Published:Updated:

"ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை!"

க.நாகப்பன்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்

##~##

கூடங்குளம், 'கோச்சடையான்’, ஜெயலலிதா, காமராஜர் மணி மண்டபம், விஜயகாந்த், சுப.உதயகுமாரன்... பரபரப் பாக இருக்கிறார் சரத்குமார். ஆனால், அத்தனை பரபரப்பும் ஜெயலலிதாவின் நலம் மட்டுமே விரும்புகிறதே... ஏன்? சரத்குமாரின் விளக்கத்தைக் கேட்போமா?  

 ''ரஜினியுடன் 'கோச்சடையான்’ படத்துக்காக நடிக்கும் அனுபவம்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கார் ரஜினி. பல வருஷங்களுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லியிருந்தார். அதை லண்டன்ல ரஜினிகிட்ட நினைவு படுத்தினேன். 'இவ்ளோ நாள் மறக்காமவெச்சிருக்கீங்களா? நல்ல கதைல்ல... பண்ணுவோம்... பண்ணுவோம். 'காஞ்சனா’வில் ரொம்ப போல்டான கேரக்டர் பண்ணியிருந்தீங்க. சூப்பர்... சூப்பர்’னு பாராட்டினார். 'கோச்சடையான்’ முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் பண்ற படம். ஒவ்வொரு நடிகரும் கேமராவை ஹெல்மெட் மாதிரி மாட்டிக்கிட்டு நடிக்கணும். 48 கேமரா 48 ஆங்கிள்ல ஷூட் பண்ணும். ரொம்பப் புது அனுபவமா இருக்கு கோச்சடையான்!''

"ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை!"

''கூடங்குளம் அணு உலை இயக்கத்தை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீங்க?''

''கூடங்குளம் அணு உலை நிச்சயம் தேவை என்பதுதான் என்  நிலைப்பாடு. 'கூடங்குளம் தேவை இல்லை’னு உதயகுமாரன்சொன்னப்போ, 'ஏன் தேவைஇல்லைனு சொல்றீங்க? காரணம் சொல்லுங்கண்ணே’னு கேட்டேன். அப்போது இருந்தே அவர் என்னை எதிரியாப் பார்க்க ஆரம்பிச்சுட்டார். மாற்றுக் கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டுப் பிரச்னை மிகக் குறைந்த அளவில் இருந்தது. அப்புறம் வந்த தி.மு.க. ஆட்சி பல ஒப்பந்தங்கள் போட் டுட்டே இருந்தாங்களே தவிர, ஆக்கப்பூர்வமா எதுவும் நடக்கலை. அதன் விளைவுதான் இப்போ அதீதமான மின்வெட்டு. 2020-ல் இந்தியாவுக்கு 9,50,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும். அதை எப்படி உற்பத்தி செய்யப்போறோம்? பிரட்ல முட்டையை உடைச்சு ஊத்திப் புரட்டிப் போட்டா, பிரட் ஆம்லேட் ரெடி ஆகிடும். அந்த மாதிரி மின்சாரத்தை உற்பத்திப் பண்ணிர முடியுமா என்ன? 2020 தேவைக்கு இப்போ இருந்தே திட்டம் போட்டுச் செயல்படணும். அதுக்காகத்தான் தமிழக அரசாங்கம் கடுமையான சில நடவடிக்கைகள் எடுக்குது. அந்த நடவடிக்கைகள் என்னைப் பொறுத்த வரை சரி.

பொக்ரான் அணு குண்டு சோதனைக்குப் பிறகுதான் அப்துல் கலாமுக்கு இந்தியா முழுக்க மரியாதையும் ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பும் கிடைச்சது. அவரே கூடங்குளம் அணுமின் நிலையத்தால் யாருக்கும் பிரச்னை இல்லைனு சொல்றாரு. அதை ஏன் நம்ப மாட்டேங்குறீங்க? அப்போ அவர் பொய் சொல்றார்னு சொல்றீங் களா? கைல வெண்ணெயை வெச்சுக்கிட்டு எதுக்கு நெய்க்கு அலையணும்? கூடங்குளம் அணு உலை திறந்த பிறகும் மின்வெட்டு இருந்தா, நானும் அவங்களோட களத்துல இறங்கிப் போராடுறேன். போதுமா?''

"ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை!"

''ஒருவேளை, 'அணு உலை எங்கேயோ தென் தமிழகத்தில்தானே செயல்படப் போகுது. அதனால நமக்குப் பாதிப்பு இல்லை’னு நினைச்சுச் சொல்றீங்களோ..?  சென்னையிலேயே அந்த அணு உலை அமைந்திருந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?''

''அப்பவும் ஆதரிக்கத்தான் செய்வேன். 'கூடங்குளம் அணு உலை வெடிச்சிடும்... வெடிச்சிடும்’னு விவரம் தெரியாமப் பேசிட்டு இருக்காங்க. அதைப் பத்தி எல்லாருமே புரிஞ்சுக்கணும்னுதான் 'ஏன் வேண்டும் கூடங்குளம்?’னு ஒரு புத்தகத்தை 2 லட்சம் பிரதிகள் அச்சடிச்சு இலவசமாத் தர்றேன். அணு உலைபத்திப் புரியாதவங்களுக்கும் அது அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுக் கும். இந்த அணு உலைக்காகப் பல வருஷமாத் திட்டம் போட்டு, கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கு அரசாங்கம். இவ்ளோ வருஷம் அங்கே இருக்கிறவங்க அதை ஏன் தடுக்கலை? எங்கேயோ அமெரிக்காவுல இருந்து உதயகுமாரன் லேட்டா வந்து இறங்கி இருக்காருபோல. கப்பல்ல, கரைல, ஓட்டு வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு பத்திரிகை, சேனல்களுக்குப் பேட்டி கொடுக்கிறது ஒரு ஃபேஷன் ஆகிப்போச்சு. ஏன், எனக்கும் கூடங்குளத்துல போய் நின்னு மக்களுக்கு ஆதரவாக் குரல் கொடுத்து அரசியல் மைலேஜ் ஏத்திக்கத் தெரியாதா? ஆனா, எதைப் பத்தியும் எதுக்காகப் பேசுறோம்னு தெரிஞ்சுக் கிட்டுப் பேசணும். 'சரத்குமாருக்கு நியூக்ளியர் ஆக்ட் பத்தி என்ன தெரியும்’னு உதயகுமாரன் கேட்டிருக்கார். எந்த ஒரு புராஜெக்ட்டில் இறங்குறதுக்கு முன்னாடியும் அதைப் பத்தி முழுக்கத் தெரிஞ்சுக்கிட்டுதான் இறங்கு வான் இந்த சரத்குமார்!''

''எல்லாமே தெரிஞ்சுக்கிட்டுதான் இறங்குவேன்னு சொல்றீங்க. ஆனா, கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கான அறிவிப்பு வந்த முதல் நாள்ல இருந்து பல வருஷமா அணு உலையை எதிர்த்துட்டுத்தானே இருக்காங்க கூடங்குளம் மக்கள்?''

''அதுக்குக் காரணம், அவங்களைச் சுத்தி இருக்கிறவங்க கொடுத்த தவறான வழிகாட்டல். இதோ இப்பக்கூட ஒருத்தர் வந்திருக்கார். 'நான் ஆட்சிக்கு வந்தா மூணே மாசத்துல பவர் கட் இல்லாமப் பண்ணிடு வேன்’னு சொன்னார் விஜயகாந்த். 'எப்படிங்க?’னு கேட்டதுக்கு, 'நான் ஆட்சிக்கு வந்த பிறகு சொல்றேன்’னு மழுப்புறார். இப்படிச் சுயநலமா இருக்கிற சிலரால்தான் உண்மை என்னன்னு வெளியே தெரியாமலே போகுது. உதயகுமாரனும் அப்படிச் சுயநலமாகச் செயல்படுகிறார். பொது நலம் இல்லாத போராட்டம் எப்பவும் இறுதி வெற்றி அடையாது!''

''காமராஜர் மணி மண்டபப் பணிகள் என்ன நிலைமையில் இருக்கு?''

''வேலைகள் நல்லபடியா நடந்துட்டு இருக்கு. கடனைக் கழிக்கணும்னு நினைச்சா, ஆறு மாசத்துல ஏனோதானோனு கட்டி முடிச்சிருப்பேன். ஆனா, காலாகாலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி வித்தியாசமாக் கட்டணும்னு ஆசைப்படுறேன். 11 ஏக்கர் நிலம் வாங்கிட்டேன். ஈசான மூலையில் இருக்கும் நிலத்தை வாங்க முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. மூணு மாசத்துல தோட்டக்கலை நிபுணர் வந்துடுவாரு. வேலைகள் நிதானமா நடந்தாலும் மணி மண்டபம் பிரமாண்டமா இருக்கும்!''

''விஜயகாந்த் பாதையில் நீங்களும் அரசியல் செய்றீங்கனு ஒரு விமர்சனம் இருக்கே?''

''அவர் பொது மேடையில் போதையோட பேசுறதா சொல்றாங்க. நான் என்ன அப்படியாப் பேசிட்டு இருக்கேன். நான் என் தந்தை, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்... இவங்களைத் தான் ஃபாலோ பண்றேன்!''  

''தெற்கு ஆசியாவின் பிரமாண்டமான அண்ணா நூலகத்தை மருத்துவமனை ஆக்கும் தமிழக அரசின் திட்டத்துக்குக்கூட ஆதரவு தெரிவிச்சீங்களே?''  

''குழந்தைகள் காப்பகம், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டங்கள் கொண்டுவர்றதா ஜெயலலிதா சொன்னாங்க. ஏற்கெனவே இருக்குற நூலகங்களைப் புதுப்பிப்போம்னு அறிவிச்சாங்க. அந்தத் திட்டம் பிடிச்சிருந்தது. வரவேற்றேன்!''

''பின் விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் கண்மூடித்தனமான ஆதரவு தெரிவிக்கிறீங்கனு சொல்லலாமா?''

"ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை!"

(சட்டென்று கோபப்படுகிறார். குரல் உயர்த்துகிறார்...) ''ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்குக் கூட்டணி தர்மம் காரணமாகவே நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். அது மட்டும் இல்லாம, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுறாங்க. தி.மு.க. ஆட்சி விட்டுட்டுப்போன பல பிரச்னைகளைச் சரிபண்ணிட்டு இருக்காங்க. தொலைநோக்குப் பார்வையே இல்லாம செயல்பட்ட முந்தைய தி.மு.க. ஆட்சிதான் இந்த மின்வெட்டுக்கு முழுக் காரணம். ஜெயலலிதா கொண்டுவர்ற '2023 விஷன்’ திட்டத்தை வெளிநாடுகளில் கொண்டாடுறாங்க. சென்னையில் இட நெருக்கடியைத் தவிர்க்க சேட்டிலைட் டவுன் கொண்டுவர்றாங்க. பால் விலை, பஸ் கட்டண உயர்வுனு சில கசப்புகள் இருக்கலாம். ஆனா, அதையும் வருங்காலத்துல சரி பண்ணிடுவாங்க. நம்பி ஓட்டுப் போட்டவங்க நம்பிக்கையா இருங்க. மன உறுதி, தொலைநோக்குப் பார்வை, தைரியம்னு பல பரிமாணங்கள்கொண்ட சாதனை படைக்கும் தலைவியாகத்தான் ஜெயலலிதாவை நான் பார்க்கிறேன். இந்தியாவுக்குப் பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் ஜெயலலிதாவுக்கு இருக்கு. ஒரு புள்ளியா இருந்த சிங்கப்பூரை உலகமே ஆச்சர்யப்படும் அளவுக்கு மாத்திக் காட்டினார் லீ க்வான் யூ. சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்காக 'ஸ்வீட் ஹார்ட் டிக்டேட்டரா’ இருந்தார். வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் இடம் பெயரணும்னு ஒரு வருஷம் நேரம் கொடுத்தார். இடம் பெயராத குடும்பங்களைச் சமரசம் பண்ணி வீடு கட்டிக் கொடுத்து இடம்பெயரச் செய்தார். நான் தமிழ்நாட்டின் லீ க்வான் யூவா இப்போ ஜெயலலிதாவைப் பார்க்கிறேன். உண்மையைச் சொல்லணும்னா, நான் ஜெயலலிதாவுக்கு ரசிகன் ஆகிட்டேன். இதைச் சொல்றதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை!''