Published:Updated:

காங்கிரஸை கண்டு கருணாநிதி அஞ்சும் காலம் இது: ஜெ.

Vikatan Correspondent

சென்னை, டிச.11,2010

காங்கிரஸை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரஸைக் கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ##~~##

மேலும், தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் தாம் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை:

"கை"யும் கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், தி.மு.க.- காங்கிரஸ் இடையே சிண்டு முடிய தாம் முயற்சிப்பதாக ஒரு புனைசுருட்டு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

"ரோம் நகரம், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீ​ரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதே போல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் கருணாநிதி" என்று கடந்த 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதியிட்ட இரண்டு அறிக்கைகளிலும், நான் குறிப்பிட்டு இருப்பதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ள கருணாநிதி, 6-ம் தேதி அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூட தெரியாமல், 8-ம் தேதி அறிக்கையை தொடங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசு நிவாரண உதவிகளை வழங்காதது குறித்து கடந்த 6-ம் தேதி அன்று தமிழில் அறிக்கை வெளியிட்டேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கடந்த 8-ம் தேதி அன்று ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

கடந்த 8-ம் தேதி அன்று வெளியிட்ட அறிக்கையில் "ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி நீரோ மன்னன்..." என்ற வாசகத்தை மீண்டும் உபயோகப்படுத்தியதற்கு காரணம், தமிழகத்தில் கருணாநிதியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து தமிழ் தெரியாத மற்ற மாநில மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை இந்த தருணத்தில் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதைக்கூட ஒரு முதலமைச்சரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வேதனையளிக்கும் செயல்.

அடுத்தபடியாக, "இந்தி எதிர்ப்புப் போராட்டம்" குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி - அரசியல் பதவிகளை அடைவதற்காக அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதிதான் இன்று ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழினத்தையே அழித்தார். கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு என்பது ஊருக்கு உபதேசம். கருணாநிதியைப்  பொறுத்த வரையில் இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று என்பதெல்லாம் வெளி வேஷம். ஆட்சி அதிகாரத்திற்காக, தன்னுடைய நிலையை காலத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்ளும் தன்மையை உடையவர் கருணாநிதி. கருணாநிதியின் எந்தப் போராட்டத்தையும் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை.

தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கலகம் மூட்டும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத்தான், நான் குறிப்பிட்டு இருந்தேன்.

இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, "ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் ​என்று சொன்னால், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் என்று சொல்லும் போது அ​து எவ்வளவுப் பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? என்று கருணாநிதி பேசியிருக்கிறார்.

கருணாநிதியின் இந்தப் பேச்சு கடந்த 6-ம் தேதி அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது - இதேபோன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடை​பெற்றுவிட்டதாக பத்திரிக்கைகள்தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத்தானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு, அதற்கு "ஒரு சில பத்திரிக்கைகளும், ஒரு சில எதிர்க்கட்சிகாரர்களும்தான், பூதாகரமாக இந்தப் பிரச்னையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவரது வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போய்விட்டதைப் போலவும், அந்த ​​​தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக் கொண்டதைப்போலவும், அதற்காக பாராளுமன்றத்தையே நடத்தவிடமாட்​டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதியின் இந்த கேள்வி பதில் கடந்த 7-ம் தேதி அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது. இதிலிருந்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு மட்டும் பங்கில்லை, மற்றவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை இரண்டு முறை கூறியிருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனால், நேற்றைய அறிக்கையில், "இளைஞன்" திரைப்பட விழாவில், "ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால் அது எவ்வளவு, பெரிய தொகை, அந்த தொகையை ஊழல் செய்து இருக்க முடியுமா என்று, தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடிய பார்ப்பதாகவும், கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்றைய அறிக்கையில், ஒரு உண்மையை கருணாநிதி மறைத்துவிட்டார். அதாவது, நேற்றைய அறிக்கையில், "இளைஞன்" திரைப்பட விழாவில் தான் சொன்ன "ஒருவர்" என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்துவிட்டார் கருணாநிதி - பொய்யும், புளுகும், புனைசுருட்டும் கருணாநிதிக்கு கைவந்த கலை என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசைக் கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.  தி.மு.க. ஆட்சி அழியப் போவதை நினைத்து கருணாநிதி பிதற்றுகிறார். என்னதான் புலம்பினாலும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி வீழ்வது உறுதி," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.