசாமி, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட, பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

படம்: ஏ.சிதம்பரம்

 ராக்கெட் ராஜாவுக்கு சிக்கல்!

சென்னை மதுரவாயலில் கடந்த 9-ம் தேதி மணிக்குமார் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய அந்தோணி, போலீஸ் பிடியில் சிக்கி இருக்கிறார். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணிக்கு பல முக்கியக் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில், உள்ளூரில் சின்னச் சின்னத் தகராறுகளில் ஈடுபட்டு வந்த அந்தோணி, பின்னர் வெங்கடேசப் பண்ணையார் குரூப்பில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு நெருக்கமாக இருந்தபோது கட்டப் பஞ்சாயத்துக்களில் கொடிகட்டிப் பறந்து இருக்கிறார். அந்தோணி மீது தூத்துக்குடியில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். தவிர, கட்டத்துரை கொலை வழக்கிலும் தொடர்பு இருக்கிறதாம். 'சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தங்கி இருந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் மும்பை உள்ளிட்ட இடங்களில் பதுங்கிக்கொள்வதுதான் அந்தோணியின் ஸ்டைல்’ என்கிறார்கள் போலீஸார்.  

பண்ணையாரின் மறைவுக்குப் பிறகு, கொஞ்ச காலம் ராக்கெட் ராஜா கோஷ்டியில் இருந்திருக்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். அதன்பிறகு, தனிக்காட்டு ராஜாவாக இருந்திருக்கிறார். அதில் நிறைய எதிரிகளை சம்பாதித்துக்கொண்டாராம். அந்தோணி இப்போது போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதால், ராக்கெட் ராஜா கோஷ்டியினர் அதிர்ந்து கிடக்கிறார்கள். ராக்கெட் கோஷ்டியுடன் சிறிது காலம் இருந்தாலும் அவர் மும்பை, கொல்கத்தா நகரங்களில் பதுங்கும் இடம் எது என்பது அந்தோணிக்குத் தெரியும். அதனால், அவனை வைத்து தங்களை ஸ்மெல் செய்துவிடுமோ என அஞ்சுகிறார்கள். பிடிபட்டு இருக்கும் அந்தோணி துருப்புச் சீட்டு என்பதால் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைத் திரட்ட போலீஸ் தரப்பு திட்டமிட்டு இருக்கிறதாம்.

 இந்த வாரிசு மட்டும் இருக்கலாமா?

இளைஞர் அணித் தேர்வில் வயது வரம்பை உருவாக்கினார், கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு இடம் அளிக்க மறுத்தார் என்று ஸ்டாலின் மீது புகழ் மாலை பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளராக இ.பெ.செந்தில்குமார் என்பவரது நியமனம் பலரது கண்களை உறுத்துகிறது. காரணம் அவர், முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் மகன். 'இந்த வாரிசுக்கு மட்டும் இடம் தரலாமா?’ என்று சிலர் டென்ஷன் ஆகிறார்கள்.

மிஸ்டர் கழுகு: போட்டுக் கொடுக்கும் தி.மு.க. புள்ளி?