Published:Updated:

கருணாநிதியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு: சீமான்

Vikatan Correspondent
கருணாநிதியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு: சீமான்

வேலூர், டிச.11,2010

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறினார். ##~~##

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து, வேலூர் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை வாசலில் காத்திருந்த நாம் தமிழர் இயக்கத்தினர், ம.தி.மு.க. நிர்வாகிகள், திரைப்பட இயக்குனர்கள் பாலா, கெளதமன் உள்ளிட்டோர் சீமானை வரவேற்றனர்.

அப்போது நிருபர்களிடம் சீமான் கூறுகையில், "தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததின் அடிப்படையில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.

நான் அரசின் தவறான உத்தரவினால் 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதுபோல முன்பு என்னை கைது செய்தபோது 3 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அதாவது மொத்தம் 8 மாதங்கள் இந்த அரசு என்னை சிறையில் அடைத்துள்ளது.

எட்டு மாதம் சிறையில் இருந்ததால் எனது இயக்க வளர்ச்சிப் பணியை மேற்கொள்ள முடியவில்லை. அதுபோல என்னுடைய தொழிலையும்செய்யமுடியவில்லை. அதனால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்காக அரசு மீது வழக்கு தொடருவேன்," என்றார்.

எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று எதிராக பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, "காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது என்பது எங்களது கொள்கை. அந்த கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்வோம்," என்றார்.

தமிழக முதல்வர் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப்போவதாக சொல்லப்படுவது குறித்து கேட்டதற்கு, "அதற்கான வாய்ப்பு உள்ளது," என்றார் சீமான்.