Published:Updated:

தலையங்கம் - கொழுக்கும் அரசியல் கொசுக்கள்!

தலையங்கம் - கொழுக்கும் அரசியல் கொசுக்கள்!

தலையங்கம் - கொழுக்கும் அரசியல் கொசுக்கள்!

ழலுக்கு எதிராக இடி மின்னலுடன் பொழியும் குற்றச்சாட்டு மழையில் பெரிய இடத்து நரிகளின் சாயம் படிப்படியாகக் கரைகிறது. அந்த வரிசையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் படிப்பு, முன்னாள் இந்திய ஜனாதிபதியின் பேரன் எனும் அந்தஸ்து, மத்திய சட்ட அமைச்சர் பொறுப்பு ஆகிய அத்தனை மேற்பூச்சுகளும் கரைந்து... நாராசமாக ஊளையிட்டு, நிஜத்தில் தான் யார் என்று காட்டிவிட்டார் சல்மான் குர்ஷித்!

 'மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு என்று தொடங்கிய அறக்கட்டளையின் பேரால் அத்துமீறல்' என்பது குற்றச்சாட்டு. 'சல்மான் குர்ஷித்தின் சொந்தத் தொகுதிக்குப் போய், தவறுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்' என்றார் பொது நலப் போராளி கெஜ்ரிவால்.

அவ்வளவுதான்! 'என் தொகுதிக்குள் போகலாம்... ஆனால், திரும்பி வர முடியுமா? பேனாவில் மைக்குப் பதில் ரத்தம் நிரப்பும் நேரம் வந்துவிட்டது' என்று ஆவேசப்பட்டு, நாட்டையே நடுங்கவைத்திருக்கிறார் மெத்தப் படித்த மேதாவியான சல்மான் குர்ஷித். '71 லட்ச ரூபாய் முறைகேடு என்று கூவுகிறார்களே... ஒரு மத்திய அமைச்சருக்கு இந்தத் தொகை ஒரு பொருட்டா?' என்று சல்மானுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் சக அமைச்சர் ஒருவர். இவர்களின் தலைவி சோனியாவோ, 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வைத்தே இதுபோன்ற புகார்களைக் கிளப்புகிறார்கள். அந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்ததே நாங்கள்தான்' என்று சொல்லி, 'ஊழலின் முதல் எதிரியே காங்கிரஸ்தான்' என்று சாதிக்கப் பார்க்கிறார்.

அற்பக் கொசுதானே என்று நாம் அலட்சியமாக விட்டுத்தான், நாடெங்கும் பலி வாங்குகிறது 'டெங்கு'. அரசை மட்டுமே நம்பிப் பயன் இல்லை. நம் சுற்றுப்புறத்தை நாம்தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அரசியலுக்குள் சாக்கடை கலப்பதும் அப்படித்தான்.

சின்னஞ்சிறு 'ஓட்டை' கிடைத்தாலே உள்ளே புகுந்து ரத்தம் குடிக்கும் கொசுக்களுக்கு, இனிமேலுமா கொடுப்பது ந(£)ம் 'வோட்டை'?