Published:Updated:

உரிமை மீறல் பிரச்னை: பிஜேபிக்கு கபில் சிபல் பதிலடி

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.11,2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ள பிஜேபிக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதிலடி தந்துள்ளார். ##~~##

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்போவதாக பிஜேபி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் சிபல், "பிஜேபியை பொறுத்தவரையில், நாடாளுமன்ற அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது மட்டும் இன்றி, எனது அமைச்சகத்தின் நடவடிக்கைகளையும் முடக்குவதுதான் நாடாளுமன்ற உரிமை என்று அக்கட்சி கருதுகிறது," என்று அவர் சாடினார்.

இந்த விவகாரத்தில் பிஜேபியின் குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், "விசாரணை கமிஷன் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது தொடர்பாக பிஜேபி கூறி இருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இது குறிப்பிட்ட அமைச்சர் மேற்கொண்ட நிர்வாகம் தொடர்பான முடிவு. அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவே தவிர, கொள்கை முடிவு அல்ல.

மேலும் இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமும் இல்லை. எனவே விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி அமைச்சர் கபில் சிபல் முதலில் நாடாளுமன்றத்தில் தான் அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை," என்றார் பன்சால்.

இதனிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில், "நாடாளுமன்றத்தின் உரிமை பற்றி பேசுபவர்கள்தான் கடந்த 21 நாட்களாக நாடாளுமன்றத்தை செயல்படவிடவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலை பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்," என்றார்.